பாரம்பரிய நெல் விதைகளைப் பரவலாக்கும் பட்டதாரி!

தஞ்சையை தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்பார்கள். இப்போது பாரம்பரிய நெல் ரகங்களின் களஞ்சியம் என சொல்லத் தோன்றுகிறது. அந்தளவுக்கு தற்போது தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாரம்பரிய நெல் ரகங்களைச் சேகரிக்கும் விவசாயிகளும், அவற்றைப் பயிரிட்டு பரவலாக்கும் விவசாயிகளும் அதிகரித்து வருகிறார்கள். இந்த வரிசையில் தஞ்சை மாவட்டம் கீழ நெடார் பகுதியைச் சேர்ந்த இளந்திரையன் என்ற விவசாயி பல்வேறு பகுதிகளுக்கு பயணித்து 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களைச் சேகரித்துவருகிறார். அதில் 20க்கும் மேற்பட்ட ரகங்களை தனது நிலத்தில் பயிரிட்டு, மற்ற விவசாயிகளுக்கும் வழங்கி வருகிறார். எம்.காம். எம்.பில்., பி.எட்., என பல படிப்புகளைப் படித்த இவர் சில காலம் தனியார் துறையில் வேலை பார்த்திருக்கிறார். இப்போது அந்த வேலையை உதறிவிட்டு முழுநேர விவசாயியாக மாறியிருக்கிறார். தஞ்சைக்குப் பயணித்து இளந்திரையனைச் சந்தித்தோம். நம்மை வரவேற்றுப் பேசத்தொடங்கினார்.

“அப்பா தர்மராஜன் விவசாய சங்கத்தில் பொறுப்பில் இருந்தார். ஆரம்ப காலத்தில் அவருடன் வயலுக்கு செல்லும்போது விவ சாயம் மீது உருவான ஈர்ப்பு பல தேடல்களை உருவாக்கியது. கடைசியாக பாரம்பரிய நெல் பற்றிய ஆர்வத்தையும் கூட்டியது. தனியார் துறையில் வேலை பார்த்துக்கொண்டே பாரம்பரிய நெல்ரகங்கள் பற்றிய விவரங்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன். உடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்புச் சக்திகளையும் அளிக்கும் இயற்கை விவசாயமும், பாரம்பரிய நெல் ரகங்களும் பற்றி அறிந்துகொண்டு இனி இதுதான் நம் வழி என்று முடிவு செய்தேன்.நம் தமிழகத்தின் பல மாவட்டங்கள் மற்றும் ஒடிசா, கர்நாடகா என பிற மாநிலங்களுக்கும் பயணம் செய்து அங்குள்ள விவசாயிகளிடம் பேசினேன். இப்படி எனது தேடுதலின் பயனாக இப்போது 200க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரக விதைகள் கையிருப்பில் இருக் கி றது. 10 ஆண்டுகளுக்கு முன்பு 100 குழியில் சாகுபடி செய்ய ஆரம்பித்தேன். இப்போது 17 ஏக்கரில் முழுமையாக இயற்கை வழி விவசாயம். அதுவும் நம் பராம்பரிய நெல் வகைகள் மட்டுமே சாகுபடி செய்கிறேன்.

சூரக்குறுவை, கம்பன் சம்பா, காலாபாத், வாளான் சம்பா, மனக்கத்தை, கல்லுடையான், ராமகளி, சொர்ண மயூரி, கொச்சின் சம்பா, ஆற்காடு கிச்சடி, வைகுண்டா, யானைக்கொம்பன், பனக்காட்டு குடவாழை, நாட்டு பாஸ்மதி, பத்ரா, மொட்டக்கூர், கோவிந்த போக், வெள்ளைப் பொன்னி, குழி அடிச்சான், சித்த சன்னா, செம்புலிக்கார், வெள்ளைப் பூங்கார், சாக்கோ பைற்றான், மடுமுழுங்கி, தீக்கார், சண்டிகார், கொத்தமல்லிச் சம்பா, பால்குட வாழை, செம்புலி சம்பா, கருங்குறுவை, வைகறை சம்பா, வாடன் சம்பா, மைசூர் மல்லி, இந்திராணி… இப்படி 200க்கு அதிகமான பாரம்பரிய நெல் ரக விதைகள் என்கிட்ட கையிருப்பு இருக்கு. ஆரம்பத்தில் 100 குழியில் இந்த பாரம் பரிய நெல்ரகங்களை சாகுபடி செய்ய ஆரம்பித்தேன். இதற்காக குறுவை சாகு படிக்காக வயலைத் தயார் செய்ய 3 முறை உழவு செய்த பின்னர் மாட்டுச்சாணம், ஆட்டுப்புழுக்கை என இயற்கை எருவை அடித்து நான்காவது முறையாக உழவு உழுதேன். தொடர்ந்து இரு பிரிவாக ஐம்பது, ஐம்பது குழிகளில் வெவ்வேறு ரகங்களை சாகுபடி செய்யத் தொடங்கினேன். இதில் மைசூர் மல்லி 110 நாட்கள், சொர்ணமசூரி 120 நாட்கள், சித்த சன்னா 130 நாள் பயிர்கள். சித்த சன்னா 6 அடி வளரும். எவ்வளவு மழையாக இருந்தாலும் சாயாமல் நிற்கும். மருத்துவக்குணம் நிறைந்தது. இந்த ரகங்களை நடவு செய்த பிறகு களை எடுத்தல், மீன் அமிலம், அமிர்தக்கரைசல், பஞ்சகவ்யா போன்ற
வற்றைத் தெளிப்பேன்.

இதனால் பூச்சித்தொல்லை இருக்காது. நம் பாரம்பரிய நெல்ரகங்களுக்கு என்று பல்வேறு மருத்துவக்குணங்கள் இருக்கிறது. அதேபோல் பல ரகங்கள் வயல் முழுவதும் தண்ணீர் நின்றாலும் சாயாமல் இருக்கும் தன்மை கொண்டவை. அதிகமாக இயற்கை உரம் தெளிப்பதும் இல்லை. காரணம் செலவைக் குறைத்து வருமானத்தை அதிகரிப்பதுதான் நோக்கம். குறுவை சாகுபடி என்றால் இருமுறை களைஎடுப்பது, மீன் அமிலம் தெளிப்பது மட்டுமே செய்வேன்.பூங்கார் அரிசி மகப்பேறு காலங்களில் உண்ண வேண்டிய அரிசி. தாய்ப்பால் சுரக்கும். கட்ட சம்பா அரிசி நோய் எதிர்ப்பு சக்தி தரும். சிங்கினிக்கார் அரிசி எல்லா விதமான நோயாளிகளும் உண்ண வேண்டிய அரிசி. உடல்நலம் பெற உதவும். இலுப்பைப்பூ சம்பா அரிசி சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். மூட்டு வலி, பக்கவாதம் போன்ற நோய்க்கான மருந்து. நரம்புப் பிரச்னையின் மருந்து. காட்டுயானம் அரிசியில் கஞ்சி வைத்து கறிவேப்பிலை போட்டு மூடி வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்தால் புற்றுநோயால் ஏற்படும் புண்கள் ஆறும்.

சூரக்குருவை அரிசி நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக தரும். பனங்காட்டுக் குடவாழை அரிசியை தொழிலாளர்களின் தோழன் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு நோய் எதிர்ப்பும், உடல் வலிமையையும் தரும். கருடன் சம்பாநோய் எதிர்ப்புச் சக்தி தரும். சாப்பாடு மற்றும் பலகார அரிசி. கருங்குறுவை அரிசி நெல் கருநிறமாக இருக்கும். அரிசி செந்நிறம் இது ஒரு மாமருந்து. இந்த அரிசியுடன் மூலிகை மருந்து சேர்த்தால் லேகியம் செய்ய முடியும். அது யானைக்கால் நோய்க்கான மருந்து. குஷ்டத்திற்கும், விஷக்கடிக்கும் மாமருந்து. உடலை வலுவாக்கும் காயகல்ப சக்தி கொண்டது. இந்த அரிசி ஒரு பங்கும், தண்ணீர் மூன்று பங்கும் சேர்த்து மண்பானையில் ஊறவைத்து ஆறுமாதம் கழித்து எடுத்தால் பால் போல் இருக்கும். இதற்கு `அன்னக்காடி’ என்று பெயர். இது காலராவிற்கான மருந்து என்பதும் குறிப்பிடத்தக்கது. கார் அரிசி சர்க்கரை நோய்க்கும், வாதம் சம்பந்தமான நோய்க்கும், கரப்பான்களுக்கும் மருந்தாகும்.

இப்படி சாகுபடி செய்த நெல் ரகங்களில் தேவையான அளவு விதை நெல்லாக சேகரிக்க ஆரம்பித்தேன். மீதம் இருந்தவற்றை அரிசியாக்கி நானே விற்பனை செய்யத் தொடங்கினேன். மேலும் விதை நெல்லை இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு வழங்கினேன். மேலும் குறுவை, சம்பா சாகுபடிக்கு ஒரே ரகங்களைப் பயன்படுத்தாமல் என்னிடம் இருந்த பல ரகங்களை மாற்றி மாற்றி சாகுபடி செய்தேன். 100 குழியில் இருந்து ஒரு ஏக்கர், 3 ஏக்கர் என்று வளர்ந்தது. முக்கியமாக ஒவ்வொரு முறையும் வெவ்வேறு ரகங்களை சாகுபடி செய்து அதிகளவில் விதை நெல்லை சேர்க்க ஆரம்பித்தேன். இப்படி நெல்விதைகளைச் சேகரிக்கவே 10க்கும் அதிகமான குதிர்களை வைத்திருக்கிறேன். அவற்றில் நம் பாரம்பரிய நெல்ரகங்கள் மட்டுமே இருக்கிறது.

சாகுபடிக்கு முன்பு வயலைத் தயார் செய்ய ஆட்டுப்புழுக்கையுடன் புண்ணாக்கை கலந்து வைத்துவிடுவேன். இதில் இயற்கை முறையில் மாற்றங்கள் உருவாகி சிறந்த இயற்கை எருவாக கிடைக்கும். இதனால் நெல் அதிகளவில் கிடைக்கும். இப்போது 17 ஏக்கரில் முழுமையாக இயற்கை விவசாயம் மட்டுமே செய்து வருகிறேன். தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப சமூக வலைத்தளங்களில் நான் சாகுபடி செய்வதை பதிவிட்டு அரிசி ரகங்கள், மதிப்புக்கூட்டிய அவல் என்று சென்னை, கோயம்புத்தூர், பெங்களூர், தஞ்சை, மதுரை, திருநெல்வேலி என பல மாவட்டங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறேன்.மாற்றம் என்பது விவசாயிகள் மத்தியில் வந்துவிட்டால் வருமானம் என்பது நிச்சயம் தேடிவரும். விதைநெல் கண்காட்சி நடத்தி பல்வேறு விவசாயிகளுக்கும் இலவசமாக பாரம்பரிய நெல்ரகங்களை இலவசமாக கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செய்தேன். தஞ்சை மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில் 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் விதை ரகங்களை இனப்பெருக்கம் செய்து விதை வங்கி பராமரித்துவரும் பணியை பாராட்டி வேளாண் வளர்ச்சி திட்டத்தின் பாரம்பரிய நெல்விதை வங்கி பாதுகாவலர் விருது தந்திருக்கிறார்கள்.

தற்போது 17 ஏக்கரில் 13 ரகத்தை சாகுபடி செய்திருக்கிறேன். மைசூர் மல்லி, சொர்ண மசூரி, சித்தசன்னா, இந்திராணி, கந்தசாலா, பூங்கார், குள்ளக்கார், அறுபதாம் குறுவை, கருத்தக்கார், கருங்குறுவை, ரத்தசாலி, கல்லுருண்டை ஆகியவற்றை சாகுபடி செய்திருக்கிறேன். இந்த இயற்கை விவசாயத்தில் செலவுகளைக் குறைத்து வருமானத்தை அதிகப்படுத்திவருகிறேன். இயற்கை விவசாயத்தில் கிடைக்கும் விதைநெல், மதிப்பு கூட்டப்பட்ட அரிசி, அவல் போன்றவற்றை விற்பனை செய்வதன் மூலம் வருடத்திற்கு ரூ.6 லட்சம் வரை வருமானம் வருகிறது. மனசுக்கும் திருப்தி, வருமானமும் அதிகரிப்பு என்பதால் நிறைவாக இந்த இயற்கை விவசாயத்தை செய்து வருகிறேன்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
இளந்திரையன்: 96989 85590.

Related posts

பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு