அதிரடி லாபம் தரும் ஆர்கானிக் பாக்கு!

இயற்கை விவசாயம் என்பது பல வகைகளில் நன்மை தருவது. இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருள் சத்தானதாக, ஆரோக்கியமானதாக இருக்கும் என்பது 100 சதவீதம் உண்மை. அதேபோல இந்த முறையில் விவசாயம் செய்யும்போது நமது நிலம் மிகுந்த சத்துள்ள நிலமாக மாறுகிறது. இதனால் கண்ட கண்ட இடுபொருட்களைக் கொட்டத் தேவையில்லை. பயிர்களுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைவாக கிடைக்கிறது. இந்த நிலத்தைப் பார்த்தாலே உங்களுக்கு நன்றாக தெரியும்’’ என பேசத்தொடங்கினார் சந்திரசேகர். கோயம்புத்தூர் வேடப்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகர் தனது 4.5 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்கிறார். இதில் 4 ஏக்கரில் பாக்கு சாகுபடி செய்கிறார். அரை ஏக்கரில் செவ்வாழை பயிரிடுகிறார். ஆரம்பத்தில் கொஞ்சம் செயற்கை உரங்களைப் பயன்படுத்தி இருக்கிறார். கடந்த 7 ஆண்டுகளாக முழுக்க முழுக்க ஆர்கானிக். இதனால் அவரது நிலத்தில் உள்ள மண் செழிப்பாக மாறி இருக்கிறது. எங்கு பார்த்தாலும் மண்புழுக்கள் நிறைந்திருக்கின்றன. இந்த நிலத்தில் வளரும் பாக்கு மரங்கள் வானளாவி உயர்ந்திருக்கின்றன. தற்போது அவற்றில் இந்த சீசனுக்கான விளைச்சல் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. நிலத்தைச் சுற்றிக் காண்பித்தவாறே தனது விவசாய அனுபவம் குறித்து சந்திரசேகர் எங்களிடம் பகிர்ந்துகொண்டார்.

“நான் 15 வருடங்களுக்கு முன்பு மூன்றரை ஏக்கரில் பாக்கு சாகுபடியைத் தொடங்கினேன். நான் பயிர் செய்திருப்பது மொகித் நகர் ரகம். சாகுபடிக்கு முன்பு நிலத்தை நன்றாக தயார் செய்ய வேண்டும். அதற்கு சணப்பை, தக்கைப்பூண்டு போன்ற தழைச்சத்து மிக்க பயிர்களை வளர்த்து மடக்கி உழுதேன். இதன்மூலம் மண்ணுக்கு நல்ல தழைச்சத்து கிடைத்தது. இதையடுத்து 5 கலப்பை கொண்டு மேலும் 3 முறை உழவு செய்தேன். கடைசி உழவின்போது 3.5 ஏக்கருக்கு 30 டிராக்டர் மாட்டு எரு தெளித்தேன். அதன்பிறகு வரிசைக்கு வரிசை, செடிக்கு செடி என இரண்டுக்கும் 8 அடி இடைவெளி கொடுத்தேன். அதில் 1×1×1 என்ற அளவுகளில் குழியெடுத்து விதை (பாக்குக் கொட்டைகள்) ஊன்றினேன். விதைகளை நல்ல தரமான மரத்தில் இருந்து அதிகம் காய்க்கும் குலையில் இருந்து தேர்ந்தெடுப்போம். அந்த விதைகளை தண்ணீரில் ஊறவைத்து சணல் சாக்கில் கட்டி வைத்திருப்போம். இவ்வாறு செய்யும்போது விதைகளுக்கு நல்ல முளைப்புத்திறன் கிடைக்கும்.

நடவுக்குழியில் மேல்மண்ணையும், மாட்டு எருவையும் கலந்து கால் அடி அளவுக்கு நிரப்புவோம். அதன்பிறகு விதையை ஊன்றி கால் அடி அளவுக்கு மண் நிரப்புவோம். மீதி அரை அடியை அப்படியே விட்டுவிடுவோம். இதில் பாக்கு நடவுக்கு குழிகளுக்கு இடையே ஊடுபயிராக பூவன் வாழையை சாகுபடி செய்தோம். வாழை நடவு செய்யும்போது நமது கால் தெரியாமல் பாக்கு குருத்துகள் மீது பட்டு விட வாய்ப்பு உண்டு. அப்படி பட்டால் செடிகள் ஒடிந்து சேதமாகிவிடும். இதற்காக குழியை முழுவதுமாக மூடாமல் பள்ளமாக விடுகிறோம். 3 மாதத்தில் பாக்கு குருத்துவிட ஆரம்பிக்கும். அதில் 2 இலை, 3 இலை வரும் வரை பராமரிப்பு தேவைப்படாது. வாழைக்கு 4வது மாதத்தில் மண் அணைப்போம். பின்பு வேப்பம்புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து செடிக்கு முக்கால் கிலோ என்ற அளவில் கொடுப்போம். 7வது மாதத்தில் அதேபோல 2 புண்ணாக்குகளையும் கலந்து இடுவோம். 12 வது மாதத்தில் வாழையில் காய் வெட்டுவோம். அப்போது குலைகளை மட்டும்தான் வெட்டுவோம். சருகுகளை அகற்றிவிட்டு மரத்தை அப்படியே விட்டுவிடுவோம். மரம் காய்ந்து விழுந்து நிலத்திற்கு நல்ல உரமாகும். சருகுகளையும் வெளியே கொண்டு செல்லாமல் உரமாக்கி விடுவோம். பக்கக்கன்றுகளில் இருந்து இலை பறித்து விற்பனை செய்வோம். ஏக்கருக்கு 800 மரம் வைப்போம். அதில் கழிவுகள் போக 700 குலைகள் கிடைக்கும். அதன்மூலம் ஒரு கணிசமான வருமானம் கிடைக்கும்.

ஒன்றரை வருடத்தில் பாக்குமரங்களுக்கு மைக்ரோ நியூட்ரியன்ஸ் கொடுப்போம். கார்த்திகை மாதங்களில் பெருமழை முடிந்து ஆட்டு எரு போடுவோம். மரத்தைச் சுற்றி 1 அடி தள்ளி வட்ட வடிவில் குழி பறித்து கீழே மைக்ரோ நியூட்ரியன்சும், மேலே ஆட்டுரமும் போடுவோம். 2 வருடங்களில் பாக்கு மரம் 7, 8 அடி உயரம் வரை வளர்ந்துவிடும். 3வது வருடத்தில் வாழை மரங்களை அகற்றி உழவு செய்வோம். அதன்பிறகு பாக்கு மரம் நன்றாக வளரும். வருடத்திற்கு ஒருமுறை மாட்டு எரு வைப்போம். 4வது வருடத்தில் பாக்கு மரங்களில் காய்ப்பு காய்க்க ஆரம்பிக்கும். காய்ப்பு ஆரம்பித்த பிறகு கருவாடு வேஸ்ட், ஆட்டு எரு, மாட்டு எரு ஆகியவற்றை மாற்றி மாற்றிக் கொடுப்போம். 5வது வருடத்தில் பாக்குக் குலைகளை அறுவடை செய்ய ஆரம்பிப்போம். அப்போது வெயில் அதிகம் இருந்தால் பிஞ்சுகள் கொட்டிவிடும். மிதமான வெயில் நிலவினால் காய்ப்பு நன்றாக இருக்கும். இந்த சமயத்தில் செய்யப்படும் முதல் அறுவடையில் ஏக்கருக்கு 3ல் இருந்து 4 டன் வரை மகசூல் கிடைக்கும். அப்போது கிலோ ரூ.10 என விற்பனை செய்தேன். 6, 7 வருடங்களில் 10 டன் மகசூல் கிடைக்கும். வருடத்திற்கு 5 முறை அறுவடை செய்யலாம். குறைந்தது 4 முறை அறுவடை எடுக்கலாம்.

தற்போது 14வது ஆண்டாக மகசூல் எடுக்கிறேன். இப்போது ஏக்கருக்கு 16-17 டன் மகசூல் கிடைக்கிறது. சராசரியாக 15 டன் மகசூல் கிடைக்கிறது.ஒரு கிலோவுக்கு ரூ.50 வரை விலை கிடைக்கிறது. சராசரியாக ரூ.40 கிடைக்கிறது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வருமானமாக கிடைக்கிறது. இதில் உரம், அறுவடை உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.2 லட்சம் வரை செலவாகும். அதுபோக ஏக்கருக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் லாபம் பார்க்கலாம். ஆரம்பத்தில் நிலம் தயாரிப்பு மற்றும் மேற்கண்ட செலவுகளுக்கான தொகையை ஊடுபயிராக செய்யப்படும் வாழை ஈடுகட்டி விடும். இப்போது கிடைக்கும் லாபம் நல்ல லாபமாக இருக்கிறது’’ என்று கூறும் சந்திரசேகரன், பாக்கு மரத்தில் இருந்து கிடைக்கும் மட்டைகளைக் கொண்டு பாக்குத் தட்டு தயாரிக்கிறார். இதற்காக பிரத்யேக இயந்திரங்களை வாங்கி வைத்து தட்டு தயாரிப்பில் ஈடுபடுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ பாக்கு சாகுபடி செய்யும் பல விவசாயிகள் மட்டைகளை பிறருக்கு கொடுப்பார்கள். நான் அதை நேரடியாக பாக்கு தயாரிக்க பயன்படுத்துகிறேன். மழைக்காலங்களில் கீழே விழும் பழுத்த மட்டைகளைப் பயன்படுத்த முடியாது. வெயில் காலங்களில் நல்ல தரமான மட்டைகள் கிடைக்கும். அவற்றை எடுத்து பல்வேறு அளவுகளில் தட்டு தயாரிக்கிறோம். ஏக்கருக்கு 100 மட்டைக்கு மேல் கிடைக்கும். இதைக் கொண்டு தட்டுகள் தயாரித்து ஏக்கருக்கு 1 லட்சம் வரை வருமானம் பார்க்கிறோம்’’ என்கிறார்.
தொடர்புக்கு: சந்திரசேகர் – 99441 46602

* பாக்கு வாங்கும் வியாபாரிகள் ஆர்கானிக் பாக்கு என்றால் தனி விலை கொடுத்து வாங்குவதில்லை. ஆனால் ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்படுவதால் விளைச்சல் நன்றாக இருக்கிறது. இதனால் மரங்கள் செழிப்பாக வளர்ந்து குலைகளும் திரட்சியாக வளர்கின்றன.

* ஆண்டுதோறும் ஏக்கருக்கு ரூ.4 லட்சம் சுளையாக லாபம் கிடைக்கிறது. பாக்குமட்டைத் தட்டு தயாரிப்பு மூலம் கூடுதலாக ரூ.1 லட்சம் லாபம் கிடைக்கிறது. இதன்மூலம் ஆண்டுக்கு ஒரு ஏக்கரில் இருந்து 5 லட்சம் லாபம் பார்க்கிறார் சந்திரசேகர்.

* கொட்டைப் பாக்கு, கொழுந்துவெத்தலை நல்ல ரைமிங்கான காம்பினேசன். நம் முந்தைய தலைமுறை பயன்படுத்தியது போல இப்போது இந்த காம்பினேசனை அதிகம் பயன்படுத்துவதில்லை. ஆனாலும் நம் வீட்டு சுப நிகழ்ச்சிகளை இந்தக் காம்பினேசன்தான் அமர்க்களமாக ஆரம்பித்து வைக்கிறது.

Related posts

கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு ரூ818 கோடிக்கு மது விற்பனை: கடந்த வருடத்தை விட அதிகம்

கர்நாடகாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜ எம்எல்ஏ மீது பாலியல் வழக்கு

முத்திரை பதிக்கும் முத்தான திட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை