அதீத நம்பிக்கையில் இருந்த பாஜவுக்கு தேர்தல் முடிவு உண்மை நிலையை உணர்த்தியது: ஆர்எஸ்எஸ் விமர்சனம்

புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடைய ‘ஆர்கனைசர்’ இதழின் சமீபத்திய பதிப்பில் அந்த அமைப்பின் வாழ்நாள் உறுப்பினரான ரத்தன் சாரதா எழுதிய கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது: மக்களவை தேர்தல் முடிவுகள், அதீத நம்பிக்கை கொண்ட பாஜ தொண்டர்கள் மற்றும் அதன் பல்வேறு தலைவர்களுக்கு உண்மை நிலவரத்தை உணர்த்துவதாக வந்துள்ளன. பிரதமர் மோடி 400க்கும் மேற்பட்ட சீட்களை இலக்காக நிர்ணயித்ததையும், எதிர்க்கட்சிகளின் தைரியத்தையும் அவர்கள் உணரவில்லை. கருத்துக்கணிப்பு போன்ற மாயையில் மகிழ்ச்சியாக இருந்ததாலும், மோடியின் புகழை ரசித்துக் கொண்டிருந்ததாலும், களத்தில் ஒலிக்கும் குரல்களுக்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை.

பிற கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டதும், அவர்களுக்காக சிட்டிங் எம்பிக்கள் தங்கள் இடத்தை தியாகம் செய்ததும், மோசமான செயல்பாட்டிற்கான பல காரணங்களில் ஒன்று. இதில் மிகப்பெரிய உதாரணம் மகாராஷ்டிரா. அங்கு சிவசேனாவுடன் பெரும்பான்மை இருந்தாலும், அஜித்பவாரின் தேசியவாத காங்கிரசை பாஜ தனது கூட்டணியில் சேர்த்துக் கொண்டது. ஏன் இந்த தவறான நடவடிக்கை எடுக்கப்பட்டது? இதன் மூலம் பாஜவின் மதிப்பு குறைந்தது. பாஜவும் மற்றொரு அரசியல் கட்சியாக மாறியது.

அங்கீகாரத்திற்காக காத்திருக்காமல் அர்ப்பணிப்புடன் உழைக்கும் பழைய நபர்களை புறக்கணித்ததன் விளைவையும் தேர்தல் முடிவு காட்டி உள்ளது. தேர்தலில் பாஜவுக்காக ஆர்எஸ்எஸ் உழைத்ததா என்று கேட்டால், ஆர்எஸ்எஸ் என்பது பாஜவின் களப்படை அல்ல. உலகின் மிகப்பெரிய கட்சியான பாஜவுக்கென தொண்டர்கள் பலர் இருக்கிறார்கள். தேசத்திற்காக தேர்தலில் மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுமென விழிப்புணர்வை எப்போதும் போல் இம்முறையும் ஆர்எஸ்எஸ் ஏற்படுத்த பிரசாரம் செய்தது. அதேசமயம் தேர்தல் பணியில் ஈடுபட ஆர்எஸ்எஸ்சின் ஆதரவை பாஜ கேட்கவில்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related posts

சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்இருப்பு நிலவரம்!

2024 டி20 உலக கோப்பை சாம்பியனான இந்திய அணிக்கு ‘தல’ தோனி வாழ்த்து!

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!