பாம்பன் சாலை பாலத்தில் இணைப்பு ஸ்பிரிங் பிளேட்கள் சேதம்

ராமேஸ்வரம் : பாம்பன் பாலத்தின் இணைப்பு ஸ்பிரிங் பிளேட்கள் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வாகனங்களில் டயர்களை பதம் பார்த்து வருகிறது. இதை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பாம்பனுக்கும் மண்டபத்திற்கும் இடையே கடல் பகுதியில் அன்னை இந்திரா காந்தி சாலை பாலம் அமைந்துள்ளது.

பாலத்தின் மீது வாகனங்கள் செல்லும் போது அதிர்வு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பாலத்தின் இணைப்புகளுக்கு இடையே இரும்பினால் செய்யப்பட்ட ஸ்பிரிங் பிளேட்கள் பொருத்தப்பட்டுள்ளன. பல்வேறு காரணங்களால் இந்த பிளேட்கள் அவ்வப்போது சேதமடைந்து வாகனங்களின் டயர்களை பதம் பார்த்து வருகின்றன. கடந்த ஆண்டு இறுதியில் சாலை பாலத்தில் இந்த இரும்பு பிளேட்கள் சேதமடைந்தன. இதை தேசிய நெடுஞ்சாலை துறையினர் சரி செய்தனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சாலை பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு ஸ்பிரிங் பிளேட்கள் மேல் வாகனங்கள் செல்லச் செல்ல அதிர்வு ஏற்பட்டு சேதமடைந்த பிளேட்களின் போல்ட் நட்டுகள் கழன்று கிடக்கிறது. வெளியே தெரியும் கம்பி வாகனங்களின் டயர்களில் குத்தி பஞ்சர் ஏற்படுத்தி வருகின்றன. சில நேரங்களில் விபத்துக்கும் வழி வகுக்கிறது.
அரசு பேருந்துகள் இதில் கடந்து செல்லும் போது பலத்த சத்தம் ஏற்படுவதால் பயணிகள் அதிர்ச்சி அடைகின்றனர்.

மேலும் இரவு நேரங்களில் மின்விளக்கு வெளிச்சம் இல்லாததால் வாகன ஓட்டிகள் இந்த சத்தத்தால் அச்சமடைந்து எதிரே வரும் வாகனங்களில் மோதி விபத்து ஏற்படுத்தும் வகையில் ஓட்டிச் செல்ல வேண்டிய அபாய நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். சேதமடைந்துள்ள இரும்பு ஸ்பிரிங் பிளேட்களை உடனே சரி செய்ய தேசிய நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை நீட்டிப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரின் மகன் கைது

தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது