நேபாளத்தை 238 ரன் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு நல்ல பயிற்சியாக இருந்தது: கேப்டன் பாபர் அசாம் பேட்டி

முல்தான்: 6 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. முல்தானில் நடந்த முதல் போட்டியில் ஏ பிரிவில் பாகிஸ்தான்-நேபாளம் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 342 ரன் குவித்தது அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 151 ரன் (131 பந்து, 14 பவுண்டரி, 4 சிக்சர்), இப்திகார் அகமது 71 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன் 109 ரன், முகமது ரிஸ்வான் 44 ரன் எடுத்தனர். 102 இன்னிங்கில் 19வது சதம் அடித்து பாபர் புதிய சாதனை படைத்தார். இதற்கு தென்ஆப்ரிக்காவின் ஹசீம் அம்லா 104, விராட் கோஹ்லி 124வது இன்னிங்சில் தான் 19வது சதம் அடித்திருந்தனர். பின்னர் களம் இறங்கிய நேபாளம் அணி பாகிஸ்தான் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 23.4 ஓவரில் 104 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் 238 ரன் வித்தியாசத்தால் அபார வெற்றி பெற்றது. நேபாள அணியில் அதிகபட்சமாக ஆரிப் ஷேக் 26, சோம்பால் கமி 28 ரன் எடுத்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் சதாப் கான் 4, ஹரிஸ் ரவூப், ஷாகின் ஷாஅப்ரிடி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பாபர் அசாம் ஆட்டநாயகன் விருது பெற்றார.

அவர் அளித்த பேட்டி: “நான் உள்ளே சென்று பேட்டிங் செய்தபொழுது பந்து வரவே இல்லை. ஆடுகளத்தில் பந்து இரண்டு விதமான வேகத்தில் வந்தது. நானும் ரிஸ்வானும் ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று பார்த்தோம். பின்னர் ரிஸ்வான் எனக்கு நம்பிக்கை அளித்தார். அடுத்து இப்திகார் வந்ததும் வித்தியாசமான கிரிக்கெட்டை விளையாடினோம். அவர் செட் ஆவதற்கு முன்பு கொஞ்ச நேரம் கஷ்டப்படலாம். அவரிடம் இயல்பான ஆட்டத்தை ஆடச் சொன்னேன். 2, 3 பவுண்டரிகளுக்கு பிறகு அவர் வசதியாக உணர்ந்தார். 40 ஓவர்களுக்குப் பிறகு அவர் அதிரடியில் ஈடுபட்டார்.

எங்களுடைய பந்துவீச்சில் நான் திருப்தி அடைகிறேன். நாங்கள் ஆரம்ப சில ஓவர்களில் இலக்கை எட்டவில்லை. வேகப்பந்துவீச்சாளர்கள் நன்றாக துவங்கினர். ஸ்பின்னர்களும் தாக்கினர். இந்த ஆட்டம் இந்தியாவிற்கு எதிராக விளையாடுவதற்கு முன்பாக நல்ல பயிற்சியாக இருந்தது. ஏனென்றால் இது எங்களுக்கு நல்ல நம்பிக்கையை அளித்து இருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் 100% தர நினைக்கிறோம். அடுத்து இந்தியாவுக்கு எதிராகவும் இதையே தொடர்வோம்” என்றார். இலங்கையின் பல்லேகேலேவில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் 2வது லீக் போட்டியில் பி பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

 

Related posts

டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நீர்வீழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி: 3 பேர் மாயம்

18 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்