நீட் விடைத்தாள் கிழிந்ததாக புகார் விவகாரத்தில் போலி ஆவணங்களை நீதிமன்றத்தில் மாணவி சமர்ப்பித்தது அம்பலம்

லக்னோ: நீட் விடைத்தாள் கிழிந்ததாக நீதிமன்றத்தில் ஒரு மாணவி வழக்கு தாக்கல் செய்திருந்தார். விசாரணையில் அவர் தாக்கல் செய்தது போலி ஆவணங்கள் என தெரியவந்ததால் மனுவை திரும்ப பெறுவதாக அறிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகின. அதில், சில மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் தீவிர போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே நீட் தேர்வு எழுதிய மாணவி ஆயுஷி படேல், தன்னுடைய விடைத்தாள் கிழிந்து விட்டதால் தன்னுடைய மதிப்பெண் முறையாக அறிவிக்கப்படவில்லை என்று வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

மேலும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மாணவி ஆயுஷி படேல் வழக்கும் தாக்கல் செய்தார். அதில், தனது நீட் விடைத்தாள் கிழிந்து விட்டது. அதனால், எனக்கான தேர்வு முடிவு முறையாக அறிவிக்கப்படவில்லை. என்னுடைய விடைத்தாளை கணினி மூலம் இல்லாமல் கைப்பட திருத்த வேண்டும்’ என்று கூறியிருந்தார். மேலும் இதற்கான ஆவணங்களையும் மனுவுடன் அவர் இணைத்திருந்தார். இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, மாணவியின் விடைத்தாள் தொடர்பான ஆவணங்களை தேசிய தேர்வு முகமை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில், ‘மாணவியின் விடைத்தாள் எந்த சேதாரமும் இல்லாமல் அப்படியே இருந்துள்ளது. மாணவி நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என தெரியவந்தது. இதையடுத்து மாணவி மீது தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிமன்றம் கூறிய நிலையில், மனுவை திரும்ப பெறுவதாக மாணவி தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்தார். இதை நீதிபதி ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்தார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்