பள்ளிப்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை: கணக்கில் வராத ரூ.11 லட்சம் சிக்கியது

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய இடைத்தரகர்கள் உதவியுடன் அலுவலக பணியாளர்கள் அதிக அளவில் கமிஷன் பெறுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பள்ளிப்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சார் பதிவாளர் (பொறுப்பு) மோகன்ராஜ் என்பவர் பத்திரப்பதிவு எழுத்தர் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான காரில் பள்ளிப்பட்டு இருந்து சோளிங்கர் நோக்கி சென்று கொண்டிருந்த போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காரை மடக்கி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று காரில் கட்டு கட்டாக மறைத்து வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று கணக்கு சரிபார்த்தத்தில் ரூ.11 லட்சம் கணக்கில் வராத பணம் உறுதி செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றிய ரூ.11 லட்சத்திற்கான ஆவணங்களை கேட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சார் பதிவாளரிடம் ரூ.11 லட்சம் பணம் சிக்கிய சம்பவம் பள்ளிப்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு