பச்சையப்பன் கல்லூரி 254 உதவி பேராசிரியர்கள் நியமன வழக்கு; ஆவணங்களை ஆய்வு செய்து அறிக்கை தர இருநபர் குழு அமைப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரியின் 254 உதவி பேராசிரியர்கள் பணி நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, 254 உதவி பேராசிரியர்கள் நியமனம் செல்லாது என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிபதி சண்முகம் நடத்திய விசாரணையில் 152 உதவி பேராசிரியர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கியதில் மட்டுமே தவறு நிகழ்ந்துள்ளது. ஆனால், 254 உதவி பேராசிரியர்களின் பணி நியமனத்தை ஒட்டுமொத்தமாக தனி நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். எனவே, தனி நீதிபதியின் உத்தரவு நிலைக்கத்தக்கதல்ல என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நீண்ட வாதத்திற்கு பிறகு நீதிபதிகள் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளனர். அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ஆவணங்களின் அடிப்படையிலேயே இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர முடியும். எனவே, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அனுபவம் வாய்ந்த கல்வியாளர் அடங்கிய இரு நபர் குழுவை நீதிமன்றம் நியமிக்கிறது. அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் குழுவின் தலைவராக நியமிக்கப்படுகிறார். காயிதே மில்லத் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் பிரீதா ஞானராணி உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். இந்த குழு பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் பச்சையப்பன் அறக்கட்டளை வாரியத்தில் செயல்பட வேண்டும். இந்த குழு 254 உதவி பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பாணைகள், இதற்கு முந்தைய விசாரணை அறிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான கல்வி தகுதி குறித்தும் அவர்கள் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட உதவி பேராசிரியர் அல்லது அவர்கள் தரப்பு வழக்கறிஞர்களுக்கு உரிய நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும். இந்த குழு ஆகஸ்ட் 7ம் தேதி முதல் பணியை தொடங்க வேண்டும். குழுவிடம் வரும் 19ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட உதவி பேராசிரியர்கள் தங்கள் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். இந்த குழுவில் ஆகஸ்ட் 21 முதல் அகர வரிசை அடிப்படையில் குழு அனுப்பும் தேதியில் ஆஜராக வேண்டும். ஆவணங்களை குழு ஆய்வு செய்து அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் செப்டம்பர் 27ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை செப்டம்பர் 29ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.இவ்வாறு இடைக்கால உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related posts

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்