மேலடுக்கு சுழற்சி நீடிப்பு காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, வேலூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.

அதிகபட்சமாக பூண்டி 100மிமீ, தாமரைப்பாக்கம் 90மிமீ, வாலாஜா 80மிமீ, ராணிப்பேட்டை, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை 50மிமீ, அம்பத்தூர், செய்யாறு 40மிமீ, ஸ்ரீ பெரும்புதூர், பாலாறு அணைக்கட்டு, பொன்னேரி, ஆரணி 30மிமீ, தொழுதூர், பவானிசாகர், குன்றத்தூர், உத்திரமேரூர், மேட்டுப்பட்டி, பெரியபட்டி, ஓமலூர், சோளிங்கர், ஆவடி, சோழவரம், கொரட்டூர், பள்ளிப்பட்டு, திருத்தணி, காட்பாடி, மாதவரம், மேற்கு தாம்பரம், கடப்பாக்கம் 20மிமீ மழை பெய்துள்ளது. இதற்கிடையே, பாளையங்கோட்டை உள்பட சில மாவட்டங்களில் நேற்று 100 டிகிரி வெயில் கொளுத்தியது. ஈரோடு மாவட்டத்தில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை கூடுதலாக உணரப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்ப நிலை அதிகரித்து காணப்பட்டது. பிற மாவட்டங்களில் பெரும்பாலும் வெப்ப நிலை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு