தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு: மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியில்லை?

சென்னை : மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுவதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிபத்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து செய்தி வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான பங்கீடு முடிந்தது. மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. புதிய நீதிக் கட்சி, ஐ.ஜே.கே., இ.ம.க.மு.க., தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாமகவுக்கு 10 தொகுதிகளும் அமமுகவுக்கு 2 தொகுதிகளும் பாஜக ஒதுக்கியுள்ளது.

ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எந்தெந்த தொகுதிகள் போட்டியிடுவது என்பது குறித்து ஜி.கே.வாசன் அறிவிப்பார். கூட்டணிக் கட்சிகள் 4 தொகுதிகளில் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறது. தொகுதிப் பங்கீடு விவரங்களை டெல்லியில் இருந்து கட்சித் தலைமை அறிவிக்கும். இன்று மாலை பாஜக வேட்பாளர்கள் பட்டியலை எதிர்பார்க்கலாம். ஓ.பன்னீர்செல்வம் அவரது முடிவை அறிவிப்பார்,” இவ்வாறு தெரிவித்தார்.

ஓபிஎஸ் அணி போட்டியில்லை?

பாஜக கூட்டணியில் 39 தொகுதிகளும் இறுதி செய்யப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளதால், மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியிடுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து ஓபிஎஸ் விரைவில் முடிவை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாஜக நெருக்கடியால் தவிக்கும் ஓபிஎஸ்!

மக்களவை தேர்தலில் தாமரைச் சின்னத்தில் போட்டியிடும்படி பாஜக நெருக்கடி கொடுப்பதாலும், தேனி, தஞ்சை, ராமநாதபுரம் தொகுதிகளை வழங்க பாஜக மறுப்பதாலும் முடிவெடுக்க முடியாமல் ஓ.பன்னீர்செல்வம் தவிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கூட்டணியில் 1 தொகுதி மட்டுமே பெற்றுக் கொள்வதற்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு