பதறும் பா.ஜ

ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தியா கூட்டணி வலுவடைந்து கொண்டே வருவதும், தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதும் ஒன்றியத்தில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜவை பதற வைத்துள்ளது அப்பட்டமாக தெரிகிறது. அதனால் தான் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மார்ச் 2ம் தேதி 195 வேட்பாளர் பட்டியலை திடீரென வெளியிட்டு, தேர்தலுக்கு முன்கூட்டியே தயாராக இருப்பது போல் காட்டிக்கொண்டது பா.ஜ. ஆனால் உண்மையில்?. மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் சரியான கூட்டணி அமையாமல், பேச்சுவார்த்தைகளில் இழுபறி நீடிப்பதால், அதை மறைப்பதற்காகத்தான் இந்த முதல் பட்டியல்.

உபியில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. அதை பலவீனப்படுத்த விவசாய சங்கங்களின் ஆதரவு பெற்ற ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியை தொகுதி பங்கீடு முடிந்த பிறகும் கூட பிரித்து, இழுத்து பா.ஜ கூட்டணிக்குள் இணைத்து உள்ளது. அதற்கு உபயம் முன்னாள் பிரதமர் சரண்சிங்கிற்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா. பஞ்சாப் மாநிலத்தில் 13 தொகுதிகள் உள்ளன. அங்கு சிரோண்மணி அகாலி தளம் கட்சியின் வரவுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறது பா.ஜ. மகாராஷ்டிராவில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை உடைத்து சின்னம், கட்சியின் உண்மையான பெயரை தங்கள் கூட்டணியில் உள்ள அஜித்பவார், ஏக்நாத் ஷிண்டேவுக்கு வழங்கி விட்டது பா.ஜ. உபயம் தேர்தல் ஆணையம். ஆனாலும் அங்குள்ள 48 தொகுதிகளுக்கும் இன்னும் தொகுதி பங்கீடு முடியவில்லை. ஷிண்டேவும், அஜித்பவாரும் விட்டுக்கொடுக்க தயாரில்லை.

40 தொகுதிகள் கொண்ட பீகார் மாநிலத்திலும் இதே நிலை தான். இந்தியா கூட்டணியையே உருவாக்கிய நிதிஷ்குமாரை பிரித்து தன்னுடன் இணைந்துக்கொண்டது பா.ஜ. ஆனால் இன்று வரை அங்கு தொகுதி பங்கீடு முடியவில்லை. தமிழ்நாட்டில் ஜிகே வாசன், பாரிவேந்தர், ஜாண்பாண்டியன் போன்றோர் தலைமையிலான கட்சிகள் தவிர முக்கிய கட்சிகள் யாரும் பா.ஜ பக்கம் தலையை திருப்பிப்பார்க்க கூட தயாரில்லை. ஆந்திராவில் சட்டப்பேரவைக்கும், மக்களவைக்கும் தொகுதிகளை ஒதுக்கி வைத்து விட்டு பா.ஜ வரவுக்காக இலவுகாத்த கிளியாக காத்திருக்கிறார் சந்திரபாபுநாயுடு. ஆனால் ஜெகன்மோகன் வருத்தப்படுவார் என்பதால் இன்னும் முடிவு அறிவிக்கவில்லை பா.ஜ. தெலங்கானா, கேரளாவில் பா.ஜ நிலை அவர்களுக்கே தெரியும்.

இந்தி பேசும் மாநிலங்கள் தவிர அத்தனை மாநிலங்களிலும் கூட்டணி அமைக்க படாதபாடு படுகிறது பா.ஜ. இதை வெளியே தெரியாமல் மறைக்கத்தான் முதல் பட்டியல். அதிலும் பலர் நாங்கள் போட்டியிட விரும்பவில்லை என்று ஓட்டம் பிடித்து உள்ளனர். பா.ஜ தலைமையே சீட் கொடுத்தும் குஜராத் முன்னாள் துணை முதல்வர் நிதின்பட்டேல் போட்டியிட மறுத்துவிட்டார். அந்தவரிசையில் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை இப்போது வரை 3ஆக உயர்ந்து விட்டது. இன்னும் குஜராத், மபி, உபி, ராஜஸ்தான் மாநிலங்களில் கூட பலம் வாய்ந்த காங்கிரஸ் தலைவர்களை மிரட்டி கட்சியில் சேர்க்கும் பணியை செய்து வருகிறது பா.ஜ. இந்த பலவீனங்களை மறைக்கத்தான் பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் பேசிய பேச்சை சர்ச்சையாக்கி மோடியின் குடும்பம் என்ற பிரசாரத்தை பா.ஜ முன்னெடுத்து இருக்கிறது. இதையெல்லாம் செய்து மறைக்க முயன்றாலும் பா.ஜ பதறுவது மட்டும் மக்கள் மத்தியில் பளிச்சென்று தெரிகிறது.

Related posts

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.