பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.4.35 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

தாம்பரம்: பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அஸ்தினாபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், செங்கல்பட்டு, பல்லாவரம், குன்றத்தூர், கிண்டி, தி.நகர், பிராட்வே, சேலையூர், மேடவாக்கம், சோழிங்கநல்லூர், திருவான்மியூர் என பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் சென்று வருகிறது. தினசரி 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அஸ்தினாபுரத்தில் உள்ள பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து மூலம் பயணம் செய்கின்றனர். இவ்வாறு பொதுமக்களுக்கு மிகவும் முக்கியத்துவமான, எப்போதும் பரபரப்பாக காணப்படும் பேருந்து நிலையத்தின் நிலம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

தற்போதைய பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, அதை மீட்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், சட்டமன்றத்தில் தொடர்ந்து இதுதொடர்பாக வலியுறுத்தி வந்தார். இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பில் நிலம் அரசுக்கு சொந்தமானது என உறுதியானதை தொடர்ந்து அந்த நிலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்ட திட்டமிட்டு மொத்தம் உள்ள 12,800 சதுர அடி கொண்ட நிலத்தில் 1750 சதுர அடியில் ஆறு பேருந்துகள் நிற்கும்படி பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நேற்று பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 39வது வார்டு திருமலை நகர், முதல் பிரதான சாலையில் மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் 1.075 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் புதிய மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் சரஸ்வதி நகர் பகுதியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் பாதாள சாக்கடை விரிவாக்க பணிகளை எம்எல்ஏ இ.கருணாநிதி ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்கவும், அதே பகுதியில் உள்ள பூங்காவின் விரிவாக்க பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, பகுதி செயலாளர் ஏ.கே.கருணாகரன், திமுக நிர்வாகிகள் க.ரமேஷ், எம்.இளவரசன், லோ.டில்லிபாபு, மாநகராட்சி மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி