ரூ.38 லட்சம் மின் கட்டணம் பாக்கி இருளில் மூழ்கி கிடக்கும் பாம்பன் சாலைப்பாலம்

ராமேஸ்வரம் : பாம்பன் சாலை பாலத்திற்கு ரூ.38 லட்சத்திற்கு மேல் மின்கட்டண பாக்கியை தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டாததால், சாலைப்பாலம் பல மாதங்களாக இருளில் மூழ்கி கிடக்கிறது. ராமேஸ்வரம் அருகே பாம்பன் – மண்டபத்தை இணைக்கும் வகையில் கடலில் சாலைப்பாலம் அமைந்துள்ளது. பாலத்தின் இரு பக்கத்திலும் நடைமேடையில் மின்விளக்குகளுடன் கூடிய 181 மின்கம்பங்கள் உள்ளன. இரவு நேரத்தில் இந்த விளக்குகளால் பாலம் வெளிச்சம் அடைந்து மிளிரும்.

சாலைப்பாலம் பயன்பாட்டுக்கு வந்த காலத்தில் இருந்து மின் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறையே செலுத்தி வந்துள்ளது. தற்போது, பாம்பன் சாலை பாலத்தில் மின்விளக்குகள் பல மாதங்களாக எரியாமல் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதனால் இரவில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதை சரி செய்ய தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பாம்பன் சாலை பாலத்திற்கு பல ஆண்டுகளாக மின் கட்டணம் செலுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது’’ என்றனர். கடந்த 2016ம் ஆண்டில் இருந்து நடப்பாண்டு வரை உள்ள மின் கட்டணம் முழுவதும் செலுத்தாமல் நிலுவையில் போடப்பட்டுள்ளது. இதில் ஒரு இணைப்பில் சுமார் ரூ.29 லட்சமும், மற்றொன்றில் ரூ.9 லட்சம் என மொத்தம் ரூ.38 லட்சத்துக்கு மேல் செலுத்தாமல் மின்கட்டண பாக்கியாக உள்ளது.

நிலுவையில் உள்ள மின் கட்டண பாக்கியை செலுத்த அறிவுறுத்தி தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு பலமுறை மின்வாரியம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையில் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. இருளில் வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே, சுற்றுலாப்பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், பாம்பன் சாலை பால மின் கட்டண பிரச்னையை சரி செய்ய அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது

மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்