ஊராட்சி தலைவி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே ஊராட்சி தலைவி வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கொப்புசித்தம்பட்டியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மனைவி விஜயலட்சுமி, கொப்புசித்தம்பட்டி ஊராட்சிமன்ற தலைவியாக உள்ளார். ஜெய்சங்கரும், அவரது மனைவியும் பந்தல்குடியில் வசித்து வருகின்றனர். வடக்கு கொப்புசித்தம்பட்டியில் ஜெய்சங்கருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டை அவரது அக்காள் பஞ்சவர்ணம் பராமரித்து வருகிறார். கடந்த 24ம் தேதி இரவு வடக்கு கொப்புசித்தம்பட்டி வீட்டில் பஞ்சவர்ணம், அவரது மகள் பாண்டியம்மாள் ஆகியோர் இருந்தனர்.

அப்போது மர்ம நபர்கள் அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீட்டில் வீசினர். சத்தம் கேட்டு பஞ்சவர்ணமும், அவரது மகளும் வந்து பார்த்தபோது, ஜன்னல் கதவுகள் தீப்பற்றி எரிந்தன. இதுபற்றி ஜெய்சங்கருக்கு தகவல் கொடுத்தனர். அவர் பந்தல்குடி போலீசில் நேற்று முன்தினம் இரவு புகார் செய்தார். புகாரில், கடந்த ஊராட்சி தேர்தலில், அதே ஊரைச் சேர்ந்த தாமரைச்செல்வம் என்பவருக்கும், தனக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக, அவர் மீது சந்தேகம் உள்ளது என தெரிவித்துள்ளார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related posts

திமுக ஆட்சியில் நாமக்கல் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

பெங்களூருவில் கனமழையால் கட்டடம் இடிந்து ஒருவர் பலி!!

கல்வராயன் மலைப் பகுதியில் சாலையை சீரமைக்க ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு..!!