Thursday, September 19, 2024
Home » பாரளந்த பெருமானின் புகழ்பாடும் புரட்டாசி!

பாரளந்த பெருமானின் புகழ்பாடும் புரட்டாசி!

by Nithya

மாதங்கள் பன்னிரண்டானாலும், புரட்டாசி மாதத்திற்கென்று தனி, தெய்வீகப் பெருமை உண்டு. இதுவரை தனது ஆட்சி வீடான சிம்ம ராசியில் வலம் வந்த சூரியன், “வித்யாகாரகர்” எனப் போற்றப்படும் புதனின் ஆட்சி ராசியான , “கன்னி”க்கு மாறி, அந்த வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தையே, “புரட்டாசி” மாதம் என பக்தியுடன் பூஜித்துவருகிறோம். ஒவ்வோர் வீட்டிலும் விரதமிருந்து, மாவிளக்கேற்றி, திருவேங்கடத்து இன்னமுதனான ÿவெங்கடேசப் பெருமானை வீட்டில் எழுந்தருளச் செய்து, பூஜித்து வருகிறோம். அப்போது அனைவரும் மனம் நிறைந்த பக்தியுடன் எழுப்பும், “கோவிந்தா… கோவிந்தா…!” எனும் ஒலி அதிகாலையிலேயே, நம்மை துயிலெழுப்பும். வீடுதோறும் மங்கையர் நீராடி, ஆடையுடுத்தி, தெருவெங்கும் மங்கலக் கோலமிட்டு, பூஜை அறையில் திருவிளக்கு ஏற்றிவைத்து, முன்னோர்களைப் பூஜிக்கும் அழகு தரும் அமைதியை நினைத்தாலேயே மெய் சிலிர்க்கும்!

ஆத்ம, பித்ரு காரகரான சூரியன், வித்யா ஔஷத (மருந்துகள்) காரகரான, புதனின் ராசியில் சஞ்சரிக்கும் மாதத்தில் மக்களின் ஆரோக்கியம், மனத் தெளிவு, கல்வி, அறிவுத்திறன், மருத்துவ சிகிச்சையில் நிபுணத்துவம் ஆகியவை சிறந்த முன்னேற்றம் அடையும் எனக் கூறுகிறது மிகப் பழைமையான, “சூரிய சித்தாந்தம்”, மற்றும் “பூர்வ பாராசர்யம்” ஆகிய வானியல் ஜோதிட நூல்கள்!

பித்ருக்களுடன் தொடர்பு….!

இத்தகைய பெருைமயுடன் திகழும் புரட்டாசி மாதத்தில்தான் ஈடிணையற்ற “மஹாளய பட்சம்” எனவும், “பித்ரு பட்சம்” எனவும் ஏராளமான மக்கள் விரதமிருந்து, மறைந்த முன்னோர்களை வீட்டிற்கு வரவழைத்து, பாத பூஜை செய்யும் 15 புனித – புண்ணிய நாட்களும் இப்புரட்டாசி மாதத்தில்தான் அனுஷ்டிக்கப்படுகிறது.

“மஹாளயபட்சம்” எனும் இந்த 15 நாட்களுக்கும் இணையான புண்ணிய தினம் வேறு எதுவும் கிடையாது. இந்த 15 நாட்களிலும், பித்ருக்கள் (மறைந்த நமது மூதாதையர்கள்) சூரியன் மற்றும் தர்மராஜரின் அனுமதி பெற்று, சூரியனின் கிரணங்களின் மூலம் சுவர்ண (தங்கம்) மயமான விமானங்களின் மூலம் நமது கிரஹங்களுக்கு (வீடுகளுக்கு) வந்து, நம்முடன் தங்கி, தங்கள் தவவலிமையினால், நமது துன்பங்கள்அனைத்தையும் நீக்கி, நமக்கு நல்வாழ்வருளி, மகாளய அமாவாசையன்று அதே சூரிய கிரணங்களின் மூலம் தங்கள் உலகத்திற்குத் திரும்பிச் செல்வதாக, சூட்சும கிரந்தங்கள் விவரித்துள்ளன.

ஆதலால், அப்பெரியோர்கள், நம்முடன் தங்கியிருக்கும் அந்த 15 நாட்களும், நமது வீடுகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உறவினர்களுக்குள் வாக்குவாதம் எதுவும் கூடாது, பக்தி – சிரத்தையுடன் இருக்க வேண்டும். அவரவர் வசதிக்கு ஏற்ப, மஹாளய அமாவாசை தினத்தன்று சமுத்திரத்திலோ அல்லது புண்ணிய நதிகளிலோ, புஷ்கரணியிலோ ஸ்நானம் செய்து தர்ப்பணம் செய்ய வேண்டும். குடும்பம், அளவற்ற நன்மைகளைப் பெறும். கடன் தொல்லைகள், உடல் உபாதைகள், ஒற்றுமைக் குறைவு, உத்தியோகத்தில் திருப்தியின்மை ஆகியவை பகலவனைக் கண்ட பனிபோல் விலகும்.

இத்தகைய தன்னிகரற்ற புரட்டாசி மஹாளய பட்சத்தின் விசேஷ நாட்களைப் பார்ப்போமா!

புரட்டாசி 1 (17-9-2024): ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு உகந்த, அவர் அவதரித்த வளர்பிறை சதுர்த்தசி திதியாகும். இந்நன்னாளில் ÿலட்சுமி நரசிம்மரை துளசியினால் அர்ச்சித்தால், எதிரிகளற்ற உங்கள் நல்வாழ்வை, முன்னேற்றத்தைக் கண்டு பொறாமையுற்ற மனிதர்களிடம் இருந்து உங்களை தாக்காவண்ணம், காத்தருள்வார். மேலும், இன்று அனந்த விரதம். தம்பதி சமேதயராய் (கணவன் – மனைவி) இருவரும் இணைந்து செய்ய வேண்டிய பூைஜ இன்றைய தினத்தில் ஸ்ரீஅனந்த பத்மநாப ஸ்வாமியை, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து ஒரு துளசி தளத்தைச் சமர்ப்பித்தால் போதும். சகல சௌபாக்கியங்களும் உங்களை வந்தடைவது திண்ணம். மனத்திற்கு ஆதிபத்தியம் கொண்டவன் சந்திரன்.

அதனால்தான் அவனை மனோகாரகன் என்கிறோம். பௌர்ணமி நன்னாளில் மனமானது சஞ்சலத்திற்கு ஆட்கொள்ளும். இந்நாளில் மனநிலை சரியில்லாதவர்கள் மனதளவிலும், உடலளவில் பாதிப்பிற்குள்ளாகின்றார்கள். சந்திரனின் அதி தேவதை நீர்நிலைகள். அதனால்தான், சமுத்திரத்தில் பெரும் அலைகள் எழும்பும். இன்றைய தினமாகிய பௌர்ணமியன்று உபவாசமிருந்து, மாலை நேரத்தில் சந்திரனைத் தரிசித்த பின்னர் ஸ்ரீசத்ய நாராயண பூஜை செய்தால், பக்தர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நல்லபடி நிறைவேற்றித் தருவதாக சத்திய ப்ரமாணமே செய்ததினால்தான் இவ்விரதத்திற்கு சத்ய நாராயண விரதம் எனப் பெயர்காரணமாயிற்று. இன்றைய தினம் உபவாசமிருந்து பூஜை செய்வது மகத்தான புண்ணிய பலன்களைத் தரவல்லது.

புரட்டாசி 2 (18-9-2024): வேத வேதாந்தங்களில் சிறந்து விளங்கி, சமஸ்கிருதத்தில் புலமையும், அத்வைத சித்தாந்தத்தில் பாண்டியத்துவமும் பெற்று, “துர்க்கா சந்திரகலா ஸ்துதி” முதற்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட வியாக்கியானங்களை உள்ளடக்கிய நூல்களை எழுதியவரும், நடமாடும் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடப்படும் காஞ்சி மகாப்பெரியவாளின் திருவாக்கினாலேயே சிலாகித்துக் கூறப்படுபவருமான, ஞான மகா சமுத்திரமாக விளங்கிய மகான் ஸ்ரீஅப்பய்ய தீட்சிதரின் திருஅவதாரப் புண்ணிய தினம். அவர், தன்னைக் காணவரும் அனைவருக்கும் தன்னுடைய இடது ஹஸ்தத்தினால் மட்டுமே ஆசி வழங்குவது வழக்கம்.

இதனைக் கண்ணுற்ற அரசன் சற்றே முகஞ்சுளிப்பதைக் கண்ட தீட்சிதர், “வேதம் ஓதுபவர்கள், நித்ய அக்னி ஹோத்ரிகளின் வலது உள்ளங்கையில் அக்னி பகவான் நித்யவாஸம் செய்வதாக வேத இதிஹாஸ புராணங்களின் கூற்று… எனது வலது கையினால் ஆசீர்வதித்தால் ஆசி பெறுபவர் பஸ்மம் ஆவார்!” எனக் கூறியும், மன்னர் சமாதானமடையாததை உணர்ந்த தீட்சிதர், ஒரு துணியில் அரசரின் உருவப் படத்தை ஓவியமாகத் தீட்டச் செய்து கொண்டுவரச் செய்தார், தன்னுடைய வலது திருக்கரத்தினால் அட்சதையை எடுத்து, ஓவியத்தின் மீது தூவி ஆசீர்வதித்ததுதான் தாமதம், அந்த ஓவியம் தீப்பற்றி எரிந்ததைக் கண்ட அரசன் தன் தவற்றை உணர்ந்து, தீட்சிதரின் திருவடித் தாமரைகளில் தன் சிரஸைவைத்து, இருகரம் கூப்பி வணங்கி நின்றான்!!

மற்றொரு சமயம், அரசனும், தீட்சிதரும் ேக்ஷத்ராடனம் செய்யும் போது ஒரு கோயிலில் தர்ம சாஸ்தாவின் விக்கிரகம் கன்னத்தில் கை வைத்தவாறு, சோகத்துடன் இருப்பதைக் கண்டு திகைத்த, அரசன், “அனைத்து ஆலயங்களிலும், ÿதர்ம சாஸ்தா, யோக நிலையில்தான் இருப்பார்.

இதுபோன்ற யோசனையில் ஆழ்ந்த கவலையில் மூழ்கினாற் போன்ற தோற்றமுடைய சிலையை, யாம் இதுவரை கண்டதில்லை!! இதன் காரணம் என்னவாக இருக்கும்…?”என அவ்வூர் பெரியவரிடம் விசாரிக்கையில், அவரும், “இச்சிலையைக் கொணர்ந்து கொடுத்தவர், “இவ்வூருக்கு ஒரு மகான் எழுந்தருள்வார், அவர் இதற்கான காரணத்தைச் சொல்வார்…

அந்தப் பதில் சரியாக இருக்கும்பட்சத்தில் சாஸ்தாவின் கரங்கள் யோக முத்திரைக்கு மாறிவிடும்” எனக் கூறக் கேட்ட அரசன், அப்பய்ய தீட்சிதரைப் பார்க்க, அவரும் அற்புதமான பாடல் ஒன்றைப் பாடியவுடனேயே அனைவரும் வியக்கும் வண்ணம் சாஸ்தாவின் திருவுருவச் சிலையின் கன்னத்திலிருந்த திருக்கரங்கள் யோக முத்திரைக்குத் திரும்பிய காட்சி, தீட்சிதருடைய வார்த்தைகளை மெய்ப்பித்து, ஆமோதித்தது போலிருந்தது.

அந்தப் பாடலின் பொருள்: திருப்பாற்கடலினைக் கடைந்தபோது உண்டான அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டுமே கொடுக்கவேண்டும் என எண்ணிய ÿமகாவிஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்தார். அவ்வடிவழகைக் காண விழைந்த ஸ்ரீசிவபெருமான் அவ்விடத்திற்கு எழுந்தருளியபோது, ÿதர்ம சாஸ்தா அவதரித்தார். இக்காட்சிகளை வர்ணித்த தீட்சிதர், சிவபெருமானை தந்தை என அழைப்பேன்! என்னை ஈன்றெடுத்த திருமாலை அன்னை என அழைப்பேன்.

அவரது திருமார்பை அலங்கரித்து, “அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறைமார்பா!” என்று வீற்றிருக்கும் மகாலட்சுமியை என்னவென்று அழைப்பேன்! -என்ற யோசனை கலந்த முகவாட்டத்துடன் கன்னத்தில் கைவைத்தவாறு, ஸ்ரீதர்ம சாஸ்தா வீற்றிருப்பதாக பாடினார்.

இன்றைய தினத்தில் ஸ்ரீஅப்பைய்ய தீக்ஷிதரை மனத்தளவில் பூஜித்து, உங்கள் பூஜையறையில் இரு நெய் தீபங்கள் ஏற்றி வணங்கினீர்களேயானால், சந்ததியினர் புத்திஹீனமற்ற, ஸத்புத்திரர்களாய், ஒர் இருண்ட அறைக்கு ஒளிவீசும் விளக்கைப்போல, அறிவுஜீவிகளாய், சந்தான, புத்திரர்கள் பிறந்து உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் நற்பெயரைக் சம்பாதித்துக்கொடுப்பார்கள். இதை அனுபவத்தில் காண்பீர்கள்.

புரட்டாசி 2 (18-9-2024): மஹாளயபட்சம் ஆரம்பம்.

புரட்டாசி17 (3-10-2024): மஹாளயபட்சம் முடிவு. சம்புகாஷ்டமி புத்தி கூர்மையுடன் கூடிய நீண்ட ஆயுளையும், பெற்று வளர்த்து, சீராட்டி, பாலூட்டி, தாலாட்டி வளர்த்த தாய் தந்தையருக்கு ஆற்றவேண்டிய கடமைகளை மறந்ததுமட்டுமல்லாது, அவர்களது மனம் நோகச் செய்வதுடன், தெரிந்தோ அல்லது தெரியாமலோ அவர்களுக்குப் பல அபவாதங்களும் செய்திட்ட மகா பாதகங்களும் விலகி, தாய், தந்தையர் மனங்குளிர்ந்து, அன்பும் அரவணைப்பையும் பன்மடங்காகப் பெருக்கி, அவர்களின் ஆசியுடன் நல்வாழ்வு அமைந்து, அைனவரின் பாராட்டுதல்களையும் பெற்றுத் தந்திடும்.

புரட்டாசி 9 (25-9-2024): மத்யாஷ்டமி

புரட்டாசி 11 (27-9-2024) : வெண்முத்து, மல்லிகை, முல்லை, வெண்தாமரை, வெண்பனி மேகங்களையொத்த நிறத்தையுடையவனும், சகல கலைகளுக்கும் மெல்லிசைக்கும், வெள்ளித்திரைக்கும் காரகத்துவம் வாய்ந்தவனும், ஒரு கன்னியின் ஜாதகத்தில் இளமைக் காலத்தில் இவருடைய நடப்பு தசை இருந்தால், அக்கன்னிகை மேனகையாக, ரம்பையாக, ஊர்வசியாக, திலோத்தைமையாக பிரகாசிப்பவளாகவும், ஆணின் ஜாதகத்தில் இளமைக் காலத்தில் இவருடைய நடப்பு தசை அமைந்தால்,அனைத்துவித சுகங்களையும் அனுபவிக்கத் தகுதியானவனாகவும்,சுக்கிர யோக பலன் இருந்தால், இத்தரணியில் நினைத்த மாத்திரத்தில் நினைத்த சுகங்களை அருளும் தன்மையுடையோனும், பரணி, பூரம், பூராடம் மூன்று நட்சத்திரங்களுக்கும்ஆதிபத்தியம் கொண்டவனாகவும், ரிஷபராசி, துலாராசிகளுக்கு சொந்த வீடாகவும், மீனம் உச்சவீடாகவும், கன்னி நீச்ச வீடாகவும், சனி பகவானும், புதனும் நட்புக் கிரகங்களாகவும், செவ்வாயும், குருவும் சமநோக்குடையவர்களாகவும் ஏனைய அனைத்து கிரகங்களும் பகைக் கிரகங்களாகவும், பஞ்சபூதங்களில் நீராகவும் நீர் நிலைகளில் சஞ்சரிப்பவனாகவும், வெள்ளி என்றழைக்கப்படுபவனுமாகிய, சுக்கிர ஜெயந்தி! இன்றைய தினத்தில் நவக்கிரக சந்நதியில் வீற்றிருக்கும் சுக்கிரனுக்கு, மூன்று மண் அகல் விளக்குகளில் பசு நெய் தீபம் ஏற்றிவைத்து, வெண்பட்டாடை அணிவித்து, மல்லிகை, முல்லை, வெண்தாமரை, வெண் சம்பங்கி இதில் ஏதாவதொரு மலர்கொண்டு பூஜித்து, வணங்கினால், வாழ்வில் சகலவித ேக்ஷமங்களையும் அருளுபவனும், உங்கள் ஜாதகத்தில் சுக்கிர தோஷம், ஏதும் இருந்தால் அது விலகும். நிகரில்லா சந்தோஷத்தைப் பெற்று, மகிழ்ச்சியுடன்கூடிய, மன நிறைவோடு வாழ்வீர்கள்.

புரட்டாசி 13 (29-9-2024) : ஸன்யாஸ்த்த மஹாளயம்

புரட்டாசி 14 (30-9-2024) : கஜச் சாயை பிரதோஷம், மாத சிவராத்திரி,

புரட்டாசி 15 (1-10-2024): ஸஸ்த்திர ஸ்ரீகிருஷ்ண அங்காரக சதுர்த்தசி யம தர்ம ராஜரைப் பூஜிக்கவேண்டிய மகத்தான புண்ணிய தினம்.

புரட்டாசி 16 (2-10-2024): மகாளய அமாவாசை. பித்ருக்களைப் பூஜித்து, அவரவர்களது உலகங்களுக்கு வழியனுப்ப ேவண்டிய மகத்தான புண்ணிய தினம். இன்றைய தினத்தில் புண்ணிய நதிகளிலும், சமுத்திரத்திலும், புஷ்கரணிகளிலும் நீராடுதல் விசேஷம். அனைத்து பாவங்களும் நீங்கும். குடும்பத்தில் சுபீட்சம் பெருகும்.

புரட்டாசி 17 (3-10-2024): நவராத்திரி ஆரம்பம். மூன்று தெய்வீக அன்னையரான ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ பராசக்தி, ஸ்ரீ சரஸ்வதி ஆகியோரைப் பூஜிக்க வேண்டிய ஒன்பது புண்ணிய தினம். மேலும் இன்றைய தினத்தில் கோ பூஜை செய்தல் மிகுந்த புண்ணிய பலனைத் தரவல்லது. ஒரு கைப்பிடி பசும்புல், அகத்திக்கீரை கொடுத்து வணங்குவது, அபரிமிதமான புண்ணிய பலன்களை அள்ளிக் கொடுக்கக்கூடிய தினம்.

புரட்டாசி 18 (4-10-2024: மனோகாரகராகிய சந்திரனை (முழுநிலவை) இன்று தரிசிப்பது, ஒருரின் ஜாதகத்தில் சந்திரனால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி, நல்வாழ்வு நல்கிடுவார், சந்திர பகவான்.

புரட்டாசி 19 (5-10-2024): ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அவதரித்த ஸ்வாதி நட்சத்திரம். இன்றைய தினத்தில், ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு துளசி தளத்தினால் அர்ச்சித்துவிட்டு, பானகம் நைவேத்தியம் செய்வித்தால், சகலவித நன்மைகளும் உங்களை வந்தடைவது திண்ணம்.

புரட்டாசி 22 (8-10-2024): சஷ்டி விரதம். ஸ்ரீ முருகப் பெருமானை விரதம் இருந்து பூஜிக்கவேண்டிய புனித தினம்.

புரட்டாசி 23 (9-10-2024): சரஸ்வதி ஆவாஹனம்.

புரட்டாசி 24 (10-10-2024) : துர்க்காஷ்டமி. அம்பிகை துர்க்கையை பூஜிக்க, தேவி பாகவதம் படித்தல் – கேட்டல், சண்டி ஹோமம் செய்ய வேண்டிய புண்ணிய தினம். கடன் தொல்லைகள் நீங்கும். கொடிய வியாதிகளும் குணமடையும்.

புரட்டாசி 25 (11-10-2024): சரஸ்வதி பூஜை. ஆயுத பூஜை, மகா நவமி.

புரட்டாசி 26 (12-10-2024): மத்வ சித்தாந்த மகான் ஸ்ரீ மத்வாச்சாரியார் அவதார தினம். மேலும், இன்று சிரவண விரதம்.

புரட்டாசி 29 (15-10-2024) : பிரதோஷம். இன்றைய தினத்தில் பகலில் உபவாசமிருந்து, பிரதோஷகாலமாகிய மாலை நேரத்தில் ஸ்ரீ சாம்ப சிவ மூர்த்தியை, ரிஷபாரூடராக தரிசனம் செய்தால், கடன் தொல்லைகளற்ற வாழ்வும், உடலில் ரோகமற்ற ஆரோக்கியமான தீர்க்காயுளுடன் கூடிய உடல்வனப்பையும் பெற்றுத் திகழ்வர்.

புரட்டாசி 30 (16-10-2024): கௌமதி ஜாகர விரதம் – முழு பொளர்ணமி நன்னாளின் இரவு முழுவதும் விழித்திருந்து ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்ரத்தை தாமரை இதழ்களைக் கொண்டு பூஜித்தால், லட்சுமி கடாட்சத்தைப் பெறுவதுமட்டுமல்லாது, பல தலைமுறைக்கு, நீங்காத செல்வமாக உங்கள் வீட்டில் நிறைந்திருந்து, மஹாலட்சுமி உங்கள் வீட்டில் நித்தியவாஸம் புரிந்திடுவாள்.

You may also like

Leave a Comment

one × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi