பழநி கோயிலில் செல்போனுக்கு தடை அமல்

பழநி: அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் உள்ள மூலவர் சிலை அரிய வகை நவபாஷாணத்தால் போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. பல்வேறு மருத்துவ குணம் வாய்ந்த மூலவர் சிலையை தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வருடத்திற்கு சுமார் 1.20 கோடி பக்தர்கள் பழநி கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் ஆர்வ மிகுதியில் மூலவர் சிலையை தங்களது செல்போனில் படம் எடுக்கின்றனர். இந்த படங்கள் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகிறது.

இது தொடர்பாக பக்தர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் செல்போன் கொண்டு செல்வதை தடுக்க அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர். இதையடுத்து அக்.1ம் தேதி (இன்று) முதல் பழநி கோயிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியானது. பக்தர்கள் கொண்டு வரும் செல்போன்களை பாதுகாக்க படிப்பாதை, வின்ச் நிலையம் மற்றும் ரோப்கார் நிலையங்களின் அருகே கைபேசி பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த மையங்களில் ரூ.5 கட்டணம் செலுத்தி, பக்தர்கள் தங்களது செல்போன்களை வைத்துக் கொள்ளலாமென அறிவிக்கப்பட்டது.

இதன்படி இன்று முதல், பழநி கோயிலுக்குள் செல்போன் மற்றும் கேமரா போன்றவை கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது. வின்ச் மற்றும் படிப்பாதை அருகில் அமைக்கப்பட்டிருந்த கைபேசி பாதுகாப்பு மையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது செல்போன்களை வைத்து விட்டுச் சென்றனர்.

Related posts

தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

நவீன பயிற்சி கூடம் மற்றும் ஆய்வுக்கூடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்!

அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து