பல்லடம் அருகே 4 பேர் படுகொலை கைதான வாலிபர் தப்பியோட முயன்றதால் கால் முறிந்தது: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குதித்தார்

திருப்பூர்: பல்லடம் அருகே பாஜ நிர்வாகி உள்பட 4 பேர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் கைதான வாலிபர் தப்பியோட முயன்று மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து குதித்ததால் அவரது கால் முறிந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (49). தவிடு புண்ணாக்கு வியாபாரி. பாஜ கிளைத்தலைவராகவும் இருந்து வந்தார். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் மது அருந்திய 3 பேரை கண்டித்துள்ளார்.

இதையடுத்து இரவில் அவரது வீட்டிற்கு சென்று மோகன்ராஜ், அவரது தம்பி செந்தில்குமார், தாய் புஷ்பவதி (68), சித்தி ரத்தினாம்பாள் (59) ஆகிய 4 பேரை வெட்டிக்கொலை செய்துள்ளனர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக வெங்கடேஷ் என்பவர் தனது நண்பர்கள் செல்லமுத்து, சோனை முத்தையா ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிந்து, செல்லமுத்துவை நேற்று முன்தினம் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்ற செல்லமுத்துவை அழைத்து சென்றபோது, போலீசாரிடம் இருந்து தப்பிக்க மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து செல்லமுத்து குதித்தார்.

இதில், அவரது வலதுகாலில் முறிவு ஏற்பட்டது. அவரை போலீசார் மீட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தலைமறைவான வெங்கடேஷ், சோனை முத்தையா ஆகியோரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதனிடையே மோகன்ராஜ், செந்தில்குமார், புஷ்பவதி, ரத்தினம்மாள் ஆகியோரது உடல்கள் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. ஆனால் உறவினர்கள் உடல்களை பெற மறுத்து, குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நேற்று 2வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து எஸ்பி சாமிநாதன், ஒருவரை கைது செய்துவிட்டதாகவும், மற்ற 2 பேரையும் விரைவில் கைது செய்துவிடுவோம் என்றும் உறுதியளித்தார். அதன்பின் 4 பேரின் உடல்களையும் உறவினர்கள் பெற்றுச் சென்று இறுதிச்சடங்கை செய்தனர்.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை