பல்லாவரம், கூடுவாஞ்சேரி இடையே புறநகர் ரயில்களை நெரிசல் நேரங்களிலாவது இயக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; ஆகஸ்டு 3ம் தேதி முதல், ஆகஸ்டு 14ம் தேதி வரை, சென்னை புறநகர் ரெயில்கள் பல்லாவரத்துக்கும் கூடுவாஞ்சேரிக்கும் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் வாடகை தந்து குடியிருக்க வருமானம் இல்லாத பல லட்சம் மக்கள், நகரத்தை விட்டு 30, 40 கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் புறநகர்களில் குடியிருந்து கொண்டு தினமும் சென்னைக்கு வந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.

புறநகர் ரெயில்களை நம்பியே அவர்கள் அவ்வளவு தூரத்துக்கு சென்றார்கள். இத்தனை நீண்ட நாட்களுக்கு ரெயில்களை நிறுத்துவது அவர்களது வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இப்போது ஓடிக் கொண்டிருக்கும் ரெயில்களே கூட, காலையும் மாலையும் நெரிசலான 6 மணி நேரத்தில் போதுமானதாக இல்லை. ஒரே ஒரு ரெயிலில் செல்லும் மக்களுக்கு குறைந்தபட்சம் 25 பேருந்துகள் தேவைப்படும். இத்தனை பேருந்துகளை சாலைகளில் இயக்குவது சாத்தியமற்றது.

சென்னை நகருக்குள்ளாக மெட்ரோ ரெயில் திட்ட சுரங்கப்பாதை அமைக்கப்படும் போது கூட போக்குவரத்து இயக்கம் தடைப்படவில்லை. ரெயில் தடத்தில் பணிகள் நடந்தாலும், 12 நாட்களுக்கு தென்பகுதிக்கு புறநகர் ரெயில் எதுவும் கிடையாது என ரத்து செய்வது செய்திருப்பது, சாதாரண மக்கள் நலன் மீது ரெயில்வேக்கும் மத்திய அரசுக்கும் இருக்கும் அலட்சியத்தை காட்டுகிறது.

எனவே ஞாயிறு மட்டும் ரெயில்களை நிறுத்துவதற்கும், மற்ற வார நாட்களில் நெரிசல் மிக்க நேரங்களிலாவது ரெயில்களை இயக்குவதற்கும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மிலாது நபி பண்டிகைக்கான அரசு விடுமுறை செப்.16-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதி அறிவித்து தமிழக அரசு உத்தரவு

வறட்சியைத் தாங்கி வளரும் நெல்ரகம் காட்டுயானம்!

இந்த ஊரில் துளசிதான் முதன்மைப்பயிர்!