இயற்கை விவசாயத்தில் இரட்டிப்பு வருமானம்; புயலிலும் சாயாத ஆத்தூர் கிச்சடி

புயலிலும் சாயாத ஆத்தூர் கிச்சடி

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மேட்டுசக்கரக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். ரயில்வே ஊழியராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர், தனக்கு சொந்தமான 9.5 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்கள், வேர்க்கடலை, ராகி, கம்பு, சோளம், கொள்ளு, நெல், பருப்பு வகைகளைப் பயிரிட்டு வருகிறார். நிலத்தைச் சுற்றி பயிர்களைக் காக்கும் செடி, கொடிகளை நட்டு பராமரித்து வருகிறார். குறிப்பாக ஆடாதொடா, முத்துச்செடி போன்றவற்றை வளர்த்து வருகிறார்.

ஒவ்வொரு பருவநிலைக்கேற்றவாறு பயிர்களை சாகுபடி செய்வதுதான் இவரது ஸ்பெஷல் டெக்னிக். இதன்மூலம் ஒவ்வொரு போகத்திலும் திட்டமிட்டு லாபத்தை அள்ளி வருகிறார். ஒரு மாலைபொழுதில் நிலத்தில் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விஸ்வநாதனைச் சந்தித்து பேசினோம். ‘` நான் கடந்த பல ஆண்டுகளாகவே இயற்கை முறையில் விவசாயம் செய்கிறேன். எந்தவொரு பயிரையும் நடவு செய்வதற்கு முன்பு நாட்டு மாட்டின் சாணம், கோமியம் போன்றவற்றை நிலத்தில் உரமாக இட்டும், பசுந்தாள் உரத்தை நிலத்திலேயே உழுதும் மண்ணிற்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கிடைக்கச் செய்கிறேன்.

இயற்கை முறையில் நாங்கள் பயிரிடும் ஆத்தூர் கிச்சடி, கறுப்பு கவுனி அரிசிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதன்மூலம் நல்ல லாபமும் கிடைக்கிறது. இதில் ஆத்தூர் கிச்சடி நெல்லை நடவு செய்ய நிலத்தை நன்றாக உழுது நாற்றங்கால் தயார் செய்வோம். ஒரு ஏக்கரில் பயிரிட ஒன்றரை சென்ட் நிலத்தில் மேட்டுப்பாத்தி அமைத்து நாற்றங்கால் தயார் செய்வோம். நாங்கள் சேடை ஓட்டுவது கிடையாது. புழுதி ஓட்டி அதில் நாற்றங்கால் அமைப்போம். நாற்றங்காலில் 16 கிலோ விதை நெல்லைத் தூவி, தண்ணீர் தெளிப்போம். பின்பு அதன்மீது வைக்கோலைப் பரப்பி, 7 நாட்கள் வரை தண்ணீர் தெளித்து வருவோம்.

அதன் பிறகு வைக்கோலை எடுத்துவிட்டு நெற் பயிருக்கு தண்ணீர் விட ஆரம்பிப்போம். 21வது நாளில் நடவு செய்யும் பருவத்திற்கு நாற்றுகள் வந்துவிடும். இதில் வேர்கள் நன்றாக முளைத்திருக்கும். அப்போது நாற்றுகளைப் பறித்து, தயார் நிலையில் உள்ள வயலில் நடுவோம். நடும்போது முக்கால் அடிக்கு ஒன்று என்ற இடைவெளியைக் கடைபிடிப்போம். இதில் 20 நாட்களுக்கு ஒருமுறை கோனோவீடர் மூலம் களையெடுப்போம். இதன்மூலம் களை கட்டுப்படுத்தப்படுவதோடு, பயிர்கள் அதிக தூர்கள் வந்து விளைச்சல் நன்றாக இருக்கும்.

பஞ்சகவ்யம் உள்ளிட்ட இயற்கை இடுபொருட்களை நானே தயாரித்து பயிர்களுக்கு தருகிறேன். 25 லிட்டர் கோமியம், 3 லிட்டர் தயிர், 3 லிட்டர் பால், 3 லிட்டர் இளநீர், 1 கிலோ வெல்லம் ஆகியவற்றைக் கலந்து மண்பானையில் ஊற வைப்போம். 15 நாட்களில் அவை பஞ்சகவ்யமாக மாறிவிடும். அதையெடுத்து ஸ்பிரேயர் மூலம் பயிர்களுக்கு தெளிப்போம். பாசன நீரிலும் கலந்து இடுவோம். இதன்மூலம் பயிர்கள் செழித்து வளருகின்றன. தும்பைச் செடி, வேப்பிலை, எருக்க இலை, ஆடாதொடா, செவ்வாழை இலை ஆகிய 5 வகை இலைகளை பானையில் 15 நாள் பசுவின் கோமியத்தில் ஊற வைத்து, வடிகட்டி பயிர்களுக்கு தெளிப்போம். இது இயற்கை பூச்சிவிரட்டியாக செயல்பட்டு பயிர்களைக் காக்கிறது.

இவ்வாறு இயற்கை முறையில் பராமரிப்பு செய்வதன் மூலம் பயிரில் நல்ல விளைச்சல் கிடைக்கும். 6 மாதத்தில் நெற்பயிர் முற்றி அறுவடைக்கு வந்துவிடும். பயிர்கள் நல்ல உயரத்தில் ஆரோக்கியமாக இருக்கும். புயல் காற்று அடித்தால் கூட சாயாது. கடந்த முறை புயல் வந்தபோது எனது வயலில் இருந்த ஆத்தூர் கிச்சடி சாயவே இல்லை. சுற்றியிருந்த வயல்கள் எல்லாம் கடும் சேதம் அடைந்தது. எனது வயலில் ஒன்றும் ஆகவில்லை. இதை அனைவரும் ஆச்சரியமாக பார்த்து சென்றார்கள்.

அறுவடை செய்த நெல்லை ஆலைகளுக்கு எடுத்துச் சென்று அரைத்து அரிசியாக்கி விற்பனை செய்கிறேன். ஒரு ஏக்கரில் சுமார் இரண்டரை டன் நெல் மகசூலாக கிடைக்கும். அதை அரைத்தால் 1200 கிலோ அரிசி கிடைக்கும். அரிசியை ஒரு கிலோ விதமாக பாக்கெட்டுகளாக தயார் செய்து கிலோ ரூ.110க்கு விற்பனை செய்கிறேன். இதன்மூலம் ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. இதில் ரூ.25 ஆயிரம் செலவாகும். அதுபோக ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது.

இதே சாகுபடி முறையில் கறுப்பு கவுனியையும் பயிர் செய்கிறேன். இதை ஒருமுறை பயிர் செய்து, அறுவடை செய்த பின்னர் மீண்டும் கட்டைக்கால் (மறுதாம்பு) மூலம் மறுமுறை விவசாயம் செய்து மகசூல் பார்க்கிறேன். இதனால் இரட்டிப்பு லாபம் கிடைக்கிறது. ஆத்தூர் கிச்சடியை விட கறுப்பு கவுனி அரிசிக்கு கூடுதல் விலை கிடைக்கும். இதில் 2.25 டன் நெல் மகசூலாக கிடைக்கும். அதை அரைத்தால் 1200 கிலோ அரிசி கிடைக்கும். இதை ஒரு கிலோ ரூ.170 என விற்பனை செய்கிறேன். இதுபோன்ற அரிசி வகைகளை உழவர் சந்தையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள். 1200 கிலோ அரிசி மூலம் ரூ.2 லட்சத்து 4 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. இதில் 25 ஆயிரம் செலவு போக லாபமாக ரூ.1 லட்சத்து 79 ஆயிரம் கிடைக்கிறது.

தற்போது 5 ஏக்கரில் வேர்க்கடலை பயிரிட்டுள்ளேன். இதனை 120 நாட்களில் அறுவடை செய்கிறோம். கிட்டதட்ட 2000 ஆயிரம் கிலோ மகசூல் கிடைக்கும். சந்தையில் வேர்க்கடலை ரூ.100 என விற்பனை செய்கிறோம். இதில் வருமானமாக ரூ.2 லட்சம் கிடைக்கிறது. இதில் செலவுரூ.50 ஆயிரம் போக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது. இயற்கை முறையில் விளைந்த வேர்க்கடலை என்பதால் பொதுமக்களே எங்களிடம் நேரடியாக வாங்கிச் செல்கிறார்கள். இதில் மீதி இருப்பதைத்தான் சந்தையில் விற்பனை செய்கிறேன்.

வேர்க்கடலையில் ஊடுபயிராக துவரை, கொள்ளு போன்றவற்றை பயிர் செய்திருக்கிறேன். துவரையில் 150 கிலோ மகசூல் கிடைக்கும். ஊடுபயிர் என்பதால் ரூ.16,500 லாபமாக கிடைக்கிறது. கொள்ளில் அரை டன் மகசூலாக கிடைக்கிறது. இதுவும் ஊடுபயிர் என்பதால் எந்தவொரு மெனக்கெடலும் இருக்காது. சந்தையில் கிலோ ரூ.70 வரை விற்பனை செய்கிறேன். இதனால் ரூ.35 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது. இதுதவிர தலா ஒரு ஏக்கரில் கம்பு, கேழ்வரகு, உளுந்து பயிரிட்டு இருக்கிறேன்.

முழுக்க முழுக்க இயற்கை முறையில் விளைவிப்பதால் வேளாண் அதிகாரிகள் என்னை வெகுவாக பாராட்டுகிறார்கள். விளைபொருட்களை விற்பனை செய்யவும் உறுதுணையாக இருக்கிறார்கள். மக்களும் ஆர்வமாக வாங்கிச்செல்கிறார்கள். இதனால் இயற்கை விவசாயம் இனிக்கும் விவசாயமாக இருக்கிறது’’ என மகிழ்ச்சியுடன் பேசி முடித்தார்.

தொடர்புக்கு:

விஸ்வநாதன்: 94893 41499

பயிர் மகசூல் (கிலோ) 1 கிலோ விலை (ரூ) வருமானம் (ரூ) செலவு (ரூ) லாபம் (ரூ)
கறுப்பு கவுனி அரிசி (1 ஏக்கர்) 1200 170 204000 25000 179000
ஆத்தூர் கிச்சடி சம்பா (1 ஏக்கர்) 1200 110 132000 25000 107000
வேர்க்கடலை
(5 ஏக்கர்) 2000 100 200000 50000 150000
கொள்ளு 500 70 35000 – 35000
துவரம்பருப்பு 150 110 16500 – 16500
கம்பு 1250 40 50000 15000 35000
உளுந்து 400 100 40000 15000 25000
பச்சைப்பயறு 400 100 40000 15000 25000
ஆமணக்கு 100 80 8000 – 8000
கேழ்வரகு 1500 40 60000 15000 45000
மொத்தம் 785500 160000 625500

நிலத்தைச் சுற்றி மூலிகைச் செடிகள்

விஸ்வநாதன் தனது நிலத்தைச் சுற்றி பல்வேறு மூலிகைச்செடிகளை வளர்த்து பராமரித்து வருகிறார். இதில் முடக்கத்தான், நாகமல்லி, மின்ட் துளசி, ஆடு தின்னா பாலை, துளசி உள்ளிட்ட பல்வேறு செடிகள் உள்ளன. இவற்றை தேவையுள்ளவர்கள் பறித்து சென்று வைத்தியத்திற்கு பயன்படுத்துகிறார்கள். இந்த செடிகளை கால்நடைகள் மேய்வதால், அவற்றுக்கு நல்ல தீவனம் கிடைப்பதுடன், சினை பிடிப்பு உள்ளிட்ட வேறு சில நன்மைகளும் கிடைக்கின்றன.

Related posts

கேரளாவுக்கு தோள் கொடுக்கும் கர்நாடகா.. அரசு சார்பில் 100 வீடுகள் கட்டித்தரப்படும்: முதலமைச்சர் சித்தராமையா உறுதி..!!

சாக்லேட் கொடுப்பதாக அழைத்து; 4ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்:ஹெச்எம் அதிரடி கைது

குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பா?: ஐகோர்ட்