பனங்கிழங்கு…

இயற்கையின் கொடை!

மிகப்பெரிய பழக்கடைகளிலோ, பகட்டான சூப்பர் மார்க்கெட்டுகளிலோ அதிக பணம் கொடுத்து சத்தான பொருட்கள் என நினைத்து பல பொருட்களை நாம் வாங்கிச் சாப்பிடுகிறோம். ஆனால் சில பொருட்கள் நமக்கு எளிதாகவே கிடைக்கிறது. சந்தையில் அதற்கு இருக்கும் மதிப்பைக் கணக்கிட்டு நாம் அவற்றை உதாசீனப்படுத்தி விடுகிறோம். அத்தகைய பொருட்களில் ஒன்றுதான் பனங்கிழங்கு. பார்ப்பதற்கு சாதாரணமாகத்தான் தெரியும். ஆனால் பனங்கிழங்கின் மகிமைகளை சொல்லி மாளாது. இந்தத் தகவல்களைப் படிக்கும்போது, சாலை சிக்னல்களில் கூறு கட்டி விற்கப்படும் பனங்கிழங்கை நீங்கள் நிச்சயம் வாங்கிச் செல்ல வேண்டும் என்று நினைப்பீர்கள்! பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இவை குளிர்ச்சித்தன்மை மிக்கவை. பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால், உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும்.

பனங்கிழங்குடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டால், உடல் உறுப்புகள் பலம்பெறும். பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும். பனங்கிழங்கில் வாயுத்தொல்லை இருப்பதால், இதைத் தவிர்க்க பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம். இனிப்பு தேவைப்படுகிறவர்கள் கருப்பட்டி சேர்த்து இடித்துச் சாப்பிடலாம். பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூமியில் இருந்து பனங்கிழங்கை பிரித்தெடுக்கும்போது, விதையில் இருந்து தவின் கிடைக்கும். இந்தத் தவினைச் சாப்பிட்டால் வயிற்றுவலி, ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட நோய்கள் குணமாகும். வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு பிரச்னை உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். பனங்கிழங்கை அரைத்து மாவாக்கி அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். பனங்கிழங்கில் பித்தம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். இதைச் சாப்பிட்டப் பின் 5 மிளகை எடுத்து வாயில் போட்டு மென்று விட வேண்டும்.

பனங்கிழங்கை சிறிது மஞ்சளுடன் சேர்த்து வேகவைத்து, பின்னர் கிழங்கை வெயிலில் காய வைத்து, அதை மாவாக்கி, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட, உடலுக்கு வலு கிடைப்பதுடன் ஆரோக்கியமும் அதிகரிக்கும். பனங்கிழங்கில் இரும்புச் சத்து மட்டுமின்றி நார்ச்சத்தும் அதிகமாக இருக்கிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படுவதைக் குணமாக்கும். அவித்த பனங்கிழங்கை வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொண்டு தேவைப்படும்போது உண்ணலாம். இது நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.பனங்கிழங்கை அவித்து காய வைத்து பொடித்து, அதில் சர்க்கரை மற்றும் தேங்காய் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இந்தக் கிழங்கை அவித்து, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து துவையலாகவும் உண்ணலாம்.பனங்கிழங்கு குளிர்ச்சியைத் தந்தாலும், குளிர் காலத்தில் உடல் வெப்பத்தை சீராக வைத்திருக்கவும் இது உதவுகிறது. வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் ஆற்றலும் பனங்கிழங்கில் இருக்கிறது. அப்புறம் என்ன? பனங்கிழங்கை ஒரு கை பார்த்து விடலாமா?

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு