பாம்பன் பாலத்தில் நாளை இந்தியாவின் முதல் செங்குத்து ரயில் தூக்குப்பாலத்தை இயக்கி சோதனை: எலக்டரிக்கல், சிக்னல் பணி தீவிரம்

ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில் செங்குத்து தூக்குப்பாலத்தை நவீன தொழில்நுட்பத்தில் நாளை இயக்கி சோதனை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தூக்குப்பாலத்தில் எலக்ட்ரிக்கல், சிக்னல் பணியினை நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரட்டை வழித்தட ரயில் பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளது.

இதற்கான இறுதி கட்ட பணிகள் இரவு பகலாக முழு வீச்சில் நடந்து வருகிறது. புதிய ரயில் பாலத்தில் ஏற்கனவே சோதனை இன்ஜின் மற்றும் லோடு ரயில் இன்ஜின்களை 60 கி.மீ வேகம் வரை இயக்கி அதிகாரிகள் பாலத்தின் அதிர்வு, உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்தனர். தற்போது கப்பல் கடந்து செல்லும் கடல் கால்வாய் மேலே, 700 டன் எடையில் பொருத்தப்பட்டுள்ள இந்தியாவின் முதல் செங்குத்து ரயில்வே தூக்குப்பாலத்தை உயர்த்தி சோதனை செய்ய தயாராகி உள்ளது.

பில்லர் தளத்தில் தாங்கி நின்ற தூக்கும் பாலம் நேற்று முன்தினம் 4 அடி உயர்த்தப்பட்டு, முழு எடையும் வின்ச் மெஷினின் 4 பக்க ரோப்பில் தாங்கி நிற்கிறது. ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் பொறியாளர்கள் பாலத்தை சமநிலைப்படுத்தி சீராக உயர்த்தி இயக்குவதற்கான சரி செய்யும் பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில், நாளை முதல் தூக்குப்பாலத்தை உயர்த்தி, இறக்கி சோதனை நடைபெறும். தொடர்ந்து தூக்குப்பாலத்தில் அதிநவீன தொழில்நுட்ப சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டு பாலத்தின் செயல்பாடுகளை துல்லியமாக கண்காணிப்பு செய்யப்படவுள்ளது. தற்போது தூக்குப்பாலம், எலக்ட்ரிக்கல், சிக்னல் பிரிவு என நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

கூட்டுறவு செயலி!

கடன் வாங்கும் முன் கவனியுங்கள்!

ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடு இந்தியா: லோவி மதிப்பீட்டு நிறுவனம் அறிவிப்பு!!