பரமக்குடி அருகே மர்மக்கும்பல் வழிமறித்து தாக்கியதாக உ.பி பெண் சாமியார் பொய் புகார் அளித்தது விசாரணையில் அம்பலம்

பரமக்குடி : மர்மக் கும்பல் தாக்கியதாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் சாமியார் கொடுத்த புகார் பொய்யானது என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் சாமியார் ஷிப்ரா பதக் (39). இவர், தனது தந்தை, சகோதரர் உள்ளிட்ட ஆறு பேருடன் அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பாதயாத்திரை புறப்பட்டார். இவர்கள் கடந்த 8ம் தேதி பரமக்குடி வந்து பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வு எடுத்தனர்.

பின்னர் 9ம் தேதி ராமேஸ்வரம் நோக்கி பாதயாத்திரை கிளம்பிச் சென்றனர். அப்போது, பரமக்குடி அருகே அரியனேந்தல் பகுதியில் 6 பேர் கும்பல் வழிமறித்து, ‘ராமர் தமிழகத்தில் இருக்கிறாரா’ என கேள்வி எழுப்பி தாக்குதல் நடத்தி, கார் கண்ணாடியை உடைத்ததாக உச்சிப்புளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் பரமக்குடி டிஎஸ்பி நரேஷ் (பொ) தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் ஷிப்ரா பதக் கொடுத்த புகாரில் உண்மை இல்லை என தெரிய வந்தது. தாக்குதல் சம்பவம் எதுவுமே நடைபெறாத நிலையில், இவர்களே கார் கண்ணாடியை உடைத்ததாகவும் தெரிகிறது. பெண் சாமியார் எதற்காக பொய் புகார் கொடுத்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பெண் சாமியார் மற்றும் அவருடன் வந்தவர்களை அழைத்து விசாரணை செய்யவும் போலீசார் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

Related posts

டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நீர்வீழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி: 3 பேர் மாயம்

18 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்