காங்கிரஸ் விருந்தில் பங்கேற்றபாஜ எம்எல்ஏக்களால் பரபரப்பு: கர்நாடக அரசியல் வட்டாரத்தில் ‘திடீர்’ சலசலப்பு

பெங்களூரு: காங்கிரஸ் கட்சி அளித்த இரவு விருந்தில் பாஜ எம்.எல்.ஏக்கள் இருவர் மற்றும் ஒரு எம்.எல்.சி கலந்துகொண்டது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக அவர்களது நிலைப்பாடு மற்றும் திட்டம் குறித்து பேசவுள்ளதாக பாஜ மாநில தலைவர் விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.லகாவியில் கடந்த 4ம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த புதன்கிழமை இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்தில் பாஜ எம்.எல்.ஏக்கள் எஸ்.டி.சோமசேகர், சிவராம் ஹெப்பார் மற்றும் பாஜ எம்.எல்.சி விஸ்வநாத் ஆகிய மூவரும் கலந்துகொண்டனர்.

பாஜவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான சோமசேகர், சிவராம் ஹெப்பார் மற்றும் விஸ்வநாத் ஆகிய மூவரும் காங்கிரஸ் இரவு விருந்தில் கலந்துகொண்டது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.இதுதொடர்பாக பேசிய பாஜ மாநில தலைவர் விஜயேந்திரா, ‘‘இன்று (நேற்று) காலையில் தான் அந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டேன். இது மிக முக்கியமான விவகாரம். இதுதொடர்பாக அவர்களிடம் பேசி உடனடியாக விளக்கம் கேட்பேன்’’ என்றார்.

மேலும், கடந்த 2019ம் ஆண்டு மஜத – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ காரணமாக இருந்த உறுப்பினர்களில் இவர்கள் மூவரும் அடக்கம். குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து, பாஜ ஆட்சியமைக்க காரணமாக இருந்தவர்கள் இவர்கள். அதில், முந்தைய பாஜ ஆட்சியில் சோமசேகர் மற்றும் சிவராம் ஹெப்பார் ஆகிய இருவரும் அமைச்சர்களாக இருந்தனர். காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜவிற்கு சென்றவர் சோமசேகர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஸ்வநாத், மஜத கட்சியின் மாநில தலைவராகவும் இருந்தவர். அவரும் பாஜவிற்கு தாவினார்.

அதனால் அவர்கள் மீண்டும் பாஜவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு செல்லக்கூடும் என்று பாஜ தலைமை சந்தேகப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், அவர்கள் மூவரும் காங்கிரஸ் கட்சியில் சேர வாய்ப்பிருப்பதாக சந்தேகப்படுவதால் தான், அவர்களது நிலைப்பாடு மற்றும் திட்டம் குறித்து அவர்களிடம் பேசி விளக்கம் கேட்கவுள்ளதாக பாஜ மாநில தலைவர் விஜயேந்திரா கூறியுள்ளார். மேலும் இது பாஜவிற்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பேசிய கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும், துணை முதல்வருமான டி.கே.சிவகுமார், ‘‘நான் மற்ற கட்சியினருக்கென தனி விருந்து ஏற்பாடு செய்திருந்தேன். அந்த விருந்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் சோமசேகர், சிவராம் ஹெப்பார் மற்றும் விஸ்வநாத் உட்பட பல்வேறு கட்சியினர் 10 பேர் கலந்துகொண்டனர். அவர்கள் ஏன் காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்? அவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் சட்டப்பேரவை கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அவர்கள் விருந்தில் மட்டுமே கலந்துகொண்டனர்’’ என்று டி.கே.சிவகுமார் விளக்கமளித்தார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி