பள்ளிப்பட்டு அருகே திரவுபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே திரவுபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியில் கிராமமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வடகுப்பம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். வடகுப்பம், சாமிநாயுடு கண்டிகை, முனுசாமி நாயுடு கண்டிகை, கொல்லப்பள்ளி, ஆகிய கிராமமக்கள் ஒருங்கிணைந்து விழாவை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டுக்கான திருவிழா மே 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடைபெற்றது. விழாவில் அம்மனுக்கு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு தினமும் கிராம வீதியுலா நடைபெற்றது. பகல் நேரங்களில் மகாபாரத சொற்பொழிவு, இரவில் தெரு கூத்து நடைபெற்று வந்தது. விழாவில் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. மதியம் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியில் கிராமமக்கள் எராளமானோர் பங்கேற்றனர்.

பீமன், துரியோதனன் வேடமிட்ட தெருக்கூத்து கலைஞர்கள் தத்ரூபமாக நாடகம் அரங்கேற்றி காண்போரை வெகுவாக கவர்ந்தனர். மாலை தீமிதி திருவிழாயொட்டி காப்பு கட்டிய 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா யொட்டி திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பள்ளிப்பட்டு மத்திய ஒன்றிய திமுக செயலாளர் பி.டி.சந்திரன் விழாவில் பங்கேற்றார். அவருக்கு கோயில் விழாக்குழு தலைவர் ஏகநாதம் வரவேற்று கோயில் பிரசாதம் வழங்கினார். திமுக நிர்வாகிகள் கோவர்தன், வி.வி.மணி, மீசை வெங்கடேசன் உட்பட கிராமமக்கள் கலந்துக்கொண்டனர்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு