பார்த்தனுக்குப் பாசுபதமருளிய பரமன்

சிவபெருமானிடமிருந்து பாசுபதாத்திரம் பெறுவதற்காக இந்திரகீலமலை எனும் இடத்தில் அர்ச்சுனன் கடுந்தவம் புரிந்தான். அவனது தவம் நெடுநாள் நீடித்தது. அவனது உறுதிப்பாட்டையும், தவ ஆற்றலையும் உலகவர் அறியச் செய்ய சிவபெருமான் உமாதேவியுடன் வேட்டுவத் தம்பதியராய் அவன் தவமியற்றிய கானகம் புகுந்தனர். மூகாசுரன் என்பவனின் முக்திப்பேற்றுக்காக சிவபெருமான் அவனுக்குக் காட்டுப்பன்றி உரு கொடுத்து கானகத்தில் தவமியற்றும் விசயன் முன்பு ஏவினார். பன்றியின் செயல்கள் பார்த்தனின் தவத்தைக் கலைத்தது.

தேவர்கள் வேண்ட அப்பன்றிமீது அர்ச்சுனன் அம்பெய்தினான். அதேநேரத்தில் அப்பன்றியைப் பின்தொடர்ந்து தன் தேவியுடன் வந்த வேடுவனாகிய சிவபெருமானும் பன்றிமீது அம்பு எய்தி அதனை விழச் செய்தார். தானே பன்றியை வீழ்த்தியதாக அர்ச்சுனன் சொல்ல, வேடுவனோ தான் கொன்றதாகச் சாதித்தான். இருவருக்கும் விற்போர் மூண்டது. முடிவில் அர்ச்சுனன் தோல்வியுற்றான்.

நிறைவாக அவனது பக்தியும் ஆற்றலுக்கும் இரங்கி வில், அம்பு, அம்பறாத்தூளி, பாசுபதம் எனும் படைகளை அளித்ததோடு கொடி நெடுந்தேரும் கொடுத்தருளினார். ராஜசிம்ம பல்லவனின் கலைப்படைப்புக்களிலும், சோழர் எடுப்பித்த கோயில்களிலும் பிற்காலக் கலைமரபிலும் இவ்வரலாற்றை சிற்ப வடிவில் மிகச் சிறப்பாகக் காட்டியுள்ளனர். மகாபலிபுரத்தில் உள்ள பாறைச் சிற்பங்கள் வரிசையில் குறிப்பிடத்தக்கது அர்ச்சுனன் தவக்காட்சியாகும்.

பிதுக்கம் பெற்ற இரண்டு முகடுகள் நடுவே சிறிய வெளி, அதில் ஆறு போன்ற உள்வாங்கிய அமைப்பு ஆகியவற்றுடன் திகழும் இயற்கையான பாறை முழுவதும் எழில் மிகுந்த சிற்பங்களை இராஜசிம்ம பல்லவனின் சிற்பிகள் படைத்துள்ளனர். இச்சிற்பத்தின் பின்புலத்தில் காணப்பெறும் சிறிய குன்று முழுவதும் பெய்யும் மழைநீர் நடுவே திகழும் பள்ளத்தின் வழியே பெருக்கெடுத்து கீழே வழியும்.

அந்த இடத்தைத்தான் சிற்பி வானத்திலிருந்து இறங்கும் ஆறாக உருவகப்படுத்தியிருக்கிறான். விண்ணிலே தோன்றி, விசும்பிலே பாய்ந்து பூவுலகில் வீழ்ந்து, பாதாள உலகுக்கு ஊடுருவிச் செல்லும் நதியாக அது காட்சியளிக்கின்றது. அந்நதியிலும், அதன் இருமருங்கும், அதற்கு மேலாக விண்ணகத்திலும் அர்ச்சுனன் தவமியற்றும்போது என்னென்ன காட்சிகள் திகழ்ந்தனவோ அத்தனையையும் பல்லவச் சிற்பிகள் பாங்குறப் படைத்துக் காட்டியுள்ளனர். நடுவே பாய்ந்து வரும் நதி. மேலே வானத்தில் இருமருங்கிலும் சூரியன் சந்திரன் எனும் இருவரும் ஒளி வட்டத்துடன் மிதந்து
செல்கின்றனர்.

அவர்களுக்குக் கீழாக விசும்பிலே கந்தர்வர், இயக்கர், வித்யாதரர் ஆகியோர் உலவுகின்றனர். அதற்குக் கீழாக சித்தர், சாரணர் போன்ற ஆகாச சாரிகள் ஒருபுறம், கின்னரர் கிம்புருடர் போன்றோர் மறுபுறம். வானகத்துக் காட்சிக்குக் கீழாகக் கானகத்துக் காட்சி காணப்பெறுகின்றது. வேடுவர்கள் வில் அம்பு ஆகியவைகளை ஏந்திக்கொண்டு செல்கின்றனர். மரங்கள், உடும்பு, பறவைகள் போன்றவை ஓர்புறம், குரங்கு, முயல், கலைமான், பன்றி, புலி, ஆமை ஆகியவை உலவுகின்றன. நீண்ட தாடி, எலும்பும் தோலுமான இளைத்த உடல் ஆகியவற்றோடு ஒற்றைக் காலில் தவக்கோலத்தில் அர்ச்சுனன், எதிரே சிவபெருமான் நீண்ட சூலத்தையும், மழுவையும் தரித்தவராக அருள் வழங்கும் கோலத்தில் நிற்க அவரருகே வயிற்றில் முகம் பெற்ற பூதகணம் ஒன்று பாசுபதாத்திரத்தைக் கையில் தாங்கிய வண்ணம் நிற்கிறது.

கீழே நதிக்கரையில் சிறிய கோயில், அதனுள் திருமால் உருவம், அருகே அன்றாட அலுவல்களைக் கவனிக்கும் மாந்தர்கள் ஆகியோர் உள்ளனர். இக்காட்சிக்கருகே பெரிய யானைக்கூட்டம் திகழ்கின்றது. பாதாளத்திலிருந்து புறப்படும் நாகர்கள் நதி வழியே மேலே ஏறுகின்றனர். பாதாளம், நிலம், கானகம், ஆறு, வானகம் என அனைத்துக் காட்சிகளும் நம் கண்முன்னே திகழ கடுந்தவம் இயற்றிய அர்ச்சுனன், பாசுபதம் அருள நிற்கும் சிவபெருமான் ஆகியோரை இப்பாறைச் சிற்பம் நமக்குக் காட்டி நிற்கின்றது.

பாசுபதம் அருளுவதற்காகச் சிவபெருமான் வேடனாகச் சென்றது, பன்றியை ஏவியது, பார்த்தனுடன் விற்போர் புரிந்தது ஆகிய காட்சிகள் இங்கு இடம் பெறவில்லை. மகாபலிபுரச் சிற்பக் காட்சி கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வடிக்கப்பெற்றதாகும். மகாபலிபுரத்து பாறைச் சிற்பங்கள் வடிப்பதற்குக் காரணமாகத் திகழ்ந்த இராஜசிம்ம பல்லவன் காஞ்சிபுரத்தில் எடுத்த கயிலாச நாதர் கோயிலில் பன்றியைத் துரத்திய வண்ணம் கிராதனாக வந்த சிவபெருமானுக்கும் அர்ச்சுனனுக்கும் இடையே நிகழ்ந்த விற்போர் காட்சியினை உயிரோட்டத்தோடு படைத்துள்ளான். கிராதார்ஜுனீயம் எனும் இக்கதையின் ஒரு பகுதி மாமல்லையிலும், ஒரு பகுதி காஞ்சியிலும் திகழ்வது கொண்டு நோக்கும்போது இவ்வரலாறு மக்களிடம் நன்கு வழங்கப்பட்ட ஒன்று என்பது புலப்படுகின்றது.

சோழர் காலச் சிற்பங்களிலும் கிராதார்ஜுனீயம் சிறப்பிடம் பெற்றது என்பதனைத் தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழேச்சரம், தாராசுரம் திருக்கோயில் ஆகிய இடங்களில் காணப்பெறும் சிற்பத் தொகுப்புகள் வாயிலாக அறியலாம். தஞ்சாவூர்ப் பெரிய கோயில் எனும் இராஜ ராஜேச்சரத்தின் இரண்டாம் கோபுரமான ராஜராஜன் திருவாயில் உபபீடத்தின் பக்கவாட்டில் கிராதார்ஜுனீயம் கதை முழுவதும் சிற்பங்களாகக் காட்டப்பெற்றுள்ளது. கதைப்போக்கு கீழிருந்து மேலாகச் செல்கிறது.

பன்றி, அதனை விரட்டும் நாய்கள், புலிகள், சிவகணங்கள் ஓர் வரிசையில் திகழ, மேல் வரிசையில் தலைக்கு மேல் கை உயர்த்திய நிலையில் ஒற்றைக் காலில் நின்றுகொண்டு அர்ச்சுனன் தவம்
இயற்றுகிறான். அவனுக்கு மேலாக சிவபெருமான் வேடுவனாக வில்லேந்தியவாறு செல்ல, குழந்தை முருகனைத் தோளில் சுமந்தவாறு தேவி வேட்டுவப்பெண்ணாகப் பின்செல்கிறாள். முருகனை இடுப்பில் தூக்கியவாறு உமாதேவி நிற்க அவள் முன்பு கிராதனாக இருக்கும் சிவபெருமானும் அர்ச்சுனனும் விற்போர் புரிகின்றனர்.

விற்போர் காட்சிக்கு மேலாக சிவபெருமானும், தேவியும் ஒய்யாரமாக அமர்ந்திருக்க எதிரே அர்ச்சுனன் கை கூப்பியவாறு நிற்கிறான். இவர்களுக்கிடையே குள்ள பூதமொன்று பாசுபதாத்திரத்தைக் கையில் தாங்கி நிற்கிறது. அருகே இரண்டு வரிசையில் நான்முகன், திருமால், நாரதர், மற்ற தேவர்கள் நின்றவண்ணம் கையுயர்த்திப் போற்றுகின்றனர்.இவ்வாறு பல்லவ சோழ சிற்பங்களில் பார்த்தனுக்கு பாசுபதமருளிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

Related posts

கேட்டதை அளிக்கும் நாமம்

ஸ்ரீவித்யா ராஜகோபாலனின் திருவடித் தாமரைகளில் அமரும் வண்டு!

வாழ்வின் உச்சியை எட்ட உச்சிப்பிள்ளையார்