சொந்த தொகுதியில் சேலத்துக்காரர் அதிக ஓட்டு வாங்கிய ரகசியம்பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சேலத்துக்காரர் அணிக்கு தாவுவதை தடுக்க நிர்வாகிகளை வீட்டிற்கு வரவழைத்து ஆலோசனை வழங்குகிறாராமே வைத்தியானவர்…’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘தேனிக்காரர் அணியில் உள்ள முக்கிய நிர்வாகியான மாஜி அமைச்சர் ‘வைத்தியானவர்’ நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது நெற்களஞ்சியம் மாவட்டத்திற்கு வந்துள்ளார். அப்போது, மாவட்டத்தில் தான் இல்லாத போது தனது ஆதரவாளர்களை குறி வைத்து, சேலத்துக்காரர் அணியினர் இழுத்து சென்றது வைத்தியானவருக்கு தெரிய வந்ததாம்…

இதனையடுத்து நெற்களஞ்சியம் மாவட்டத்தில் வைத்தியானவர் முகாமிட முடிவு செய்து இருக்கிறாராம்… முக்கிய நிர்வாகிகளை தனது வீட்டிற்கு வரவழைத்து அறிவுரை வழங்கி வர்றாராம்.. இதன் மூலம் அவர்கள் சேலத்துக்காரர் அணிக்கு செல்வதை தடுக்க முடியும்னு வைத்தியானவர் கருதுகிறாராம்.. இதற்காக வீட்டிற்கே நிர்வாகிகளை வரவழைத்து ஆலோசனை வழங்க ெதாடங்கிட்டாராம்.. வைத்தியானவரின் இந்த வியூகம் எடுபடுமான்னு இலைக்கட்சிக்குள்ளே பரவலாக பேசிக்கிறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வேட்டி சேலையில லாபம் பார்த்த நிர்வாகி விவகாரத்துல அதிகாரிங்க ஆய்வு திருப்தியே இல்லைன்னு நெசவாளர்கள் சொல்றாங்களாமே தெரியுமா..’’ என அடுத்த கேள்விக்கு போனார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டம் வந்தா வாசி தொகுதியில கோல்டு ஊர் இருக்குது.. இங்க அரசு வேட்டி சேலைக்காக நெசவாளர் கூட்டுறவு சங்கம் மூலமா நூல் வழங்கி அதுல உற்பத்தி செய்ற வேட்டி சேலைகளை பொங்கல் பண்டிகைக்கு கொடுக்குறது வழக்கமாம்.. ஆனா, நெசவாளர்களுக்கு துணி நூல் வழங்குவது போல, கணக்கு காட்டி அரசு நெசவு நூல்களை வெளிமார்க்கெட்ல அதிக விலைக்கு விற்பனை செய்து பல எல், லாபம் பார்க்குறாங்களாம்..

கடந்த இலை ஆட்சியில 10 வருடங்களாக நெசவாளர் கூட்டுறவு சங்கத்துல நெற்றிக்கண் கடவுள் பெயரை கொண்ட முக்கிய நிர்வாகி நல்ல லாபம் பார்த்திருக்குறதாக புகார்கள் வந்திருக்குது.. இவரது உறவுக்கார பெண்ணை மேலாளராக பணியமர்த்தி கைவரிசை காட்டியிருக்குறாராம்.. எப்ப கேட்டாலும், அரசு, நூல் வழங்கவே இல்லைன்னு கதை சொல்லி வந்திருக்குறாரு.. வேண்டியவங்களுக்கு மட்டும் நூல் வழங்கி சேலையை பெற்றிருக்குறாரு.. அதுமட்டுமில்லாம, ஆந்திரா, திருவள்ளூர்னு சேலைகளை குறைஞ்ச விலைக்கு வாங்கி வந்து தனியார் கட்டிடத்தில் அரசு முத்திரைய போட்டு, கோ-ஆப் டெக்ஸ்சுக்கு அனுப்பும் பணியையும் ஜரூராக செஞ்சிருக்காரு..

கூட்டுறவு சங்க பதவியில இல்லைன்னாலும், தான் வைத்த மேலாளரை கொண்டு கச்சிதமாக வேலை பார்த்திக்காரு.. கொஞ்ச நாளைக்கு முன்னாடி தனியார் இடத்துல முறைகேடாக வாங்கி வந்த சேலைய பதுக்கி அரசு முத்திரை போட்டு அனுப்பும்போது, நெசவாளர்களே கையும் களவுமாக பிடிச்சு, வருவாய்த்துறை மூலம் சீல் வைச்சிருக்காங்க.. சம்பந்தப்பட்ட, துறை அதிகாரிங்க ஆய்வு செய்றாங்களாம்.. ஆனா, அந்த ஆய்வுல நெசவாளர்களுக்கு திருப்தி இல்லையாம்.. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தப்புக்கு துணைபோன எல்லார் மேலயும் நடவடிக்கை எடுக்கணும்னு என்பது நெசவாளர்களோட கோரிக்கையாக இருக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஒரு கையில் சரக்கு.., இன்னொரு கையில் கரன்சியின்னு கெத்து காட்டும் அதிகாரி பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் மூன்றெழுத்து பெயர் கொண்ட ஒரு பில் கலெக்டர் பணிபுரிகிறாராம்.. இவர், வரி வசூல் செய்வதைவிட சொந்த வசூலில் தட்டி எடுக்கிறாராம்.. கோப்புகள் தேங்கினால் எனக்கென்ன…? என உதாசீனப்படுத்திவிட்டு நடையை கட்டுகிறாராம்.. இன்னொரு வரி வசூலர், பகலிலேயே சரக்கு அடித்துவிட்டு, ஆபீசுக்கு வருகிறாராம்..

மது போதையிலேயே வசூலுக்கு செல்கிறாராம்.. இவரும் மூன்றெழுத்து பெயர் கொண்டவர். இவர், முன்னாள் உதவி கமிஷனர் ஒருவருக்கு, வீட்டு வேலை மற்றும் எடுபிடி வேலை செய்துகொடுத்து, கரன்சி குவித்து வந்தவரு… தற்போதும், கரன்சியை தேடி ஓடுகிறார். ஒரு கையில் சரக்கு.., இன்னொரு கையில் கரன்சி… என கெத்து காட்டுகிறார். இவர்கள் இருவருமே அரசு கல்லாவுக்கு வரவேண்டிய வரி வசூல் பற்றி கவலைப்படுவது இல்லையாம். தங்களது பாக்கெட் நிரம்புதா…?

என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்களாம்.. இதேபோல், மாநகராட்சி மத்திய மண்டலத்தில் சர்ச்சைக்குரிய 2 பில் கலெக்டர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள், இப்பதவிக்கு தகுதியே இல்லாமல், கல்விப்பிரிவில் இருந்து வந்தவர்கள். இவர்களில், ஒருவர் நகரமைப்பு பிரிவுக்கு அதிரடியாக மாற்றப்பட்டிருக்காரு.. இன்னொருவரையும் இடமாற்றம் செய்ய முயன்றபோது அவர், சிலருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து, தனது பதவியை தக்க வைத்துக்கொண்டாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஆதரவாளர்களை பேச வச்சி ஆனந்தமாய் கேட்டுக்கிட்டு இருந்தாராமே இலைக்கட்சி தலைவர்..’’ என கடைசி கேள்வியை கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவரான சேலத்துக்காரர் தேர்தல் தோல்வி குறித்து ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளை அழைச்சி ஆலோசனை நடத்திக்கிட்டு இருக்காரு.. ரெண்டு ரவுண்டு முடிச்சிட்டாராம்.. கடைசியா மாங்கனி ஊர் கூட்டத்துல தொகுதிக்கு ரெண்டு பேரை தேர்வு செஞ்சி என்ன பேசணும் என்பதை சொல்லிக் கொடுத்துதான் அழைச்சிக்கிட்டு போனாங்களாம்..

குறிப்பா, சின்ன மம்மியையும், தேனிக்காரரையும் கட்சியில் சேர்க்கவே கூடாது. அவர்களால் கட்சிக்கு எந்த நன்மையும் கிடையாதுன்னு பேச வச்சாங்களாம்.. இதனை ஆனந்தமா கேட்டுக்கிட்டிருந்தாராம் தலைவர்.. ஆனால் அதே மேடையில் இருந்த கொங்குக்காரர் நமட்டு சிரிப்பு சிரிச்சிக்கிட்டிருந்தாராம்.. இவரது தலைமையில்தான் 6 மாஜிக்கள், தேனிக்காரரை கட்சியில் சேர்த்தே ஆக வேண்டும்னு இலைக்கட்சி தலைவரை சந்திச்சாங்களாம்..

இவரை கூட்டத்தில் வச்சிக்கிட்டே தனது ஆதரவாளர்கள் மூலமாக பதில் கொடுத்ததா சொல்றாங்க.. அதே நேரத்தில் தனது சொந்த ஊரில் அதிக ஓட்டுகளை வாங்கினேன். நீங்கள் ஏன் கோட்டை விட்டீங்கன்னும் தலைவர் கேட்டிருக்காரு.. கூட்டத்தை முடிச்சிட்டு வெளியே வந்த நிர்வாகிகளோ, தனது தொகுதிக்கு ஓட்டுக்கு ரெண்டு பெரிய நோட்டை கொடுத்து கூடுதல் வாக்குகளை வாங்கினாரு… நமக்கு ரூ.250ஐ கொடுத்து ஓட்டு வாங்குன்னா எங்கே போய் வாங்குவதுன்னு கிசுகிசுத்துக்கிட்டே போனாங்களாம்…’’ என முடித்தார் விக்கியானந்தா.

Related posts

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

திமுக பவளவிழாவை ஒட்டி, கட்சியினர் இல்லங்கள், அலுவலகங்களில் கட்சிக்கொடி பறக்கட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே சொத்துத் தகராறில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு