Sunday, September 8, 2024
Home » 83 வயதில் ஆஸ்கர் சாதனை!

83 வயதில் ஆஸ்கர் சாதனை!

by Porselvi

திரைப்படக்கலை தோன்றி 125 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. சினிமா அறிமுகமான வருடங்களிலிருந்து இன்று வரைக்குமே ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற துறைகளில் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே இருந்து வருகிறது. அப்படியே எடிட்டிங், ஒளிப் பதிவில் பெண்கள் பணியாற்றினாலும் ஆண்களுக்கு நிகரான புகழை அவர்கள் அடையவில்லை. இவற்றையெல்லாம் நொறுக்கி எடிட்டிங் துறையில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கி, ஆண் எடிட்டர்களையும் மிஞ்சியவர்தான் தெல்மா ஸ்கூன்மேக்கர். மூன்று முறை சிறந்த எடிட்டிங்கிற்காக ஆஸ்கர் விருதை தன்வசமாக்கியவர் இவர். குறிப்பாக உலகின் முக்கியமான திரைப்பட இயக்குநரான மார்ட்டின் ஸ்கார்சஸியின் பெரும்பாலான படங்களுக்குத் தெல்மா தான் எடிட்டர்.

யார் இந்த தெல்மா ஸ்கூன்மேக்கர்?இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் அல்ஜீரியாவில் பிறந்தார் தெல்மா. அவரது தந்தை ஒரு ஆயில் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். அம்மா நர்சரி பள்ளியை நடத்திவந்தார். தெல்மாவிற்கு ஒரு வயதாக இருந்த போது அவரது குடும்பம் அருபா எனும் தீவுக்கு இடம்பெயர்ந்தது. உலகின் பல இடங்களிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் மட்டுமே வாழ்கின்ற ஒரு தீவு அது. தெல்மாவின் குழந்தைப் பருவம் அருபாவில்தான் கழிந்தது. வெவ்வேறு பழக்க வழக்கங்களையும், கலாச்சாரப் பின்னணியையும் கொண்ட மக்களுக்கு நடுவில் வளர்ந்தார் தெல்மா.

அமெரிக்காவுக்குத் தெல்மா வந்து சேர்ந்தபோது அவருக்கு வயது 15. ஆரம்ப நாட்களில் அமெரிக்காவின் சூழலும், கலாச்சாரமும் அவரை ஒரு வேற்றுகிரகவாசியைப் போல உணர வைத்தது. கல்லூரியில் ரஷ்யமொழியையும், அரசியல் அறிவியலையும் முதன்மை பாடமாக எடுத்துப் படித்தார். படிப்பு முடிந்த வுடன் அமெரிக்காவின் அரசுத் துறையில் ஏதாவது வேலை கிடைக்குமா என்று தேடினார். அரசு வேலை நிமித்தமாக பல தேர்வுகளை எழுதினார். ஒரு தேர்வில் இறுதிச்சுற்று வரைக்கும் சென்றார். ஆனால், அவருக்கு வேலை கிடைக்காமல் போய்விட்டது.

அரசு வேலை வேண்டாம் என்று மீண்டும் படிப்பில் இறங்கினார் தெல்மா. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பழமையான கலை குறித்து படிக்க ஆரம்பித்தார். அப்போது ‘த நியூயார்க் டைம்ஸ்’ எனும் பத்திரிகையில் எடிட்டிங் உதவியாளர் தேவை; முன் அனுபவம் தேவையில்லை என்ற விளம்பரம் வந்தது. அந்த வேலைக்கு விண்ணப்பித்தார் தெல்மா. வேலை கிடைத்தது. அமெரிக்க தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் ஐரோப்பிய கிளாசிக் திரைப்படங்களை எடிட்டிங் செய்பவருக்கு உதவி செய்வது தெல்மாவின் பணி. சினிமாவும், எடிட்டிங் பணியும் தெல்மாவிற்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டது.

சினிமா குறித்து மேலும் தெரிந்து கொள்வதற்காக நியூயார்க் பல்கலைக்கழகத்தில் ஃப்லிம் மேக்கிங் குறித்து ஆறு வார பயிற்சி வகுப்பில் சேர்ந்தார். அப்போது இளைஞரான மார்ட்டின் ஸ்கார்சஸி ‘what’s a nice girl like you doing in a place like this’ என்ற குறும்படத்தை எடுத்திருந்தார். அதை ஒரு மாணவன் தவறாக எடிட் செய்துவிட்டார். அதனால் அந்தக் குறும்படத்தை எடிட் செய்வதற்கான சரியான நபரை மார்ட்டின் தேடிக்கொண்டிந்தார். பேராசிரியர் ஒருவர் மார்ட்டினுக்குத் தெல்மாவை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது ஆரம்பித்த தெல்மா- மார்ட்டினின் பயணம் ஐம்பது வருடங்களாக வெற்றிகரமாகத் தொடர்கிறது. மார்டினின் முதல் படமான, ‘who’s that knocking at my door’-ஐ தெல்மாதான் எடிட் செய்தார். அடுத்து ‘வுட்ஸ்டாக்’ எனும் ஆவணப்படத்தை எடிட் செய்தார். இந்த ஆவணப்படத்தில் தெல்மா பயன்படுத்திய எடிட்டிங் நுணுக்கம் வெகுவாக பாராட்டப்பட்டது. முதல் முறையாகச் சிறந்த எடிட்டிங்குக்கான ஆஸ்கர் விருதின் இறுதிப்பட்டியலில் இடம் பிடித்தார்.

எடிட்டிங்கில் நுழைந்த ஒருசில வருடங்களிலேயே ஆஸ்கர் அளவுக்குப் போனாலும், ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டார் தெல்மா. ஆம்; ‘த மோசன் பிக்சர் எடிட்டர்ஸ் கில்ட்’ எனும் சங்கத்தில் உறுப்பினராகாமல் ஹாலிவுட் படங்களில் வேலை செய்ய முடியாது என்ற சூழல் தெல்மாவுக்கு உண்டாகியது. இந்தச் சங்கத்தில் உறுப்பினராக வேண்டுமானால் ஐந்து வருடம் எடிட்டிங் பயிற்சியாளாராகவும், மூன்று வருடம் எடிட்டிங் உதவியாளாராகவும் பணியாற்றியிருக்க வேண்டும். தெல்மாவோ மார்டினின் குறும்படத்தை எடிட் செய்த அனுபவத்துடன், அவருடைய முழு நீளப் படத்தை எடிட் செய்ய ஆரம்பித்துவிட்டார். அதனால் எழுபதுகளில் தெல்மாவால் ஹாலிவுட்டில் வேலை செய்ய முடியவில்லை. மார்ட்டினின் இயக்கத்தில் 1976- ல் வெளியான புகழ்பெற்ற திரைப்படமான ‘டாக்ஸி டிரைவர்‘ படத்தில் டைட்டிலில் பெயர் இடம்பெறாமல் மறைமுகமாக வேலை செய்தார். எண்பதுகளில் மார்ட்டினின் உதவியால் எடிட்டர் சங்கத்தில் உறுப்பினரானார் தெல்மா. உறுப்பினரான பிறகு முதல் படமே மார்ட்டினின் ‘ரேஜிங் புல்’ தான். இந்தப் படத்துக்காக முதல் முறையாக சிறந்த எடிட்டிங்க்குக்கான ஆஸ்கரை தன்வசமாக்கினார் தெல்மா.வருடங்கள் ஓடின. 1984-ல் புகழ்பெற்ற இயக்குநரான மைக்கேல் பவெலைத் தெல்மாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார் மார்ட்டின். தெல்மாவும், மைக்கேலும் திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதிக்கு குழந்தையில்லை. 1990-ல் மைக்கேல் மரணமடைய, சினிமாவுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் தெல்மா.

கடந்த ஐம்பது வருடங்களில் தொழில்நுட்ப ரீதியாக சினிமாவில் பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. அந்த மாற்றங்களுக்குத் தகுந்த மாதிரி தன்னை தகவமைத்துக்கொண்டு பயணித்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்திருக்க முடியும். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார் தெல்மா. இதுவரை முப்பதுக்கும் மேலான படங்களில் எடிட்டராகப் பணிபுரிந்திருக்கிறார். 3 ஆஸ்கர் விருதுகள் தவிர, நாற்பதுக்கும் மேலான விருதுகளை வென்றிருக்கிறார். இந்த வருடம் மார்ட்டினின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘கில்லர்ஸ் ஆஃப் த ஃபிளவர் மூன்’ படத்தின் எடிட்டரும் தெல்மா தான். இப்படத்தின் எடிட்டிங்குக்காக இன்னொரு ஆஸ்கரை தெல்மா தட்டுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்போது அவரது வயது 83.
– த.சக்திவேல்

You may also like

Leave a Comment

5 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi