பெண்ணையாறு குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரத்தில் ஒரு மாதத்தில் நதிநீர் பங்கீடு தீர்ப்பாயம் : ஒன்றிய அரசு உறுதி

புதுடெல்லி : பெண்ணையாறு குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரத்தில் ஒரு மாதத்தில் நதிநீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2020ல் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் இருமாநில பிரச்னையை தீர்க்கும் விதமாக புதிய நடுவர் மன்றத்தை உருவாக்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதனால் நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பான இறுதி உத்தரவு வரும் வரை பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அரசு அணை கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது. மேற்கண்ட மனுவானது கடந்த சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘பெண்ணையாறு விவகாரத்தில் நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பாக நான்கு வாரம் கால அவகாசம் வழங்கியும் ஒன்றிய அரசு எதனையும் மேற்கொள்ளவில்லை’ என தமிழக அரசு வக்கீல் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த ஒன்றிய அரசு வக்கீல், ‘நதிநீர் பங்கீடு தீர்ப்பாயத்தை அமைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து அதற்கான பணிகளை செய்து வருகிறது. எனவே கூடுதலாக எங்களுக்கு 6 மாதம் அவகாசம் வேண்டும்’ என்றார். ஒன்றிய அரசின் இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், வழக்கை ஒத்திவைத்தது. இந்நிலையில் இன்று காலை ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கையை பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில், ‘பெண்ணையாறு விவகாரத்தில் நதிநீர் பங்கீடு தீர்ப்பாயத்தை அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதல் ஒன்றிய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் நதிநீர் பங்கீடு தீர்ப்பாயத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பெண்ணையாறு குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரத்தில் ஒரு மாதத்தில் நதிநீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதி அளித்தது. மேலும் ஒன்றிய அரசு தரப்பில், “கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெறவில்லை. ஆதலால் தீர்ப்பாயம் அமைக்க ஒப்புதல் பெற இயலவில்லை. தேர்தல் முடிந்ததும் ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று ஒரு மாதத்தில் தீர்ப்பாயம் அமைக்கப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்