கிராம மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தருவது ஊராட்சித்தலைவரின் பொறுப்பு: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கிராம மக்களுக்கு அடிப்படை வசதியை செய்வது ஊராட்சித் தலைவரின் பொறுப்பு என்றும், ஒப்பந்ததாரர் மீதான நடவடிக்கை குறித்து பரிந்துரைக்குமாறும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே அழகப்பபுரம் ஊராட்சித்தலைவர் கணேஷ்ராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அழகப்பபுரம் ஊராட்சியில் 500 வீடுகள் உள்ளன. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன. முறையாக பைப்லைன் அமைக்காமல் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், பல இடங்களில் பைப்லைன் அடிக்கடி உடைந்து சேதமாவதால் தண்ணீர் முறையாக கிடைக்கவில்லை. எனவே, ஊராட்சியில் உள்ள வீடுகளுக்கு முறையான குடிநீர் இணைப்பு வழங்குமாறும், தடையற்ற தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறும், முறையாக பைப்லைன் அமைக்காத ஒப்பந்தாரர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் பிறப்பித்த உத்தரவு: இந்த குற்றச்சாட்டை விசாரிக்கும் பொறுப்பு ஊராட்சித்தலைவரான மனுதாரருக்கும் உள்ளது. ஒப்பந்ததாரர் பணியில் இருந்து தன்னை இன்னும் விடுவிக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீதான நடவடிக்கை தொடர்பான அறிக்கையை, உயரதிகாரிகளுக்கு ஊராட்சி தலைவர் பரிந்துரைக்கலாம். ஊராட்சித் தலைவரான மனுதாரரின் பணி ஆவணங்களை பாதுகாப்பது மட்டுமல்ல. கிராமத்தினருக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியதும் அவரது பொறுப்பு தான். எனவே, மனுதாரரே தனது கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

Related posts

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!

கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!

கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!