நெகிழ்ச்சியான நெல் சாகுபடி!

தற்போது பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ரகங்களைப் பயிரிடுவதற்கு என்ன காரணம் என கேட்டால் பல காரணங்களைச் சொல்வார்கள். கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே உள்ள மாவிளை ஆல்பாட்டுவிளை பகுதியைச் சேர்ந்த அமிர்தராஜ் என்பவர் பாரம்பரிய சாகுபடிக்கு வந்த காரணத்தைக் கூறும்போது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களைப்போலவே எதற்காக இவர் பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிடுகிறார் என்ற கேள்வியோடு நல்லிக்குளத்தங்கரையில் உள்ள அவரது வயலில் அவரைச் சந்தித்தோம். “ எங்களுக்குச் சொந்தமாக 35 சென்ட் நிலம் இருக்கிறது. எல்ஐசி முகவராக வேலை பார்க்கும் நான் கடந்த காலங்களில் கன்னிப்பூ சாகுபடியின்போது பொன்மணி ரக நெல்லும், கும்பப்பூ சாகுபடியின்போது அம்பை 16 ரக நெல்லும் பயிரிடுவேன். பாரம்பரிய நெல்லில் மருத்துவக் குணங்கள் இருப்பதாக சிலர் கூறினார்கள். குறிப்பாக சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும் தன்மை இருப்பதாகக் கூறினார்கள். எனது பெற்றோருக்கு சர்க்கரை நோய் உண்டு. அவர்களுக்காக பாரம்பரிய நெல் ரகங்களைச் சாகுபடி செய்ய முடிவெடுத்தேன். அதன்படி எங்களிடம் உள்ள 35 சென்ட் நிலத்தில் 15 சென்ட் நிலத்தை தனியாக பிரித்து அதில் பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு வருகிறேன். கடந்த 3 வருடங்களாக பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு எனது வீட்டுப் பயன்பாட்டிற்காக வைத்துக்கொள்கிறேன். பாரம்பரிய நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசியை பயன்படுத்துவதால், பெற்றோருக்கு உள்ள சர்க்கரை அளவு சீராக இருக்கிறது. மேலும் மூட்டுவலி உள்ளிட்ட உடல்வலியும் குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது’’ என்று பேச ஆரம்பித்த அமிர்தராஜ் மேலும் தொடர்கிறார்.

“ பாரம்பரிய நெல் ரகமான மாப்பிள்ளைச் சம்பா, கட்டிச்சம்பா, கீரைச்சம்பா, தூயமல்லி, சின்னார் உள்ளிட்ட ரகங்களைப் பயிரிட்டு வருகிறேன். தற்போது சின்னார் ரகத்தைச் சாகுபடி செய்திருக்கிறேன். இந்த ரக நெல் அறுவடைக்கு தயாராக இருக்கிறது. பாரம்பரிய ரக நெற்பயிர்கள் அறுவடைக் காலங்களில் சாய்ந்துவிடும். ஆனால் சின்னார் சாயாமல் அப்படியே நிற்கிறது. இந்த ரகத்தைச் சாகுபடி செய்தவுடன், பச்சையுடன் நீலம் கலந்த நிறத்தில் பயிர்கள் வளரத் தொடங்கியது. வெளியே இருந்து பார்க்கும்போது நெல் பயிர்கள் அனைத்தும் தீயில் கருகியதுபோல் இருக்கும். இதைச் சாலையில் செல்வோர் ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்வார்கள். நான் வேலைக்குச் செல்வதற்கு முன்பு வயலுக்குச் சென்று தண்ணீர் பாய்ச்சுவது, உரம் போடுவது போன்ற பணிகளைச் செய்வேன். வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபிறகு வயலில் சில வேலைகளைச் செய்வேன். நான் சாகுபடி செய்து வரும் பாரம்பரிய நெற்பயிர்களுக்கு மாட்டுச் சாணம், மண்புழு உரம், மீன் அமிலம், கடலைப் புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு போடுவேன். பூச்சி விரட்டிக்கு வேப்பெண்ணெய் கரைசலைப் பயன்படுத்துவேன். 15 சென்ட் நிலத்தைத் தவிர மற்ற பகுதிகளில் குமரி மாவட்டத்தில் பரவலாக சாகுபடி செய்யப்படும் ரகங்களைப் பயிரிட்டு அறுவடை செய்து விற்பனை செய்து வருகிறேன்.

சின்னார் ரகத்தை அறுவடை செய்த பிறகு கருப்புக்கவுனி சாகுபடி செய்ய இருக்கிறேன். பாரம்பரிய நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. பாரம்பரிய நெற்பயிரில் மகசூல் குறைவாகத்தான் கிடைக்கும். அதை நெல்லாக மார்க்கெட்டில் விற்பனை செய்யும்போது குறைவான வருமானமே கிடைக்கும். ஆனால் அந்த நெல்லை அவித்து, அரிசியாக்கியோ அல்லது அவலாக மாற்றியோ மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும்போது நல்ல வருமானம் கிடைக்கும். பாரம்பரிய அரிசியின் குறைந்தபட்ச விலையே கிலோ ₹100 என்றுதான் ஆரம்பிக்கும். பாரம்பரிய நெல் இயற்கை விவசாயத்துடன் சாகுபடி செய்யும்போது பல இடங்களில் இருந்து நேரடியாக வந்து வாங்கி செல்வதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். தற்போது சொந்தப் பயன்பாட்டிற்கு மட்டும் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடுகிறேன். வரும் காலங்களில் பரப்பளவை அதிகரித்து சாகுபடி செய்து விற்பனை செய்ய இருக்கிறேன்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
அமிர்தராஜ் – 80129 23297.

Related posts

முதலமைச்சரிடம் நவாஸ் கனி வாழ்த்து பெற்றார்..!!

சென்னையில் ரூ.25 லட்சம் மதிப்பு நகை திருட்டு: 3 பேர் கைது

செருப்பை கழற்றிவிட்டு வரும்படி கூறிய டாக்டருக்கு சரமாரி அடி, உதை