பாம்பின் வாய்த் தேரையும் யானையும்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

உலக வாழ்வின் நிலையாமையையும், நம்மைச் சூழ்ந்துள்ள பேராபத்துக்களையும் அறியாது உடலை வளர்த்தவாறு இறைவனைச் சிந்தியாது காலம் கடத்துதல் கூடாது என்பதை உணர்ந்த திருநாவுக்கரசு பெருமானார் திருவொற்றியூர் பெருமானிடம் தன்னை உய்யக்கொள்ளுமாறு வேண்டி நின்றார்.

அதனைக் குறிப்பிடும் வகையில் அவர் பாடிய ஒற்றியூர் பதிகத்தின் முதற்பாடல்,

“ஓம்பினேன் கூட்டை வாளா உள்ளத்து ஓர் கொடுமைவைத்துக்
காம்பு இலா மூழைபோலக் கருதிற்றே முகக்க மாட்டேன்
பாம்பின்வாய்த் தேரைபோலப் பலபல நினைக்கின் றேனை
ஓம்பி நீ உய்யக்கொள்ளாய் ஒற்றியூர் உடைய கோவே”
எனக் கூறுகின்றது.

உள்ளத்தில் கொடுமையை வைத்தவாறு உடலை வளர்த்தேன் என்று தன் தருமசேனராகிய சமண வாழ்க்கையை நினைந்து மேலும் இனி காம்பு இல்லாத அகப்பை கொண்டு முகப்பதுபோல இருக்கமாட்டேன்; இருப்பினும் பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை தன் ஆபத்தை உணராமல் பலவற்றை நினைப்பதுபோலத் திகழும் என்னை உய்ந்து அருளுவாய் என திருவொற்றியூர் இறைவனிடம் வேண்டி நின்றார்.

திருநாவுக்கரசர் போன்றே திருஞானசம்பந்தப் பெருமானார் திருவாரூர் பூங்கோயிலில் தன் நெஞ்சத்தைப் பார்த்து ஒரு நிகழ்வினைச் சுட்டிக் காட்டுகின்றார். ஒரு வண்டு பூவில் இருக்கும் தேனைப் பருகி சுவைத்து மயங்கி இன்புற்றிருக்கும் அவ்வேளையில் அதனை ஒரு தேரை கவ்வி அதன் வாயில் இருத்த அதே நேரத்தில் அத்தேரையோ அதனைக் கவ்விய பாம்பின் வாயில் இருக்க நேர்ந்தது. இவ்வளவு ஆபத்துகளின் இடையே அந்த வண்டு சுவைக்கும் தேனின் இன்பம் போல நோய் பற்றக்கூடிய இவ்வுடலால் இன்பங்களைத் துய்க்கலாம் என்று கருதினாயே அதனை விடுத்து ஆரூர் பெருமானைத் தொழுது உய்வு பெறலாம் அஞ்சாதே என தன் நெஞ்சகத்திடம் உரைக்கின்றார்.

அவர் உரைக்கும் கூற்று ஆரூரில் அவர் பாடிய ‘பவனமாய்’ எனத் தொடங்கும் பதிகத்தின் ஆறாம் பாடலாக,

“செடிகொள் நோய் ஆக்கை அப்பாம்பின்வாய்த் தேரைவாய்ச் சிறுபறவை
கடிகொள் பூந்தேன் சுவைத்து இன்புறலாம் என்று கருதினாயே
முடிகளால் வானவர் முன் பணிந்து அன்பராய் ஏத்தும் முக்கண்
அடிகள் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே”

எனக் காணப்பெறுகின்றது.

பாம்பின் வாய் தேரையும், தேரை வாய் வண்டும், வண்டு வாய் தேனும், அத்தேனின் சுவையும் அற்புதமாக இங்கு கையாளப் பெற்றுள்ளதைக் காண முடிகின்றது. பாம்பின் வாய்த் தேரையை உவமையாகக் காட்டிய திருஞானசம்பந்தர் திருக்கயிலாய மலையின் சிறப்பையும், அதன் பிரம்மாண்டத்தையும் தான் பாடிய திருக்கயிலாய பதிகத்தின் இரண்டாம் பாடலாக,

“புரிகொள் சடையர் அடியர்க்கு எளியர் கிளி சேர் மொழி மங்கை
தெரிய உருவில் வைத்து உகந்த தேவர் பெருமானார்
பரிய களிற்றை அரவு விழுங்கி மழுங்க இருள் கூர்ந்த
கரிய மிடற்றர் செய்ய மேனிக் கயிலை மலையாரே”

எனப் பாடி, உமையொரு பங்கனாகிய வரும் கரிய மிடற்றினை உடையவரும், சடைமுடியை உடையவரும், அடியவர்களுக்கு எளியவரும் ஆன கயிலைநாதன் அமர்ந்திருக்கும் அம்மலை எவ்வளவு பிரம்மாண்டமுடையது எனின் அங்கு ஊர்ந்து கொண்டிருக்கும் பாந்தள் எனும் பெரும் பாம்பு தன் வாயால் யானை ஒன்றினை விழுங்கிக் கொண்டிருக்கும் காட்சியை உடையது எனக் கூறியுள்ளார்.

இராஜசிம்ம பல்லவனால் எடுக்கப்பெற்ற காஞ்சி கயிலாசநாதர் கோயில், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் ஆகியவற்றின் ஸ்ரீவிமானத்தைக் கல்வெட்டுகள் ஸ்ரீகயிலாசம் என்றே குறிப்பிடுகின்றன. அதுபோன்றே தஞ்சைப் பெரிய கோயிலின் ஸ்ரீவிமானத்தை அக்கோயிலில் உள்ள இராஜராஜனின் கல்வெட்டுகள் தட்சிணமேரு என்றும், மகாமேரு என்றும் குறிப்பிடுகின்றன. அதே கலை அமைதியில் கட்டப்பெற்ற கங்கைகொண்ட சோழபுரத்து சிவாலயமும் கயிலாசமேயாகும். தாராசுரம் திருக்கோயிலின் ஸ்ரீவிமானத்து மேற்தளத்தில் கயிலைநாதன் உமாதேவியோடும், முனிபுங்கவர்களோடும், தேவர்களோடும் திகழும் காட்சி சிற்பங்கள் இடம்பெற்று அவ்விமானத்தை ஸ்ரீகயிலாசமாகவே காட்டி நிற்கின்றது.

தஞ்சைக் கோயிலைக் கயிலாய பர்வதமாக எடுப்பித்த இராஜராஜ சோழனின் தலைமைச் சிற்பி குஞ்சரமல்லனான இராஜராஜ பெருந்தச்சனுக்கு திருஞானசம்பந்தர் கயிலை பதிகத்தில் குறிப்பிடும் “பரிய களிற்றை அரவு விழுங்கி” என்ற சொற்றொடர் கருப்பொருளாய் அமைந்தது. அதனால் அதனையே காட்சி வடிவமாக்கி தஞ்சைக் கோயிலின் கட்டுமான அமைப்பின் தத்துவத்தைக் காட்ட விழைந்தான்.

தஞ்சைக் கோயிலின் மகாதுவாரமான இரண்டாம் இராஜகோபுர வாயிலின் இருமருங்கும் சுமார் பதினெட்டடி உயரமுடைய ஒற்றைக் கல்லாலான இரண்டு துவாரபாலகர் சிற்பங்களை அமைத்தான். அதுபோன்றே கோயிலின் உள் வாயில்களிலும் மிகப்பெரிய அளவிலான துவாரபாலகர் சிற்பங்களை இடம்பெறச் செய்தான். இக்கோயிலினை ஒத்தே இராஜராஜ சோழனின் மகனான இராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தில் எடுத்த கங்கைகொண்ட சோழீச்சரத்தின் வாயில்களிலும் பிரம்மாண்ட துவாரபாலகர் சிற்பங்களை சோழ சிற்பிகள் அமைத்தனர்.

இவ்விரு திருக்கோயில்களிலும் காணப்பெறும் இரண்டிரண்டு துவாரபாலகர்களில் ஒருவர் தன் ஒரு காலைத் தரையில் ஊன்றியவாறு, மறுகாலை ஒரு மரத்தின்மீதோ அல்லது கதையின் மீதோ தூக்கி இருத்தியவாறு நின்றுகொண்டு ஒரு கரத்தால் உள்ளே திகழும் பெருங்கோயிலான ஸ்ரீவிமானத்தைக் காட்டிய வண்ணம், ஒரு கரத்தால் தர்ஜனி முத்திரை எனப்பெறும் சுட்டு விரல் காட்டி எச்சரிக்கை செய்து, ஒரு கரத்தை கதைமீது வைத்தவண்ணம் ஒரு கரத்தை மேலுயர்த்தி பெருவியப்பு காட்டும் முத்திரையான விஸ்மய முத்திரை காட்டி நிற்பார்.

கதையின்மீதோ அல்லது மரத்தின்மீதோ வைக்கப்பெற்றுள்ள ஒரு பாதத்திற்குக் கீழாக பொந்திலிருந்து ஒரு பாம்பு வெளிப்பட்டுத் திகழும். அதன் வாயில் பாதி வுடல் விழுங்கப்பெற்ற நிலையில் முன்னங்கால்களும் துதிக்கையும் வெளியே தெரியுமாறு யானை ஒன்று காணப்பெறும். பாம்பு பாதி உடலை கவ்வி விழுங்குவதால் யானை பலமிழந்து மரிக்கும் நிலையில் திகழும். இத்தகைய யானையை விழுங்கும் பாம்போடு கூடிய துவாரபாலகர் சிற்பங்கள் இராஜ ராஜன் மற்றும் இராஜேந்திரன் எடுத்த கோயில்களில் மட்டுமே காண இயலும். மற்ற சோழர் கோயில்களிலும், பிற மரபினர் படைத்த கோயில்களிலும் காணப்பெறும் துவாரபாலகர் காலடியில் திகழும் பாம்புகள் எலியை விழுங்கியவண்ணம்தான் காணப்பெறுகின்றன.

தஞ்சைக் கோயிலின் இராஜராஜன் திருவாயில் எனப்பெறும் கோபுர வாயிலில் திகழும் இத்தகைய துவார பாலகர் முன்பு நாம் நின்றவாறு அச்சிற்பக் காட்சியினை உற்றுநோக்குவோம். அவ்வாயிற் காவலன் ஒரு கரத்தால் உள்ளே இருக்கும் இருநூற்றுப் பதினாறு அடி உயரமுடைய ஸ்ரீவிமானத்தை நமக்குத் திசை காட்டி நிற்பான். தர்ஜனி முத்திரை காட்டும் கரத்தால் உள்ளே பரசிவனாகிய கயிலைநாதன் இருக்கிறான், எச்சரிக்கையுடன் செல்க எனச் சுட்டுகிறான். உள்ளே இருக்கும் ஸ்ரீவிமானமோ பிரம்மாண்டமான கயிலைமலை என்பதை விஸ்மயக் கரம் காட்டி நமக்கு உணர்த்துகின்றான். பதினெட்டு அடி உயரமுடைய அவ்வாயிற் காவலனின் காலடியில் மிதிபட்டு இருக்கும் பாம்பின் வாயில் திகழும் யானையினை உண்மையான யானையாகக் கற்பனை செய்வோம்.

அவ்வாறெனின் பாம்பு எவ்வளவு பெரிது, அதனை மிதித்திருக்கும் அவன் பாதம் எவ்வளவு பெரியது, அப்பாதத்திற்குரிய அவன் உயரம் எவ்வளவு என்பதைக் கற்பனை செய்து பார்ப்போமாயின் அவனே வானத்தளவு உயரமுடையவனாகத் தோன்றுவான். அவன் கரம் விஸ்மயம் காட்டுவதை வைத்து நோக்கும்போது உள்ளே திகழும் ஸ்ரீவிமானமாகிய கயிலாய மலை எவ்வளவு பிரம்மாண்டம் என்பதை உணர்வோம்.

திருஞானசம்பந்தர் கூறியுள்ள, “பரிய கறிற்றை அரவு விழுங்கி மழுங்க இருள் கூர்ந்த கரிய மிடற்றா் தம் கயிலை மலை” நம் முன் காட்சியாகத் தோன்றும். தேவாரப் பனுவல்களில் சோழநாட்டு சிற்பிகள் ஆழங்கால்பட்ட திறத்தால்தான் இத்தகைய படைப்புகளை உருவாக்க முடிந்தது.சோழர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தோடு நெருங்கிய உறவு கொண்டிருந்த கெமர் அரச மரபினர் தற்போது தாய்லாந்தில் ஃபனாம்ரங் எனும் மலைமீது ஒரு சிவாலயத்தை எழுப்பி அதனை கயிலாசம் எனவே போன்றினர்.

அக்கோயிலின் வாயில் ஒன்றில் காரைக்காலம்மையார் தாளமிட பத்துக் கரங்களுடன் நடனமாடும் சிவபெருமானின் சிற்பமொன்றுள்ளது. அதற்குக் கீழாக பாம்பணையில் பள்ளிகொண்ட பெருமான் இலக்குமிதேவியோடு காணப்பெறுகின்றார். இக்காட்சிக்கு இருபுறமும் இருபெரும் அன்னப்பறவைகள் தங்கள் அலகுகளால் யானை ஒவ்வொன்றினை கொத்தித் தூக்கிச் செல்கின்றன. இக்காட்சி திருப்பாற்கடல் மற்றும்  ஸ்ரீகயிலாசம் ஆகியவற்றின் பிரம்மாண்டத்தை நமக்குக் காட்டி நிற்கின்றது.

இத்தகைய சிற்ப அல்லது ஓவிய உத்திகளை மீநடப்பியல் (செர்ரியலிசம்) என உலகக் கலை வல்லோர் குறிப்பர். 1912ஆம் ஆண்டு காலகட்டத்தில்தான் பிரெஞ்சு நாட்டு ஓவியர்கள் செர்ரியலிச கோட்பாட்டுப் படைப்புகளை உலகுக்கு அறிமுகப்படுத்தினர் என்பர். ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பே மாசுணத்து வாயகப்பட்ட மதக்களிறு பற்றி நற்றிணை, மலைபடுகடாம், அகநானூறு போன்ற சங்கத் தமிழ் நூல்களிலும் பின்னர் திருமங்கை ஆழ்வாரும், கம்பரும் குறிப்பிடுவதை அறியலாம். இவைபோன்றே திருஞானசம்பந்தர் தம் பதிகத்திலும், சோழனின் சிற்பிகள் தங்கள் சிற்பப் படைப்புகளிலும் இத்தகைய கோட்பாடுகளைக் கையாண்டுள்ளனர் என்பது தமிழர்தம் மரபுப் பெருமையாகும்.

Related posts

நவராத்திரி நாயகிகள்

விதவிதமான நவராத்திரிகள்

நவராத்திரி கொலுவின் மகிமை!