திருப்பதியில் லட்டு கலப்பட விவகாரம்; திண்டுக்கல் ஏஆர் டெய்ரி உரிமையாளர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

திருமலை: ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள உயர் நீதிமன்றத்தில் திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி உரிமையாளர் ராஜசேகரன் முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்த டெண்டர் மூலம் நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏஆர் டெய்ரி நிறுவனம் கலப்பட நெய் சப்ளை செய்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அளித்த புகாரின் பேரில் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏ.ஆர். டெய்ரி நிறுவனர் ஆர்.ராஜசேகரன் இந்த வழக்கில் கைது நடவடிக்கையுடன் வேறு எந்த அவசர நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

மேலும் அந்த மனுவில் நெய் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்வதில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றவில்லை. நெய் கலப்படம் குறித்த புகார்கள் மீது தன்னிடம் இருந்து எந்தவித விளக்கம் பெறாமல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது சட்டத்திற்கு புறம்பானது. தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரம் இல்லை. அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தனக்கு முன்ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவேன் என்று ஏஆர் டைரி நிறுவனர் ராஜசேகர் தெரிவித்துள்ளார். இந்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

3வது நாளாக விசாரணை குழு அதிகாரிகள் ஆய்வு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதங்கள் தயாரிக்க திண்டுக்கல்லை சேர்ந்த ஏஆர் டெய்ரி நிறுவனம் அனுப்பிய நெய் கலப்பட நெய் என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இது பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணை குழு ஒன்றை ஆந்திர அரசு அமைத்துள்ளது. அந்தக்குழுவினர் நேற்று 3வது நாளாக திருப்பதியில் உள்ள தேவஸ்தான கிடங்கு, திருமலையில் உள்ள தேவஸ்தானத்தின் கிடங்கு, திருப்பதி மலையில் உள்ள ஆய்வகம், கோயிலுக்கு வெளியே பூந்தி தயாரிக்கும் மடப்பள்ளி ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர்.

Related posts

வாதங்கள் நிறைவடைந்த ஒரு வழக்கில் புதிய சாட்சியங்களை விசாரிக்க சட்டத்தில் இடமில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பிரதமர் குறித்த கார்கேவின் கருத்து வெறுக்கத்தக்கது: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டனம்

திருவனந்தபுரத்தில் மேலும் 2 பேருக்கு அமீபா காய்ச்சல்