ஜல்லிக்கட்டு போலவே ஃபேமஸ்… பாலமேடு கொத்துமஞ்சள்!

தமிழ்நாட்டில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புராதன நகரங்களுள் மதுரைக்கு முக்கிய இடம் உண்டு. இங்கு தை மாதத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி சர்வதேச கவனத்தை எப்போதும் ஈர்க்கும். குறிப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மதுரையின் அடையாளமாகவே மாறி இருக்கிறது. அலங்காநல்லூரைப்போல பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியும் உலகப்புகழ் கொண்டதாக இருக்கிறது. ஜல்லிக்கட்டைப்போலவே, இங்கு விளையும் மஞ்சளும் பாலமேட்டுக்கு ஒரு சர்வதேசப் புகழைக் கொடுத்திருக்கிறது. இப்பகுதியில் உள்ள சாத்தையாறு அணைக்குக் கீழிருக்கும் கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மஞ்சள் சாகுபடி சிறப்பாக செய்யப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் மஞ்சள் விளைந்தாலும், பாலமேடு பகுதி மஞ்சள் மகத்துவம் மிகுந்ததாக விளங்குகிறது. பாலமேடு பகுதியில் எர்ரம்பட்டி, கோவில்பட்டி, கோணப்பட்டி, அய்யூர் துவங்கி மீனாட்சிபுரம் வரை மஞ்சள் வயல் நீண்டிருக்கிறது. இந்தப் பகுதிகளில் விளையும் மஞ்சள் மதுரை, கோவை, பொள்ளாச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகளால் விரும்பி வாங்கப்பட்டு, உள்ளூருக்குள்ளும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய மகத்துவம் மிக்க மஞ்சள் சாகுபடி குறித்து அறிய பாலமேட்டுக்குப் பயணமானோம். பாலமேடு அருகில் உள்ள அய்யூர் கவி நகரில் மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டு வரும் சரவணன் என்பவரைச் சந்தித்தோம்.

“ தமிழ்நாட்டில் வேறு எங்கும் இப்படி யொரு மஞ்சளைப் பார்க்க முடியாது. அளவில் பெரிதாக, நல்ல நிறத்துடன், தூக்கலான வாசனையோடு, சமையலுக்கு தனிச்சுவை தருவதாக இது இருக்கும். காரணம் மண்ணின் வாகுதான். பொதபொதவென மண் இருப்பதால் நல்ல விளைச்சலும், நிறமும் கிடைக்கிறது. கண்மாய்க் கரம்பையாக, செம்மண், வண்டல் மண் கலவையாக மண்வளம் இருக்கிறது. அத்தோடு சாத்தையாறு அணைத்தண்ணீரின் செழிப்பும் சேர்ந்து கொள்கிறது. மேலும் பழமை மாறாத பெருமைக்குரியதாக இந்த மஞ்சள் விவசாயத்தை நாங்கள் பாதுகாத்து வருகிறோம். என்னதான் ஹைபிரிட் ரகங்கள் ஏராளம் வந்தபோதும், இந்தப் பகுதியில் நாட்டு ரக மஞ்சளையே எப்போதும் சாகுபடி செய்கிறோம். மஞ்சள் விதைக் கிழங்குகளை நாங்கள் வெளியில் வாங்குவதில்லை. வயல்களில் விளையும்போதே விதைக்கு என ஒரு பகுதியை எடுத்து பாதுகாத்து வைக்கிறோம். நன்கு விளைந்த மஞ்சளின் ஒரு பகுதியை அவிக்கும் முன்பு விதைக்கென எடுத்து வைக்கிறோம். வயலின் ஒரு மூலையில் மணல் கொட்டி அதன்மீது இந்த மஞ்சள் விதைக் கிழங்குகளைப் பரப்பி வைத்து, மேற்புறம் வைக்கோல் போட்டு அதன் மீது களிமண் பூசி, ஆங்காங்கே சிறு துவாரங்கள் போட்டு விடுகிறோம். அதிகபட்சம் 2 மாதங்களுக்கு இந்த விதைக்கிழங்குகள் பாதுகாக்கப்படுகிறது. இதில் சில வேர்விட்டு, அரை அடிக்கு கிளை பரப்பி முளைக்கவும் செய்யும். ஆனாலும் இதுவும் விதைப்புக்கு உதவும். அடுத்த போகத்திற்கு இந்த விதைகளைப் பயன்படுத்துகிறோம்.

இவ்வாறு மரபு மாறாமல் ஒரே மாதிரியான தரத்தில் சாகுபடி செய்வதால், எங்கள் பாலமேடு மஞ்சளுக்கு எப்போதும் மவுசு இருக்கிறது’’ என பாலமேடு மஞ்சளின் சிறப்புகளோடு பேச ஆரம்பித்தார் சரவணன். ‘‘ஆனி, ஆடி மாதத்தில் நாங்கள் மஞ்சள் சாகுபடியை ஆரம்பிப்போம். பங்குனி, சித்திரையில்தான் முழு மஞ்சள் விளைந்து வெட்டியெடுக்க முடியும். ஆனாலும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, இடையில் தை மாதத்திலேயே கொத்து மஞ்சளுக்காக பச்சைச்செடியோடு மஞ்சள் கிழங்குகளையும் சேர்த்து வெட்டி எடுக்கிறோம். கொத்து மஞ்சள் பிஞ்சு மஞ்சளாக இருக்கும். பொங்கல் பானைக்கு கட்டுவதற்கும், படையலுக்கு பயன்படுத்துவதற்கும் வயலில் ஒரு பகுதியில் கொத்து மஞ்சள் அறுவடை செய்வோம். எஞ்சியுள்ள மஞ்சள் செடிகளைப் பராமரித்து 4 மாதங்கள் கழித்து முற்றிய மஞ்சளாக அறுவடை செய்வோம். பல நேரங்களில் மஞ்சள் செடிகளில் பூச்சி விழுந்து இலைகள் சேதமாகும். இவற்றை பொங்கலுக்கான கொத்து மஞ்சளுக்கு பயன்படுத்த முடியாது. வெட்டு மஞ்சளுக்குத்தான் போகும். மஞ்சள் கிழங்கை விதைத்ததில் இருந்து 6 மாதத்தில் செடி வளர்ந்து பூ பூக்கும். இதை வைத்து தரைக்கு கீழே இருக்குற மஞ்சள், பாதியளவுக்கு விளைச்சலுக்கு வந்திருக்கிறது என தெரிந்துகொள்வோம். கூடுதலாக 2 மாதம் விட்டு எடுத்தால் பொங்கலுக்கான கொத்து மஞ்சளுக்கு சரியாக இருக்கும் என கணிக்கிறோம்.
நாங்கள் பெரும்பாலும் ரசாயன உரம் எதையும் பயன்படுத்துவது கிடையாது. இயற்கை உரங்களையே பயன்படுத்துகிறோம்.

ஆனி, ஆடி மாதத்தில் நிலத்தை கட்டியில்லாமல் நன்றாக உழவு செய்து, ரோட்டோவேட்டர் ஓட்டி சமப்படுத்துவோம். மாட்டு எரு மற்றும் ஆட்டு எருவை தொழுவுரமாகப் பயன்படுத்துகிறோம். பிறகு மண்ணைக் கிழித்து பார் போட்டு மஞ்சள் விதைப்போம். விதைப்பதற்கு முன்பு தரமான மஞ்சள் செடிகளில் இருந்து அறுவடை செய்யப்பட்ட மஞ்சள் கிழங்குகளை சாணிப்பாலில் நனைத்து, குறைந்தது 2 மாதம் முதல் 3 மாதம் வரை வைத்திருந்து பக்குவப்படுத்துவோம். பின்னர் அதை எடுத்து நடவு செய்வோம். நடவு செய்ததில் இருந்து 15 முதல் 30 நாட்களில் செடிகள் முளைத்து செழித்து வளரும். செடி வளர்ந்த பிறகு ஆறேழு முறை களையெடுத்து, இயற்கை உரம் போடுவோம். வாரத்திற்கு ஒருமுறை பாசனம் செய்வோம். இவ்வாறு பராமரித்து வர, கார்த்திகை மாதத்தில் விரலி மஞ்சளுக்கான கால் பிரியும். புரட்டாசி பிறந்ததும் ஒரு களையெடுப்போம். பங்குனி, சித்திரையில்தான் மஞ்சள் அறுவடைக்குத் தயாராகும். ஒரு தூருக்கு குறைந்தது கால் கிலோ மஞ்சள் மகசூலாக கிடைக்கும். அறுவடை செய்த மஞ்சளை முதலில் ஓரிடத்தில் குவித்து வைப்போம். அதன் அருகாமையில் நான்கு அடிக்கு பள்ளம் தோண்டி, டிரம்களில் கொஞ்சம் மாட்டுச் சாணம் கலந்த தண்ணீருக்குள் மஞ்சள் கிழங்குகளைப் போட்டு நெருப்பு மூட்டி அவித்தெடுத்து, வயல் பரப்பில் கொட்டிக் காயவைப்போம். அவிக்காவிட்டால் மஞ்சள் அழுகி சேதமாகிவிடும். அவித்து காயவிட்டதை அதிகபட்சமாக ஐந்தாறு மாதத்திற்கு பூச்சி தாக்காமல் பாதுகாக்க வேண்டும். இந்த மஞ்சளை இதற்கான மிஷினில் போட்டு தேய்த்தெடுத்து ‘பாலீஷ்’ போடுவோம். பாலீஷ் போட்ட மஞ்சளை ஒன்றரை மாதத்திற்குள் விற்றாக வேண்டும். அதை அப்போது விற்பனை செய்துவிடுவோம். இதில் ஒரு குறிப்பிட்ட தொகை லாபமாக கிடைக்கும்.

இறுதி அறுவடையை விட பொங்கலை ஒட்டி செய்யப்படும் அறுவடைதான் பாலமேடு மஞ்சளுக்கு பெயர் வாங்கிக் கொடுத்திருக்கிறது. பொங்கலையொட்டி அறுவடை செய்வதற்காகவே பாலமேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் மஞ்சள் கிழங்குச் செடிகள் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. பொங்கல் சமயங்களில் வியாபாரிகள் எங்கள் வயலுக்கே நேரடியாக வந்து செடிக்குத் தகுந்தவாறு மொத்தமாக விலைபேசி வாங்கிச் செல்கிறார்கள். அவர்கள் ஒரு செடி ரூ.20 முதல் 30 வரை விலை வைத்து கொள்முதல் செய்கிறார்கள். குறைந்தது 10 சென்ட் முதல் 50 சென்ட் வரை உள்ள செடிகளை அறுவடை செய்து விற்பனை செய்வோம். ஒரு சென்ட் நிலத்தில் சராசரியாக 50 செடிகள் இருக்கும். ஒரு செடி சராசரியாக ரூ.25க்கு விற்றாலும் ஒரு சென்ட் நிலத்தில் ரூ.1250 வரை வருமானம் கிடைக்கும். 10 சென்ட் நிலத்தில் ரூ.12,500 வருமானமாக கிடைக்கும். 50 சென்ட் நிலத்தில் ரூ.62,500 வருமானமாக கிடைக்கும். இது நமக்கு உபரி வருவாய்தான். 4 மாதம் கழித்து முற்றிய மஞ்சளை அறுவடை செய்யும்போதுதான் முழு வரவு செலவு தெரியவரும். எப்படி பார்த்தாலும் இது நமக்கு லாபம் தரும் பயிர்தான்’’ என்கிறார் சரவணன்.
தொடர்புக்கு:
சரவணன்: 98430 66882

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது