பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு 1,003 ஆய்வு கட்டுரைகள் வரப்பெற்றுள்ளன: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: பழனி, முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு 1,003 ஆய்வுக் கட்டுரைகள் வரப்பெற்றுள்ளன என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று அமைச்சர் சேகர் பாபு தலைமையல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநாட்டை சிறப்பாக நடத்துவதும் குறித்தும், முன்னேற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில்: முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, மொரீசியஸ், ஹாங்காங், லண்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து 1,003 ஆய்வுக் கட்டுரைகள் வரப்பெற்றுள்ளன. இந்த ஆய்வுக் கட்டுரைகளை இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு பரிசீலித்து, தகுதி வாய்ந்த கட்டுரைகளை தேர்வு செய்து ஆய்வு மலர்களில் இடம் பெறச் செய்ய வேண்டும்.

மாநாட்டின் அனைத்து அரங்குகளும் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளோடு, கண்காட்சி அரங்கானது முருக பக்தர்கள் வியந்து போற்றும் வகையிலும் சிறப்பாக வடிவமைத்திட வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார். இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், மாநாட்டின் ஓருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் திருக்கயிலாய பரம்பரை, பேரூர் ஆதினம், சிரவை ஆதினம் குமரகுருபரசுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம், சத்தியவேல் முருகனார், சுகிசிவம், தேசமங்கையர்க்கரசி, கூடுதல் ஆணையர்கள் சங்கர், திருமகள், ஹரிப்ரியா, தலைமைப் பொறியாளர் பெரியசாமி, இணை ஆணையர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

வண்ணமயமான நிறைவு விழா

பிந்த்ராவுக்கு சிறப்பு விருது

பிரசார இமெயில்களை ஹேக் செய்த ஈரான்: டிரம்ப் குற்றச்சாட்டு