திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா

திருத்தணி: திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று, பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு, அதிகாலை 5 மணியளவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் தங்கவேல், தங்ககீரிடம், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு, நகரத்தார் திருத்தணி பாத யாத்திரை டிரஸ்ட் சார்பில், 150க்கும் மேற்பட்ட பக்தர்கள், மயில் காவடிகளையும், 100 க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்களையும் தலையில் சுமந்தும், மலையடிவாரத்தில் உள்ள திருக்குளத்தில் இருந்து, மலைப்படிகள் வழியாக மலைக்கோயிலுக்கு சென்றனர்.

பிறகு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு, விபூதி, நாட்டு சர்க்கரை, பஞ்சாமிர்தம் மற்றும் பால்குட அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு, உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7.30 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தங்கத்தேரில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்குனி உத்திரம் என்பதால், மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

பொதுவழியில் மூலவரை தரிசிக்க, 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும், ரூ.100 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். கொளுத்தும் வெயிலுக்கு, பக்தர்களுக்கு வசதியாக மலைக்கோவில் தேர்வீதியில் வெள்ளை வர்ணம் பூசியும், தரைவிரிப்பு போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் திருத்தணி போலிஸ் டிஎஸ்பி விக்னேஷ் தமிழ்மாறன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதே போல், பங்குனி உத்திரம் விழாவையொட்டி, திருத்தணி சுந்தர விநாயகர் கோயிலில், உற்சவர் சிவகாமி சுந்தேரஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில், மாட்டு வண்டியில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் சு.ஸ்ரீதரன், இணை ஆணையரும், செயல் அலுவலருமான க.ரமணி, அறங்காவலர்கள் உஷா ரவி, கோ.மோகனன், வி.சுரேஷ்பாபு, மு.நாகன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related posts

தொடர் விபத்துக்கு பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு இல்லாததே காரணம்: மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை

திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை அக்டோபர் 2ஆம் தேதி போக்குவரத்து மாற்றம்

2 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் ஜம்மு – காஷ்மீரில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு: 40 பதவிக்கு 415 வேட்பாளர்கள் போட்டி