10 ஆண்டுகளாக பேசவிடாமல் தடுத்தனர் எதிர்கட்சிகள் வலுவாக இருப்பதால் பாஜவுக்கு நெருக்கடி தருவோம்: திருமாவளவன் எம்.பி. பேட்டி

சென்னை: பாஜ அரசு எதிர்கட்சிகளை பேசவிடாமல் தடுப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. இப்போது எதிர்க்கட்சிகள் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, வலுவான நிலையில் இருப்பதால் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி தரக்கூடிய அளவில் எங்கள் செயல்பாடுகள் இருக்கும் என திருமாவளவன் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்பியுமான திருமாவளவன் நேற்று காலை விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஒன்றிய அரசு, புதிய குற்றவியல் சட்டத்தை இன்று அமல்படுத்தி உள்ளது. இந்த சட்டங்களால் நீதிமன்ற நிர்வாகத்தில் கடுமையான குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மக்களும் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளன. இதை உணர்ந்து, ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசு இதில் திருத்தம் கொண்டு வர உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

பாஜ ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்திலிருந்தே, கடந்த பத்தாண்டு காலமாக, எதிர்க்கட்சியினரை பேச விடாமல் இருப்பது, அவர்களின் வாடிக்கையாக இருந்து வருகிறது. இப்போதும் அது தொடர்கிறது. இருந்தாலும் கடந்த காலங்களில் இருந்ததைபோல் இல்லாமல், எதிர்க்கட்சியினர் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், வலுவான எதிர்க்கட்சிகளாக, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் இயங்குவோம். ஆளும் கட்சிக்கு நெருக்கடியை தரக்கூடிய அளவிற்கு எங்கள் செயல்பாடுகள் அமையும்.

இலங்கையில் மூத்த தலைவர் ரா.சம்பந்தன் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் இயக்கத்தினருக்கு, ஈழ தமிழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். ராமேஸ்வரம் பகுதியில் 27 மீனவர்கள், சிங்கள படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்கதையாக நீடிக்கிறது. ஒன்றிய அரசு இதில் உடனடியாக தலையிட வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்