பரம்பிக்குளம் தேக்கடிக்கு வனப்பாதை கேட்டு ஆதிவாசி மக்கள் திடீர் போராட்டம்

பாலக்காடு : பாலக்காடு மாவட்டம் முதலமடையில் இருந்து பரம்பிக்குளம் தேக்கடிக்கு வனப்பாதை அமைக்க கோரி பரம்பிக்குளம் ஆதிவாசி மக்கள், முதலமடை கிராமப்பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் தமிழக எல்லை கோவிந்தாபுரத்தை அடுத்து முதலமடை கிராமப்பஞ்சாயத்து உள்ளது. இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதி பரம்பிக்குளம் மலைக்கிராமம். இங்கு ஏராளமான ஆதிவாசி குடும்பங்கள் வசிக்கின்றன.

இவர்களுக்கு சரியான போக்குவரத்து வசதி இல்லாததால் உணவு பொருட்கள் வாங்குதல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு சேத்துமடை, ஆனைமலை, அம்பராம்பாளையம் வழியாக கோவிந்தாபுரத்தை தாண்டி முதலமடை வர வேண்டியுள்ளது. இதற்கு 60 கி.மீ தொலைவு பயணிக்க வேண்டும். பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று முதலமடையில் இருந்து தேக்கடி வழியாக பரம்பிக்குளம் வரை வனப்பாதை அமைக்கப்படும் என முதலமடை கிராமப்பஞ்சாயத்து மற்றும் மாவட்ட நிர்வாகமும் அறிவித்தது. ஆனால், இப்பணி கிடப்பில் கிடக்கிறது.

இச்சாலையை உடனடியாக அமைக்க உள்ளாட்சி அமைப்பினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி பரம்பிக்குளத்தைச் சேர்ந்த ஆதிவாசி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் முதலமடை கிராம பஞ்சாயத்து அலுவலகம் முன் அமர்ந்து நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து ஆதிவாசியினர் கூறுகையில், ‘வனப்பாதை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லையெனில் கிராமப்பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக குடில் அமைத்து போராட்டம் நடத்தப்படும்’ என்றனர்.

இவர்களது போராட்டத்தை தொடர்ந்து முதலமடை ஊராட்சி அலுவலர், தாசில்தார், பரம்பிக்குளம் ரேஞ்ர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், உங்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
முதலமடை கிராமப்பஞ்சாயத்துத் துணைத் தலைவர் தாஜூதீன் கூறுகையில்,‘பஞ்சாயத்து பள்ளிக்கூட கட்டடங்கள், அடிப்படை வசதிகள் ஆகியவை தேவைகளுக்காக 37 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேக்கடி வனப்பாதை அமைக்க பணிகள் நடந்து வருகிறது’ என்றார்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு