பழநி கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்பு அகற்றுவதை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பழநி கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கையை கண்காணிக்க ஓய்வு நீதிபதி குழுவை நியமித்துள்ள ஐகோர்ட் கிளை அறிக்கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘பிரசித்தி பெற்ற பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஆண்டுக்கு சுமார் 70 லட்சம் பேர் வரை வருகின்றனர். கிரிவலப்பாதை கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கோயில் நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும், கோயில் நிலங்களை மீட்கவும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் உத்தரவை நிறைவேற்றவில்லை. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘பழநி கோயில் ஆக்கிரமிப்புகள் அவ்வப்போது தொடர்ச்சியாக அகற்றப்படுகிறது. தற்போது தைப்பூச திருவிழாவுக்காக அங்கு அதிகப்படியான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. விழா சீசன் முடிந்ததும் பலரும் கடைகளை காலி செய்துவிடுவர். இதற்கு உள்ளாட்சி தரப்பிலோ, அறநிலையத்துறை தரப்பிலோ எந்தவித அனுமதியும் கிடையாது. ஜன. 5 முதல் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘பல லட்சம் பக்தர்கள் வந்து செல்லும் கோயில் பகுதியில் பக்தர்களுக்கு இடையூறும், ஆக்கிரமிப்பும் இருக்கக் கூடாது. நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை போதுமானதாக இல்லை. ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு தரப்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை கண்காணிக்க ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி வீ.பாரதிதாசன் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இக்குழு ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகளை கண்காணித்து, மேற்கொள்ள வேண்டிய தேவையான நடவடிக்கைகள் குறித்து அறிக்கையளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஜன. 9க்கு தள்ளி வைத்தனர்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு