தினமும் பிரசாரத்துக்கு ரூ.2 கோடி செலவு: பக்கத்து தொகுதிகளுக்கு தலா ரூ.75 கோடி; பண மழையில் சிவகங்கை தொகுதி; சிட் பண்டில் சுருட்டிய ரூ.525 கோடியை வாரியிறைக்கும் பாஜ வேட்பாளர்; காசு… பணம்… துட்டு… மணி… மணி…

பாஜ கூட்டணி சார்பில் சிவகங்கை மக்களவை தொகுதியில் அகில இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன், தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். சிவகங்கை தொகுதிக்கு எந்த வகையிலும் தொடர்பே இல்லாத இவரை வேட்பாளராக நியமித்தது, உள்ளூர் பாஜ கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. சென்னையில் வசித்து வரும் இவர் மிக அரிதாகவே, சிவகங்கை மாவட்டத்துக்கு வந்து சென்றுள்ளார். தேவநாதன் நடத்திவரும் அமைப்பை சார்ந்தவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு கூட இத்தொகுதியில் இல்லை. இப்படிப்பட்ட பின்புலம் உள்ள இவர், எதற்காக இத்தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது யாருக்கும் புரியாத புதிராகவே உள்ளது.

* பொய் சொத்து மதிப்பு
பெரிய கோடீஸ்வரரான இவர், தான் போட்டியிடும் சிவகங்கை தொகுதி மட்டுமின்றி அருகில் உள்ள மதுரை உள்ளிட்ட மேலும் சில தொகுதிகளில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களுக்கு இவரே செலவு செய்ய வேண்டும் என்ற பாஜ மேலிட உத்தரவுடன் இவருக்கு சிவகங்கை தொகுதி வழங்கப்பட்டுள்ளதாம். தொகுதிக்கு ரூ.75 கோடி வீதம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டே களம் இறக்கப்பட்ட நிலையில் முதலில் சற்று தயங்கிய இவர், பின்னர் பாஜ மேலிட மிரட்டலுக்கு பணிந்தார். தனக்கு ரூ.304 கோடியே 17 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாக வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் காட்டியிருக்கிறார். ஆனால் உண்மையான சொத்து மதிப்பில் இது வெறும் 10 சதவீதம் கூட இருக்காது என இவரின் பின்புலம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

* பாஜவுடன் இணக்கம்
சர்வதேச போலி பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதியாக உள்ள இவர், அதை காப்பாற்றிக்கொள்ளவே கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றிய பாஜ ஆட்சியாளர்களுடன் இணக்கமாக அவர்கள் சொல்படி நடக்கிறார் என்ற பேச்சு தொகுதி முழுக்க வலம் வந்த நிலையில், தற்போது நிதி நிறுவன மோசடியில் சிக்கியிருக்கிறார். ஆனால் பாஜ கட்சியுடன் தொடர்புடைய நபர்கள் ஏராளமானோர் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள நிலையில் அவர்கள் கண்களிலேயே விரல் விட்டு ஆட்டுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

* ரூ.525 கோடி மோசடி
சென்னை மயிலாப்பூரை தலைமையிடமாக கொண்டு தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட ரூ.525 கோடி பணம் சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படாமல் மோசடி செய்த விவகாரம் தற்போது விஸ்வரூபமாகியுள்ளது. இந்த நிதி நிறுவனத்தின் நிறுவனத்தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக தேவநாதன் உள்ளார். மேலும், ஏராளமான முதலீட்டாளர்களுக்கு கொடுக்கப்பட்ட காசோலைகளும் பணமின்றி திரும்ப வந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள இந்த நிதி நிறுவனத்தின் 5 கிளைகளிலும் இதே பிரச்னை. ஆனால் இது எதுவுமே தெரியாதது போல் கூலாக சிவகங்கை தொகுதிக்குள் தாமரை சின்னத்தில் ஓட்டு கேட்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்.

* அள்ளி அள்ளி வீச்சு
ஒரு பூத்திற்கு முதற்கட்டமாக ரூ.20 ஆயிரம், நகர தலைவருக்கு ரூ.1 லட்சம், ஒன்றிய தலைவருக்கு ரூ.2 லட்சம், மாவட்டத்தலைவருக்கு ரூ.25 லட்சம் என முதற்கட்ட சப்ளை முடிந்துள்ளது. கேரளாவிலிருந்து 10 ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. மதம் சார்ந்த நபர்களிடம் பேச, ஆர்எஸ்எஸ் முழு நேர ஊழியர்களுக்கு செலவு ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது. ஆரத்தி தட்டிற்கு ரூ.100, வாகனங்களில் அழைத்து வரப்படுபவர்களுக்கு ஒரு கூட்டத்திற்கு ரூ.300 முதல் ரூ.500 வரை வழங்க வேண்டும் என பாஜவினர் இவரிடம் இருந்து பணத்தை கறந்தாலும் வாக்காளர்களுக்கு இதில் பாதிதான் செல்கிறது. இதுவே தங்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு என கருதி பாஜவினர் கிடைத்தவரை சுருட்டி வருகின்றனர்.

* பல கோஷ்டிகளாக வசூல்
ஏற்கனவே சிவகங்கை மாவட்ட பாஜவில் கோஷ்டிகளுக்கு பஞ்சம் இல்லை. இதை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் பாஜ கட்சியினர், தேவநாதனிடமே முடிந்தவரை பணத்தை பிடுங்கி வருகிறார்களாம். சிவகங்கை மாவட்ட பாஜ நிர்வாகிகளுக்கு மட்டும் கடந்த ஒரு வாரத்தில் பல கோடிகளை வாரி இறைத்துள்ளாராம். ஒரு நாளைக்கு சுமார் ரூ.2 கோடிக்கு மேல் செலவழித்து வருகிறாராம். இவர் கொடுக்கும் பணம் சரியாக செலவு செய்யப்படுகிறதா என்பதைக் கூட தேவநாதனிடம் சொல்லக் கூட இவரின் ஆதரவாளர்கள் தொகுதியில் இல்லை. ஆனால் இது குறித்தெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் பாஜவினர் கேட்கும் பணத்தை வாரியிறைத்து வருகிறார். நிதி நிறுவன முதலீட்டு பணத்தை தான் தேவநாதன்இப்போது சிவகங்கை தொகுதிக்குள் தண்ணீராய் செலவிட்டு வருவதாக நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் கூறி வருகின்றனர். இத்தொகுதியில் இவர் செய்யும் செலவுகளை தேர்தல் ஆணையம் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

* வைர பேனாவை தொலைத்தவர்
தமிழ்நாட்டிலேயே பாஜவினர் போட்டியிடும் தொகுதியில் ஒரு நாளைக்கு சுமார் ரூ.2 கோடிக்கு மேல் பணம் செலவு செய்யப்படும் ஹைடெக் தொகுதியாக சிவகங்கை தொகுதி உள்ளது. முதல் நாள் பிரசாரத்திலேயே திருப்பத்தூரில் வைரத்தில் செய்யப்பட்ட பேனா தொலைந்து போனதாக கூறி அதிர்ச்சியளித்தார் தேவநாதன். இதுதொடர்பாக அறிவிப்பும் செய்யப்பட்டது. வைர பேனா என அறிவித்தும் திரும்ப கிடைக்குமா? முதல் நாளிலேயே வைரப்பேனாவை தொலைத்தவர், தற்போது மக்களின் பல நூறு கோடி நிதியை தேர்தலில் செலவழித்து வருகிறார்.

யார் யாருக்கு எவ்வளவு?
* ஒரு பூத்துக்கு ரூ.20,000
* நகர தலைவருக்கு ரூ.1,00,000
* மாவட்ட தலைவருக்கு ரூ.25,00,000
* ஆரத்தி தட்டிற்கு ரூ.100
* கூட்டத்தை சேர்ப்பவர்களுக்கு ரூ.500

Related posts

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு