கவர்ச்சி விளம்பரத்தால் கூட்ட நெரிசல் ஷூ விற்பனை கூடத்திற்கு பூட்டு: போலீசார் நடவடிக்கை

அண்ணாநகர்: அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில், விலை உயர்ந்த பிராண்டட் ஷூ விற்பனை தொடங்கப்பட்டது. இங்கு, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்றும், 2 வாங்கினால் 3 இலவசம் என இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் பிரபல யூடியூபர்கள் மூலம் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டது. இதனால், கடந்த வெள்ளிக்கிழமை முதல் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வடபழனியில் இருந்து கோயம்பேடு வரை செல்லும் அனைத்து வாகனங்களும் நெரிசலில் சிக்கி ஊர்ந்து சென்றன.

தகவலறிந்த அரும்பாக்கம் போலீசார், நேற்று முன்தினம் சம்பவ இடத்துக்கு வந்து, கூட்டத்தை முறைப்படுத்த முயன்றனர். ஆனால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து, தனியார் மண்டபத்தில் ஷூ விற்பனையை நிறுத்தி, அங்கிருந்தவர்களை வெளியேற்றி, மண்டபத்தை பூட்டினர். இந்நிலையில், நேற்று காலை இந்த விற்பனை கூடம் திறந்து இருக்கும் என நினைத்து ஏராளமான பொதுமக்கள் மீண்டும் அங்கு கூடியதால் போக்குவரத்து பாதித்து, வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அரும்பாக்கம் போலீசார், அங்கு கூடியிருந்த மக்களை விரட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Related posts

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.56,800க்கு விற்பனை

தமிழ் வழி கல்வியில் பயின்றதாக போலி சான்றிதழ் பெற்று அரசு பணியில் சேர்ந்த 4 அதிகாரிகள் உட்பட 9 பேர் மீது வழக்கு

விமானத்தில் பெண் பயணி மாரடைப்பால் உயிரிழப்பு