பல்லாவரத்தில் கஞ்சா விற்பனை: திரிபுராவை சேர்ந்த 4 பேர் கைது

பல்லாவரம்: சென்னை பல்லாவரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கும்பல் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்துவருவதாக குன்றத்தூர் மதுவிலக்கு மற்றும் போதை பொருட்கள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் மாலதி தலைமையில், உதவி ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், சுரேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பல்லாவரம் ரயில் நிலையம் அருகே 4 வடமாநில இளைஞர்கள் நின்றிருந்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதனால் அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை போட்டபோது 30 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

இதுபற்றி நடத்திய விசாரணையில், அவர்கள் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த சைமன் டிப்பர்மா(32), சஞ்சு டிப்பர்மா(27), ஜெமிஷ் டிப்பர்மா(22), சுரஜ் டிப்பர்மா (32) என்பது தெரிந்தது. இவர்கள் பல்லாவரம் பகுதிகளில் உள்ள சாலையோர டீ கடைகள், உணவகங்களில் வேலை செய்துகொண்டே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்துள்ளனர் என்று தெரிந்தது. சொந்த ஊருக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பும்போது நேரடியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வராமல் அங்கிருந்து பெங்களூரூ வந்து பின்னர் அங்கு முன்னரே ஆந்திராவில் இருந்து கொண்டு வந்து பதுக்கிய கஞ்சாவை, பண்டல், பண்டலாக பிரித்து மீண்டும் ரயிலில் பல்லாவரம் பகுதிக்கு கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரியவந்தது.

இவ்வாறாக கடந்த ஒரு வருடமாக பல்லாவரம் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததாக தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

ஜிகா வைரஸ் பரவல்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை

உத்தரப் பிரதேசத்தில் ஆன்மீக சொற்பொழிவு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரிப்பு!!

காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு