பழனியில் வரும் 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான அழைப்பிதழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் நேற்று அமைச்சர் சேகர்பாபு சந்தித்து, பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கான அழைப்பிதழை வழங்கினார். தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருகபக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது.

இம்மாநாடு தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் வகையில் அறநிலைத்துறை அமைச்சர் தலைமையில் ஆன்மிக பெரியோர்கள் மற்றும் துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்ட 20 உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவும், அறநிலையத்துறை ஆணையர் தலைமையில் 11 செயற்பாட்டுக் குழுக்களும் அமைக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இம்மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்கள்/ஆய்வு மாணவர்கள் பதிவு செய்திடும் வகையில் தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

அறநிலையத்துறை அமைச்சர் தலைமையில் இம்மாநாடு தொடர்பாக 15 ஆய்வுக் கூட்டங்களும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோர் பழனியில் மாநாட்டு பணிகளை 4 முறை களஆய்வும், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 2 முறை அனைத்துத் துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

இம்மாநாட்டின் நிறைவு நாளில் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்