எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில் வன பாதுகாப்பு திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்: ஜனாதிபதி ஒப்புதலுடன் விரைவில் சட்டமாகிறது

புதுடெல்லி: காடுகளை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்கான சட்ட திருத்தம் என எதிர்க்கட்சிகளால் எதிர்க்கப்பட்ட வன பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்காததை கண்டித்து நாடாளுமன்றத்தில் நேற்றும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அதனை ஏற்க மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மறுத்தார். இதனால் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் கூட்டாக வெளியேறினர்.

எதிர்க்கட்சிகள் அவையில் இல்லாத நிலையில், பிற்பகலுக்குப் பின் சர்ச்சைக்குரிய வன பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பால் எந்த எதிர்ப்பும் இன்றி இந்த மசோதாவை ஒன்றிய அரசு நேற்று நிறைவேற்றியது. மாநிலங்களவையிலும் பெரிய அளவில் விவாதம் எதுவும் நடத்தப்படவில்லை. இதன் மூலம் ஜனாதிபதி ஒப்புதலுடன் வன பாதுகாப்பு திருத்த விதிகள் விரைவில் சட்டமாக்கப்படும். இந்த சட்ட திருத்தத்தின் மூலம் வனப் பகுதிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படும் என பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 1980ம் ஆண்டு வன பாதுகாப்பு சட்டத்தின்படி வன நிலப்பகுதிகளை காடுகள் இல்லாத நோக்கத்திற்காக பயன்படுத்த முடியாது.

ஆனால் தற்போது தேச முக்கியத்துவம் வாய்ந்த சாலை, ரயில் திட்டங்களுக்கு வனப்பகுதியை பயன்படுத்தலாம் என சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது நாட்டின் காடுகளை மேலும் சுருக்கி, பல்லுயிர்களை அழிக்கும் என வன பாதுகாவலர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட விதத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதே போல, லித்தியம் உள்ளிட்ட கனிமங்களை தனியார் துறை எடுக்க அனுமதிக்கும் சுரங்கங்கள், கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை திருத்த மசோதாவும் மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மணிப்பூர் விவகாரம் காரணமாக மக்களவை நேற்று நாள் முழுவதும் முடங்கியது.

* அவைக்கு வருமாறு பிரதமருக்கு உத்தரவிட முடியாது
மாநிலங்களவையில் நேற்று அமளியின் போது, பிரதமர் மோடி அவைக்கு வருவதை புறக்கணிப்பதை சுட்டிக் காட்டிய எதிர்க்கட்சிகள், பிரதமரை அவைக்கு வருமாறு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தின. இதற்கு பதிலளித்த மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், ‘‘அப்படி ஒரு உத்தரவு பிறப்பித்தால் அது எனது சத்தியப் பிரமாணத்தை மீறியதாகும். அதை ஒருபோதும் செய்ய மாட்டேன். எல்லோரையும் போல பிரதமரும் அவைக்கு வருவது அவரது விருப்பம். அதற்கு நான் உத்தரவிட முடியாது’’ என்றார்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

ஜூலை-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

முதல் டி20ல் தென் ஆப்ரிக்கா வெற்றி