சர்வதேச கவனம் ஈர்க்கும் கம்பம் பன்னீர் திராட்சை!

தமிழகத்தின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதி களில் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கும் ஒன்று. திரும்பும் திசையெங்கும் திராட்சை பந்தல்கள் கண்ணுக்கு விருந்தளிக்கும். வாழை, பீன்ஸ், அவரை போன்ற பயிர்களும் செழித்து வளர்ந்து கம்பத்தின் வயல்வெளிகள் பச்சைப் பசேலென காட்சியளிக்கும். இதற்கிடையே சுருளி அருவியின் சாரல் நம் இதயத்தை ஈரமாக்கும். இத்தகைய அழகு கொஞ்சும் பகுதியில் விளையும் பன்னீர் திராட்சை இந்திய அளவில் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. திராட்சை ஏற்றுமதியில் தனி முத்திரை பதித்து வரும் மகாராஷ்டிரத்தில் ஆண்டுக்கு ஒருமுறைதான் திராட்சையில் மகசூல் பார்க்க முடிகிறது. ஆனால் கம்பம் பள்ளத்தாக்கில் ஆண்டுக்கு 3 முறை மகசூல் எடுக்கிறார்கள். தொடர்ந்து ஏதாவதொரு தோட்டத்தில் திராட்சை அறுவடை நடப்பதால் சர்வதேச அளவில் ஆண்டு முழுக்க திராட்சை கிடைக்கும் பகுதி என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது கம்பம் பள்ளதாக்கு. இத்தகைய பெருமை மிக்க கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 40 ஆண்டு களாக பன்னீர் திராட்சை சாகுபடி செய்து வரும் சுருளியைப்பட்டியைச் சேர்ந்த முன்னோடி விவசாயியும், பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத் தலைவருமான பொன்.காட்சிக்கண்ணனைச் சந்தித்தோம்.

“தேனி மாவட்டத்தில் வாழை, திராட்சை, தென்னை, நெல் ஆகியவை அதிகளவில் பயிரிடப்படுகிறது. இந்த மாவட்டம் இந்திய அளவில் வாழைக்கு பேர் போன மாவட்டமாக இருக்கிறது. உலக அளவில் பன்னீர் திராட்சைக்கு பேர்போன மாவட்டமாக இருக்கிறது. உலக அளவிலேயே ஆண்டுக்கு ஒருமுறை மட்டும்தான் திராட்சை மகசூல் கிடைக்கிறது. ஆனால் கம்பம் பள்ளத்தாக்கில் கருப்பு பன்னீர் திராட்சையை ஆண்டுக்கு மூன்று முறை மகசூல் எடுக்கிறோம்’’ என தங்களின் மாவட்டத்தின் பெருமையோடு பேச ஆரம்பித்த காட்சிக்கண்ணன் திராட்சை சாகுபடி குறித்து விளக்கத் தொடங்கினார். “ திராட்சை சாகுபடிக்காக பந்தல் அமைத்து, செடி வைத்தால் ஆண்டுக்கணக்கில் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். முதல் முறையாக சாகுபடி செய்யத்தொடங்கும்போது நிலத்தை நன்றாக உழவு செய்து, ஜேசிபி மூலம் நிலம் முழுவதும் 3 அடி ஆழத்திற்கு குழியெடுத்து, அதில் குப்பை எரு மற்றும் மண் கொண்டு மூடி செடிகளை நடவு செய்தோம்.

இப்போது நிலத்தில் ஒரு அடி ஆழம், ஒன்றரை அடி அகலம் கொண்ட குழியெடுத்து திராட்சை நாற்றுகளை நடவுசெய்கிறோம். முதன்முதலில் சாகுபடி செய்தபோது செடிகளை நேரடி பதியமாக வைத்தோம். 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஏக்கருக்கு 100 செடி (26 அடிக்கு ஒரு செடி) வைத்தோம். பின்பு 250 செடி, 400 செடி என இடைவெளிகளைக் குறைத்து நட்டோம். தற்போது அடர் நடவுமுறை வந்த பின்பு (ரூட்சாட்) ஒட்டுக்கட்டும் செடிகளை ஏக்கருக்கு 800 முதல் 1000 செடிகள் வரை நடவு செய்கிறோம். அடர் நடவு முறையில் கொடிகளை அதிகமாக படர விடாமல், குறைந்த இடத்தில் பரவச்செய்கிறோம். இவ்வாறு செய்யும்போது நாம் கொடுக்கும் இடுபொருட்களை நன்றாக கிரகித்து நோய் எதிர்ப்புத்தன்மையைப் பெறுகின்றன. இதனால் திராட்சை சாகுபடியில் அடர் நடவுமுறை சிறந்ததாக இருக்கிறது. நடவுக்குழியில் எரு மற்றும் மண்ணை நிரப்பி செடிகளை நடவு செய்வோம். இப்போது மகாராஷ்டிராவில் கொண்டுவரப்பட்ட ஒட்டுக்கட்டப்பட்ட செடிகளைப் பயன்படுத்துகிறோம். செடிகளை நேரடியாக வாங்குவதால் செலவு அதிகமாக ஆகிறது. இதனால் நாங்களே இப்போது ஒட்டு கட்டுகிறோம்.

தாய்ச்செடிகளை நடவு செய்துவிட்டு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாசனம் செய்வோம். இப்போது அனைத்து தோட்டங்களிலும் சொட்டுநீர்ப் பாசனம்தான். 1 மாதம் கழித்து வாரம் 2 முறை பாசனம் செய்வோம். 3 மாதங்கள் வளர்ந்த செடிகளில் மழையில்லாத சமயங்களில் ஒட்டுக்கட்டுவோம். மழை சமயங்களில் ஒட்டு கட்டினால் செவட்டை நோய் வரும். 3 மாதங்களில் 3 அடிக்கு செடி வளர்ந்திருக்கும். அப்போது தரையில் இருந்து ஒன்றரை அடி உயரத்திற்கு செடியை விட்டு, நறுக்கி ஒட்டுக்கட்டுவோம். நாங்கள் சாகுபடி செய்த பந்தலில் இருந்து நல்ல கொடிகளைத் தேர்ந்தெடுத்து ஒட்டுக்கட்டுவோம். பெரிய குளம் பகுதிகளில் உள்ள நர்சரிகளில் வேலை பார்ப்பவர்கள் ஒட்டு கட்டுவதில் வல்லவர்கள். அவர்களை வர வைத்துத்தான் ஒட்டுக்கட்டுகிறோம். ஒட்டுக்கட்டும்போது செடியின் தண்டு சுண்டுவிரல் அளவுக்கு பெருத்திருக்கும். ஒட்டுக்கட்டியதில் இருந்து 45வது நாளில் கொடி வளர்ந்து பந்தலில் ஏறிவிடும். தென்னை வறுச்சி (ஓலையின் நடுவில் உள்ள பகுதி) யில் சணலைக்கட்டி கொடிகளை பந்தலில் ஏற்றிவிடுவோம்.

120வது நாளில் கொடியின் முனையைக் கிள்ளி பந்தலில் தேக்குவோம். 15 நாட்களுக்கு ஒருமுறை புண்ணாக்கு 50 கிலோ, டிஏபி 1 மூட்டை ஆகியவற்றை நீரில் ஊறவைத்து செடிகளில் ஊற்றுவோம். உரத்தின் அளவை 15 நாட்களுக்கு ஒருமுறை 20 சதவீதம் கூட்டுவோம். இதில் பெரிய அளவில் பூச்சிமருந்து பயன்படுத்துவது கிடையாது. ஏதாவது இருந்தால் வேளாண் துறையின் பரிந்துரையை செயல்படுத்துவோம். 250, 300 நாட்களில் அதாவது 10வது மாதத்தில் இருந்து பழங்கள் அறுவடைக்கு தயாராகிவிடும். அதில் இருந்து 3 மாதத்திற்கு ஒருமுறை மகசூல் கிடைத்துக்கொண்டே இருக்கும். அதாவது ஆண்டுக்கு 3 சீசன்களாக மகசூல் கிடைக்கும். ஒரு அறுவடையில் 6 முதல் 10 டன் வரை மகசூல் கிடைக்கும். உள்ளூரில் உள்ள வியாபாரிகளே வயலுக்கு நேரடி யாக வந்து அறுவடை செய்து, பழங்களை எடுத்துச் செல்கிறார்கள். ஒரு கிலோ திராட்சைக்கு ரூ.20 முதல் ரூ.100 வரை விலை கிடைக்கும். சராசரியாக ரூ.40 கிடைத்து, குறைந்தபட்சம் 6 டன் பழம் கிடைத்தால் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் வருமானமாக கிடைக்கும். இதில் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் செலவாகும். அதுபோக ரூ.1 லட்சம் லாபமாக கிடைக்கும். ஆண்டுக்கு 3 சீசன் என்பதால் ரூ.3 லட்சம் லாபம் கிடைக்கிறது. திராட்சை சாகுபடியை நேரடி பதியத்திலும், அடர்நடவு முறையிலும் செய்யலாம். நேரடி பதியத்தில் ஒரு கொடியின் ஆயுட்காலம் 10 முதல் 15 ஆண்டுகள் வரை இருந்தது. ஆனால் அடர்நடவு முறையில் வைக்கப்படும் கொடிகள் 40 முதல் 50 ஆண்டுகள் வரை கூட பலன் தருகிறது. கொடியில் தேவையற்ற பாகத்தை மட்டும் வெட்டி எடுத்துவிட்டால், புது தளிர் முளைத்து வரும். நேரடி பதியத்தில் கிளை விட்டு மேலேயே வேர் செல்லும். அடர்நடவில் ஆணிவேர் நேரடியாக மண்ணுக்குள் செல்கிறது. இதனால் மழை, வெயில், காலநிலையையும் தாங்கி விளைச்சல் தருகிறது. நேரடி பதியத்தை விட அடர்நடவு முறையில்தான் அதிக விளைச்சல் கிடைக்கிறது’’ என கூறி முடித்தார் காட்சிக்கண்ணன்.

தொடர்புக்கு:
பொன்.காட்சிக்கண்ணன்: 97872 92101.

கைகொடுக்கும் தொழிற்சாலை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு துணை முதல்வராக இருந்தபோது, இப்பகுதியில் ஒயின் தொழிற்சாலை திறக்கப்பட்டது. இதனால் திராட்சைக்கு விலை இல்லாத சமயங்களில் கீழே வெட்டிப்போடும் நிலை வரும்போது, அந்த ஒயின் தொழிற்சாலையில் பழங்களைக் கொள்முதல் செய்தனர். இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் லாபம் கிடைத்தது. இந்த மழைக்காலத்தில் மட்டும் 400 டன் பழங்களை ஒயின் தொழிற்சாலையில் கொள் முதல் செய்திருக்கிறார்கள். இதேபோல மற்ற மாநிலங்களில் உள்ள ஒயின் தொழிற்சாலைகளில் தொடர்பை ஏற்படுத்தி, தமிழக திராட்சை விவசாயிகளின் மகசூலை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் மழைக்காலத்தில் மட்டுமாவது இந்தப்பழங்களை கொள்முதல் செய்ய வேண்டும். இதற்கு ஆதார விலையாக குறைந்தபட்சம் கிலோ ரூ.50 என வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறார்கள் கம்பம் பகுதி திராட்சை விவசாயிகள்.

5 ஆயிரம் ஹெக்டேர்

கம்பம் பள்ளத்தாக்கில் கூடலூர், குள்ளப்ப கவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, ஆனைமலையான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் கருப்பு பன்னீர் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. இதேபோல சின்னமனூர், ஓடைப்பட்டி பகுதிகளில் விதையில்லா பச்சை திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் கருப்பு பன்னீர் திராட்சைகள் சென்னை, சேலம், திருச்சி, மதுரை போன்ற தமிழகப் பகுதிகளுக்கும், கேரளப்பகுதிகளான கோட்டயம், சங்கனாச்சேரி, எர்ணாகுளம், பாலா போன்ற பகுதிகளுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப் படுகிறது. மருத்துவக் குணங்கள் நிரம்பி இருப்பதால் இப்பகுதியில் விளையும் கருப்பு பன்னீர் திராட்சைக்கு அண்டை மாநிலங்களில் தனி மவுசு இருக்கிறது.

புவிசார் குறியீடு

சர்வதேச அளவில் ஆண்டுக்கு 3 முறை மகசூல் கிடைப்பதற்கு, கம்பம் பள்ளத்தாக்கின் வளமான மண்ணும், சரியான தட்பவெப்பமுமே காரணம். இப்பகுதிகளில் விளையும் பன்னீர் திராட்சைகள் சுவையோடு இருப்பதோடு, இருப்பு வைக்கும் திறனும் (கீப்பிங் குவாலிட்டி) சிறப்பாக இருக்கிறது. இதற்காக கம்பம் பன்னீர் திராட்சைக்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது.

 

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு