பந்தலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி குறிச்சிநகர் பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு குட்டியுடன் 6 யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. அங்கு சண்முகநாதன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் குட்டியானை தவறி விழுந்து உயிருக்கு போராடியது. குட்டி யானையை மீட்க தாய் யானை மற்றும் உடன் வந்த யானைகள் ஆக்ரோஷமாககிணற்றை சுற்றி வந்தது. தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தொடர்ந்து ஜேசிபியும் வரவழைக்கப்பட்டு கிணற்றின் அருகே பள்ளம் தோண்டி குட்டியானையை மீட்கும் பணி தொடங்கியது. அப்போது ஜேசிபியை தாய் யானை தாக்க முயன்றது.

தொடர்ந்து சண்முகநாதன் வீட்டு ஜன்னல், கதவு மற்றும் கழிவறை சிமெண்ட் சீட் கூரை ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியதுடன் வீட்டுக்குள் நுழைய முயன்றது. அங்கிருந்த அவரது மனைவி குமாரி, மகன் விணு, அத்தை மகேஸ்வரி ஆகியோர் ஓட்டம் பிடித்து மாடியில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து தாய் யானையை வனத்துறையினர் விரட்ட முயன்றனர். அவர்களையும் விரட்டியது. அப்போது வேலவேந்தன் என்பவரது வீட்டையும் தாய் யானை ஆக்ரோஷத்துடன் உடைத்து துவம்சம் செய்தது. சிறிது நேரத்துக்கு பின் ஆக்ரோஷம் அடங்கிய தாய் யானை மற்றும் உடன் வந்த யானைகளை வனத்துறையினர் விரட்டி அடித்தனர். தொடர்ந்து குட்டி யானையை மீட்க கிணறு அருகே ஜேசிபி உதவியுடன் பள்ளம் தோண்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

சுற்றுலா வேன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இரண்டு பேர் கைது

கொடநாடு சம்பவத்தில் எதிரிகளுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு: இண்டர்போல் உதவியுடன் விசாரிக்க நடவடிக்கை, முதல்வர் மு.க.ஸ்டாலின் திடுக் தகவல்

புதுக்கோட்டை அருகே டயர் வெடித்து 2 கார்கள் ேமாதல் : தந்தை, மகள் பலி: தாய், மகன் படுகாயம்