மணிப்பூர் வன்முறை தொடர்பாக ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மணிப்பூர் வன்முறை தொடர்பாக ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினரை பழங்குடியின பிரிவில் சேர்ப்பதற்கு ஆதரவாக கடந்த ஏப்ரலில், ஐகோர்ட் உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது. எனினும் இதற்கு குகி பழங்குடி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து, தங்களை பழங்குடியின பிரிவில் சேர்க்க கோரி மே மாத தொடக்கத்தில் அவர்கள் பேரணியாக சென்றனர். இதற்கு எதிராக குகி பழங்குடியினரும் பேரணி நடத்தினர். இதில், இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது வன்முறையாக வெடித்தது. இதில், 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கலவரக்காரர்களை அடக்க ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் கூடுதலாக குவிக்கப்பட்டன. இந்நிலையில், மணிப்பூர் பழங்குடியின அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘குகி பழங்குடியினரை இந்திய ராணுவம் பாதுகாக்க வேண்டும்’ என்று கோரினர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மணிப்பூர் மாநிலத்தில் நிலைமை மெல்ல சீராகி வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நிலைமையை முழுவதும் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினருடன் மணிப்பூர் ரைபிள் படையினர், சிஏபிஎஃப், 114 ராணுவ வீரர்கள் மற்றும் கமாண்டோக்கள் உள்ளதாகவும் ஒன்றிய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தற்போதைய நிலவரம் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அறிக்கையின் அடிப்படையில் தான் வழக்கின் விசாரணையை நடத்த முடியும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்