அதிமுக எம்எல்ஏவிடம் கேள்வி கேட்ட விவசாயியை மார்பில் எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர் அதிரடி கைது: கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு

திருவில்லிபுத்தூர்: கிராம சபை கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏவிடம் கேள்வி கேட்ட விவசாயி மார்பில் எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சி கங்காகுளம் கிராமத்தில் நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. திருவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ மான்ராஜ் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, ஊராட்சித்தலைவர் பூங்கொடி, திருவில்லிபுத்தூர் யூனியன் பற்றாளர் வசந்தி, ஊராட்சி செயலர் தங்கப்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண்ட கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த விவசாயி அம்மையப்பன்(54), கிராமசபை கூட்டம் சுழற்சி முறையில் கிராமங்களில் நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மேலும், ஊராட்சி செயலர் தங்கப்பாண்டி பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து இங்கேயே பணியாற்றி வருவது குறித்து எம்எல்ஏவிடம் கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி செயலர் தங்கப்பாண்டி, எம்எல்ஏ, அதிகாரிகள் முன்னிலையில் வேகமாக பாய்ந்து வந்து விவசாயி அம்மையப்பனை மார்பில் எட்டி உதைத்தார்.

அப்போது அருகில் இருந்து மற்றொருவரும், அவரை தாக்கினார். மேலும், அம்மையப்பனை அவதூறாக திட்டியதோடு தங்கப்பாண்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இதனையடுத்து அம்மையப்பன் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி போலீசார், ஊராட்சி செயலர் தங்கப்பாண்டி மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

* சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவு
விருதுநகர் கலெக்டர் உத்தரவின்பேரில் தங்கப்பாண்டி ஏற்கனவே பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் நீதிமன்றத்தில் தடையாணை பெற்று தொடர்ந்து பிள்ளையார்குளத்திலேயே பணியாற்றி வருவதாகவும், யாரிடமும் தடையாணையை காட்ட மறுப்பதாகவும் கூறப்படுகிறது. அதிமுக எம்எல்ஏவிடம் தன்னைப்பற்றி கேள்வி கேட்ட விவசாயியை ஊராட்சி செயலர் மார்பில் எட்டி உதைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியை, கலெக்டர் ஜெயசீலன் உத்தரவின்பேரில், திருவில்லிபுத்தூர் திட்ட பிரிவு பிடிஓ மீனாட்சி சஸ்பெண்ட் செய்து நேற்று மாலை உத்தரவிட்டார்.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை