Monday, July 8, 2024
Home » வியக்க வைக்கும் விளைச்சல் தரும் ஒட்டுக்கத்தரி!

வியக்க வைக்கும் விளைச்சல் தரும் ஒட்டுக்கத்தரி!

by Porselvi

“அப்டேட் இல்லையென்றால் அனைத்தும் பாழ் என்ற நிலையில் இருக்கிறது இன்றைய யுகம். விவசாயம் மட்டும் என்ன தொக்கா? விவசாயத்தில் புதிய யுக்திகள், புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தினால்தான் நல்ல விளைச்சலை எடுக்க முடியும்’’ என்கிறார் இளம் விவசாயி பாலமுருகன். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள வெள்ளோடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்த இவர் சவுதி மற்றும் குவைத் நாடுகளில் பணிபுரிந்துவிட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா திரும்பியிருக்கிறார். இப்போது விவசாயமே போதும், இங்கேயே அனைத்தையும் சாதிக்கலாம் என களம் இறங்கிவிட்டார். இடையில் 2018ம் ஆண்டு சொந்த ஊர் வந்தபோது, சத்தியமங்கலம் மலைப்பகுதியில் தாளவாடி அடுத்த கெட்டவாடி பகுதியில் நான்கரை ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி விவசாயம் செய்யத் தொடங்கினார். இப்போது மேலும் 8 ஏக்கர் நிலம் வாங்கி கத்திரி, தக்காளி, உருளைக்கிழங்கு, வாழை, மஞ்சள், முட்டைக்கோஸ் என பல்வேறு பயிர்களை விளைவித்து லட்சங்களில் சம்பாதிக்கிறார். இதில் சுண்டைக்காய்ச் செடியில் ஒட்டு கட்டிய கத்திரியை சாகுபடி செய்து அசத்தலான லாபம் பார்க்கிறார்.

மழையும், வெயிலும் மாறி மாறி வந்த ஒரு பகல் பொழுதில் சத்தியமங்கலம் காட்டுப்பகுதி வழியாக பயணித்து பாலமுருகனைச் சந்தித்தோம். விதைப்பதற்காக நாசிக்கில் இருந்து கொண்டு வரப்பட்ட உருளைக்கிழங்கு விதைகள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. உச்சத்தில் விலையேற்றம் கண்டிருக்கும் தக்காளியை அநாயசமாக அறுவடை செய்து கொண்டிருந்தார்கள் விவசாயத் தொழிலாளர்கள். ஒருபுறம் பயிர்களுக்கு பாய்ச்சுவதற்காக பிரம்மாண்ட தொட்டியில் இரைக்கொண்டிருந்தது நீர். இந்தச்சூழலில் பாலமுருகன் நம்மிடம் உரையாடினார்.வெளிநாடுகளில் வேலை பார்த்தாலும் அவ்வப்போது நம்மூருக்கு வந்து செல்வேன். அதுபோல் வரும்போது எனது உறவினர்கள் மலை மேல் உள்ள தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மண்வளமும், சீதோஷ்ண நிலையும் விவசாயத்திற்கு சிறப்பாக இருக்கும். அங்கு நிலம் வாங்கி விவசாயம் செய்யலாம் என ஆலோசனை வழங்கினார்கள். இதையடுத்து இந்தப் பகுதிக்கு நேரில் பார்த்தபோது, இங்கிருக்கும் இயற்கையான சூழல் மிகவும் பிடித்துப்போனது. பசுமையாக காட்சியளிக்கும் வயல்கள், இடைவிடாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பாட்டாளிகளின் உழைப்பு என பலவும் என்னை ஈர்த்தது. இதனால் கடந்த 2018ம் ஆண்டில் நான்கரை ஏக்கர் நிலத்தை வாங்கினேன். அதில் இந்தப்பகுதியில் வழக்கமாக விளையும் முட்டைக்கோஸ், தக்காளி, வாழை என பல பயிர்களைப் பயிர் செய்தேன். அனைத்து பயிர்களும் நல்ல விளைச்சலைத் தந்தன.

இந்தப் பயிர்கள் தந்த உற்சாகத்தால் 2020ம் ஆண்டில் கூடுதலாக 8 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்தேன். நான் வெளிநாடு சென்றாலும் எனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் விவசாயத்தைப் பார்த்துக்கொண்டார்கள். கடந்த 2022ம் ஆண்டில் மீண்டும் ஊருக்கு வந்தேன். அப்போது முழுமூச்சாக விவசாயத்தில் இறங்கினேன். இனி வெளிநாடுகளுக்குப் போக வேண்டாம். இங்கேயே இருப்போம். விவசாயத்தில் ஏதாவது புதிய முறையைக் கையாள்வோம் என நினைத்தேன். அப்போதுதான் ஒட்டுக்கத்திரி குறித்து கேள்விப்பட்டேன். நான் வெளிநாடுகளில் இருந்தபோது பசுமைக்கூடார விவசாயம் குறித்து பயிற்சி வகுப்புகளுக்கு சென்றிருக்கிறேன். அங்கு நிறைய விசயங்கள் சொல்லித்தந்தார்கள். அப்போது ஒட்டுப்பயிர் தொழில்நுட்பம் குறித்தும் அறிந்துகொண்டேன். இந்த அனுபவத்தில் சிலர் கூறிய தகவலுடன் ஒட்டுக்கத்திரி நடவு செய்ய முடிவெடுத்தேன்.

இந்த ரக கத்திரிச்செடிகள் சத்தீஷ்கர் மாநிலம் கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு, பயிர் செய்யப்படுகிறது. அதனை அங்கிருந்தே தருவித்து பயிர் செய்திருக்கிறேன். நாம் ஆர்டர் கொடுத்தால் 90 நாட்கள் கழித்துதான் நாற்றுகள் கிடைக்கும். போனால் போய் வாங்கி வந்துவிடலாம் என்ற கதை இந்த ரகத்தில் கிடையாது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ராய்ச்சூரில் இருந்து 1500 கன்றுகளை வாங்கி வந்து எனது 70 சென்ட் நிலத்தில் நடவு செய்தேன். முதலில் சோதனை அடிப்படையில் செய்து பார்த்துவிட்டு, பிறகு அதிக இடத்தில் செய்யலாம் என நினைத்துதான் இவ்வாறு செய்தேன். இப்போது நல்ல விளைச்சல் கிடைக்கிறது’’ என கத்திரி விவசாயத்தை கையில் எடுத்த கதையைப் பகிர்ந்துகொண்ட பாலமுருகன், அதன் சாகுபடி விபரங்கள் குறித்து விவரிக்க தொடங்கினார்.

“ ஒட்டுக்கத்திரியை நடவு செய்ய 5 கலப்பைகள் கொண்டு 2 முறை நிலத்தை நன்றாக உழவு செய்தோம். அதன்பிறகு ரொட்டேவேட்டர் கொண்டு கட்டியில்லாமல் சமன்படுத்தி ஒன்றரை அடி அகலம் கொண்ட மேட்டுப்பாத்திகள் அமைத்தோம். ஒவ்வொரு மேட்டுப்பாத்திக்கும் 8 அடி இடைவெளி கொடுத்தோம். மேட்டுப்பாத்தியில் மல்ச்சிங் ஷீட் போட்டிருக்கிறோம். மல்ச்சிங் ஷீட்களில் 3 அடிக்கு ஒரு துளை இருக்கும். அதில் ஒரு குச்சியால் 3 அங்குலம் அளவில் குழியெடுத்து கத்திரி நாற்றுகளை நடவு செய்தோம். நடவுக்கு முன்பாக சொட்டுநீர்க்குழாய் மூலம் பாசனம் செய்து, ஈரத்தில்தான் நடவு செய்தோம். நடவு செய்த பின்பு செடியைச் சுற்றி மண் அணைத்தோம். நடவுக்கு முன்னதாக ஹியூமிக் அமிலம், மோனோ குரோட்டாபாஸ், வெரிடிக் ஆகியவற்றை தலா 1 லிட்டர் என்ற அளவில் 100 லிட்டர் தண்ணீரில் கலந்து சொட்டுநீர் பாசனம் மூலம் கொடுத்தோம். நடவுக்கு பிறகு 3வது நாளில் உயிர்ப்பாசனம் செய்தோம். அதன்பிறகு வாரம் ஒரு பாசனம்தான். மல்ச்சிங் ஷீட் இருப்பதால் அதிக வெயில் படாமல், ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும்.

20வது நாளில் டிஏபி, என்பிகே ஆகியவற்றை தலா 1 லிட்டர் என்ற அளவில் 100 லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுத்தோம். 25-30 நாட்களில் செடிகளில் 3 கிளைகள் வர ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் செடியின் தலைப்பகுதியில் அதாவது கொழுந்துப்பகுதியை கிள்ளி கவாத்து செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கிளைகள் அதிகமாக வந்து செடிகள் பெருத்து வளரும். இதன்மூலம் அதிக காய்கள் காய்க்கும். 30வது நாளில் மேக்ரோ மைக்ரோ எனும் நுண்ணூட்ட உரத்தை 100 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் என்ற அளவில் கலந்து பாசனத்தில் கொடுத்தோம். 40 நாட்களில் செடிகளில் பூக்கள், பிஞ்சுகள் வர ஆரம்பிக்கும். பூவெடுக்கும் சமயத்தில் புழு, பூச்சிகள் தொல்லை வர ஆரம்பிக்கும். அப்போது வேப்ப எண்ணெய், எருக்க இலைச்சாறு ஆகியவற்றை செடிகளில் இலை வழியாக ஸ்பிரே செய்வோம். காய்ப்புழு, தண்டுப்புழு ஆகியவை பூவுக்குள் முட்டையிட ஆரம்பிக்கும். அவற்றைக் கட்டுப்படுத்த பிரிஞ்சா, பிரிஞ்சா பிளஸ் ஆகிய மருந்துகளை வாங்கி ஸ்பிரே செய்வோம். செடிகள் ஆரோக்கியமாக வளர குரோவெல் என்ற வளர்ச்சியூக்கியை 100 லிட்டர் தண்ணீரில் 70 மிலி என்ற அளவில் கலந்து தெளிப்போம்.

இதுபோல் முறையாக பராமரித்து வந்தால் 40-45 நாட்களில் அறுவடை எடுக்கலாம். அதில் இருந்து வாரம் ஒருமுறை தொடர்ந்து அறுவடை செய்வோம். தாளவாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் காய்கறிகளை வாங்கிச் செல்ல வியாபாரிகள் நிலத்திற்கே வருகிறார்கள். இந்த ரகத்தில் தாய்ச்செடியான சுண்டைக்காய் நாட்டு ரகத்தைச் சேர்ந்தது. ஒட்டுச்செடியான கத்திரி வீரிய ரகத்தைச் சேர்ந்தது. இதில் இருந்து கிடைக்கும் கத்திரிக்காய்கள் 40 கிராம் மூலம் 200 கிராம் வரை எடை கொண்டதாக இருக்கும். நம்மூரைப் பொருத்தவரை குறைந்த எடையில் இருந்தால்தான் மக்கள் சமையலுக்கு பயன்படுத்துவார்கள். எடை அதிகம் உள்ள இந்த ரக கத்திரிக்காய்களை கேரளாவில் விரும்பி வாங்குகிறார்கள். திருப்பூர் காய்கறி மார்க்கெட்டில் 40-50 கிராம் எடை இருந்தால் வாங்கிக்கொள்வார்கள். ஈரோடு மார்க்கெட்டில் 40-50 கிராம் எடை இருந்தால் வாங்கிக்கொள்வார்கள். கேரளாவில் 100 முதல் 150 கிராம் வரை எடை இருந்தாலும் வாங்கிக்கொள்வார்கள். இதனால் நான் கேரளாவின் பாலக்கோடு, கோழிக்கோடு பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைப்பேன். நம்மூரில் இந்த கத்திரிக்காய்க்கு குறைந்த விலைதான் கொடுப்பார்கள். கேரளாவில் நல்ல விலைக்கு போகும். அங்கு ஒரு கிலோ ரூ.10 முதல் 40 வரை விற்பனையாகும். இந்த 6 மாதத்தில் இதுவரை 8 டன் மகசூல் எடுத்திருக்கிறேன். ஒரு கிலோ சராசரியாக ரூ.20 என வைத்துக்கொண்டாலும் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வருமானமாக கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டில் மீதமுள்ள 6 மாதத்தில் நிச்சயம் 8 டன் மகசூல் கிடைக்கும். இதன்மூலம் அதே தொகை வருமானமாக கிடைத்து மொத்த வருமானமாக ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் வருமானமாக கிடைக்கும். இதில் ஓராண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் செலவானால் கூட ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் நிகர லாபமாக கிடைக்கும். முதல் ஆண்டில் கன்று விலை, ஏர், நடவு கூலி, மல்ச்சிங் ஷீட் என செலவு அதிகமாக இருக்கும். அடுத்த அடுத்த ஆண்டுகளில் இந்த செலவுகள் இருக்காது. செலவு மிக சொற்பமாகத்தான் இருக்கும். ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாயை லாபமாக பார்க்கலாம். இந்த ஒட்டுச்செடிகள் 8 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும் என்கிறார்கள். நான் 4 ஆண்டுகள் எதிர்பார்க்கிறேன். 70 சென்ட் நிலத்தில் ஆண்டுக்கு 2 லட்சம் என்பது நல்ல லாபம்தானே!’’ என கேள்வியோடு முடித்தார் பாலமுருகன்.
தொடர்புக்கு:
பாலமுருகன் 95245 66416

டிரை வெஜிடபிள்

கேரளாவில் பெரிய ரக கத்திரிக்காய்கள் விரும்பி வாங்கி சமைக்கப்படுகிறது. அதோடு அங்குள்ளவர்கள் இந்த கத்திரிக்காய்களை வாங்கி டிரை வெஜிடபிளாக மாற்றி சில இடங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். டிரை வெஜிடபிளாக மாற்றிய கத்திரிக்காயை 10 நிமிடம் ஊற வைத்து சமைத்தால் ஃப்ரெஷ் கத்திரிக்காய் போலவே சுவையாக இருக்குமாம்.

நோய்த்தாக்கம் குறைவு

நம்மூர் கத்திரிச்செடிகள் வழக்கமாக ஓராண்டுக்கு நல்ல மகசூல் தரும். அதன்பிறகு அதை அழிக்க வேண்டியிருக்கும். இந்த ஒட்டுச்செடி சுண்டைக்காய்ச் செடியில் ஒட்டுக்கட்டப்படுவதால் நீண்ட காலத்திற்கு பலன் தருகிறது. அதுமட்டுமல்லாமல் பூச்சி, நோய் தாக்குதலும் குறைவாக இருக்கும். சாதாரண கத்திரிச்செடியில் வேரழுகல், வேர்ப்புழு போன்ற பிரச்னைகள் இருக்கும். இந்த ஒட்டுச்செடியில் அந்த பிரச்னை குறைவுதான் என்கிறார் பாலமுருகன்.

 

You may also like

Leave a Comment

3 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi