நெல்லை அருகே ராஜவல்லிபுரம் பகுதியில் குளக்கரை சாலையை சீமை கருவேலமரங்கள் ஆக்கிரமிப்பு

*விரைவில் அகற்றப்படுமா?

நெல்லை : ராஜவல்லிபுரம் பகுதியில் குப்பக்குறிச்சி குளத்துக்கரை சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறாக வளர்ந்து நிற்கும் சீமை கருவேலமரங்கள் விரைவில் அகற்றப்படுமா? என வாகனஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் பிரசித்திபெற்ற செப்பறை அழகிய கூத்தர் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் நடைபெறும் மார்கழி திருவிழா, தேர்த்திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்களை காண தாழையூத்து உள்ளிட்ட சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்தும், நெல்லை மாநகர பகுதிகளில் இருந்து பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி- அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளை வழிபட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனிடையே அப்பகுதியில் உள்ள குளத்தின் கரையில் இருந்து குப்பக்குறிச்சி வழியாக சீவலப்பேரி செல்லும் வகையில் அமைந்துள்ள சாலையை இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார், வேன்கள் மூலம் நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையின் இருபுறத்திலும் முறையான பராமரிப்பின்றி சீமை கருவேலமரங்கள் அடர்த்தியாக வளர்ந்து நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அத்துடன் இதன் வழியாக இரு சக்கரவாகனங்களிலும், ஆட்டோக்களிலும் செல்வோரை பதம்பார்க்கிறது. அத்துடன் சாலையில் அடர்ந்து வளர்ந்துள்ள முட்செடிகளில் சமூக விரோதிகள் மறைந்து இருந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் அபாயமும் நிலவுகிறது.

எனவே, இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்துவதோடு சாலையை ஆக்கிரமித்து வளர்ந்து நிற்கும் சீமை கருவேல மரங்களை விரைவில் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? என வாகனஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

Related posts

சென்னையில் சிறுவனை கடித்த தெருநாய்

மும்பை நகரில் வெள்ளப்பெருக்கு: பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பு

கூடங்குளம்: மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்