பாலக்காடு மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் நவீன இயந்திரங்கள் மூலம் மும்முரம்

*1 மணி நேரத்திற்கு ரூ.2,600 வரை வாடகை வசூல்

பாலக்காடு : பாலக்காடு மாவட்டத்தில் விளை நிலங்களில் நெல் அறுவடை பணிகள் நவீன இயந்திரங்கள் மூலம் மும்முரமாக துவங்கியது. இந்த இயந்திரங்களுக்கு 1 மணி நேரத்திற்கு ரூபாய் 2 ஆயிரத்து 400 முதல் 2 ஆயிரத்து 600 வரையில் வாடகை பெறப்படுகிறது. பாலக்காடு மாவட்டத்தில் பாலக்காடு, சித்தூர், ஆலத்தூர், மன்னார்காடு, வடக்கஞ்சேரி, தத்தமங்கலம், கொடும்பு ஆகிய பகுதிகளில் நெல் பயிரிடப்பட்டது.

இந்நிலையில் வயக்காடுகளில் நெல் அறுவடை பணிகள் தமிழகம் பொள்ளாச்சி, உடுமலை, பழநி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து நெல் அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு துவங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களுக்கு 1 மணி நேரத்திற்கு ரூபாய் 2 ஆயிரத்து 400 முதல் 2 ஆயிரத்து 600 வரையில் வாடகை பெறப்படுகிறது. ஒரு மணி நேரத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் பயிர் செய்துள்ள நெல் பயிர்கள் அறுவடை செய்ய முடிகிறது.

கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட வாடகை தொகையே இந்த முறையும் அறுவடை இயந்திரங்களுக்கு ஓட்டுநர்கள் மூலம் வசூல் செய்யப்படுகிறது. இந்த இயந்திரங்கள் மூலமாக அறுவடை செய்தால் நெல் தனியாகவும், வைக்கோல் தனியாகவும் வேறுபட்டு விடுவதால் விவசாயிகள் இரட்டிப்பு வேலை சுமைகள் இல்லை.

மேலும், அறுவடை இயந்திரங்களில் டயர் பிடிப்புடன் வயக்காடுகளில் இறக்கப்படுவதால் வைக்கோல் கெடுவதில்லை. இவற்றை வேறு இயந்திரங்கள் மூலமாக கற்றை கட்டுவதற்கும், தொழிற்சாலைகளுக்கு எடுத்துச்செல்வதற்கும் வசதியாக உள்ளன. தற்போது கேரளாவில் மழை குறைந்துவிட்ட நிலையில் நெல் அறுவடையை விவசாயிகள் வேகப்படுத்தி வருகின்றனர்.

வரும் ஐப்பசி மாதக்கால மழைக்கு முன்னதாக அறுவடை செய்தால் மட்டுமே விவசாயிகளுக்கு பலன் உள்ளது. மழை தொடங்கி விட்டால் நெல்பயிர்கள் அனைத்துமே மழைநீரில் மூழ்கி பாழாகிவிடும் என்னும் அச்சத்துடன் அறுவடையை துவங்கியுள்ளனர். இப்போதைய வெயிலால் நெல் உலர வைக்கவும், அரிசி ஆலைகளுக்கு அனுப்பவும் எளிதாக உள்ளது என பாலக்காடு பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

Related posts

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் அக்.3ம் தேதி தசரா திருவிழா கொடியேற்றம்: 12ம் தேதி நள்ளிரவு மகிஷாசூரசம்ஹாரம்

ஆந்திராவிலிருந்து அரக்கோணத்துக்கு பைக்கில் கடத்தி வந்த 30 கிலோ குட்கா புகையிலை பறிமுதல் : 3 வாலிபர்கள் கைது

மாமல்லபுரம், குற்றாலம் மற்றும் வால்பாறை ஆகிய இடங்களில் புதுப்பிக்கப்பட்ட ஓய்வு இல்லங்கள் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்